திங்கள், 27 பிப்ரவரி, 2023

'காதல் வெறி’யும் அதைத் தணிப்பதற்கான வழிமுறைகளும்!!!

வர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒரே பெண்ணைக் காதலித்ததால் இருவரும் பகைவர்கள் ஆனார்கள்.

இவர்களில் ஒருவன் அந்த ஒருத்திக்காக, பழைய நண்பனும் புதிய எதிரியுமான இன்னொருவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தான்.

திட்டமிட்டபடி, தேர்வு செய்த இடத்திற்கு அவனை[பழைய நண்பன்] அழைத்துச்சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தான்.

பழிவாங்கும் வெறி அடங்கவில்லை.

அவனின் விரல்களை வெட்டினான்; தலையைத் துண்டித்தான். அந்த முன்னாள் பிரிய நண்பனின் ‘பிறப்புறுப்பை[penis]’ அறுத்தெடுத்தான். மார்பைப் பிளந்து இருதயத்தையும் வெளியே எடுத்தான்.

இவற்றை ஒன்றாகச் சேர்த்துவைத்துப் படம் பிடித்துக் ‘காணொலி’யாக்கி, யாருக்காக இந்தக் கொடூரச் கொலையைச் செய்தானோ அந்த காதல் தேவதைக்கு அனுப்பினான்.

இவன் காமுகனா என்றால், அல்லவே அல்ல; ‘காதல் போதை’யில் சிக்கித் தன் எதிர்காலத்தைச் சீரழித்துக்கொண்ட ‘காதல் கிறுக்கன்’.

இந்தக் கிறுக்கனைக் காவல்துறை கைது செய்துள்ளது. இவனுக்குக் கிடைக்கவிருக்கும் தண்டனை என்ன என்பது பின்னர் தெரியும்[விரிவான செய்திக்கு,  https://tamil.oneindia.com/news/hyderabad/heartbreaking-incident-and-why-did-22-year-old-youngman-kill-his-friend-in-telangana-500625.html  என்னும் முகவரிக்குச் செல்க].

இந்த அளவுக்கு இல்லையென்றாலும், காதல் தோல்விகளாலும், மோதல்களாலும் நிகழ்த்தப்படும் கொடுங் குற்றச் செயல்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடுகின்றன.

கல்வி கற்கும் பருவத்திலேயே, இளைஞர்கள் காதல் போதைக்கு உள்ளாவதை அல்லது போதை ஊட்டப்படுவதைத் தடுப்பதற்கான வழிகளை அரசு கண்டறிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இவ்வகைக் குற்றங்கள் குறையும்.

எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் வழங்கும் கொஞ்சம் ஆலோசனைகள்[சுருக்கமாக. குழு அமைத்து விரிவாக ஆராய்வது அரசின் கடமை]:

*மனித உடம்பு எத்தனை அசிங்கமானது என்பதை விவரிக்கும் சித்தர் பாடல் வரிகளை[’சலமும் சீயும் சரியும் ஒருவழி; உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம்; முடிவில் சுட்டெலும் பாகும்’ என்பன போல. இவை அதீத விரசம் இல்லாதவை; இருபாலருக்கும் பொதுவானவை]யும், யாக்கை நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசும் அரிய பாடல் வரிகளையும் கட்டுரையாக்கிப் பாட நூலில் சேர்ப்பது நல்ல பயன் விளைவிக்கும்.

*காதல் போதையால் கெட்டழிந்த பிரபலங்களைப் பற்றியும், காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்கள் & கொலை செய்யப்பட்டவர்கள் பற்றியும் விவரிக்கும் ஒரு கட்டுரையும் நூலில் இடம்பெறலாம்.

*பாலியல் கல்வி கற்பித்தல் மிக மிக அவசியம். உண்மையான பாலியல் கல்வி, ‘காதல் எத்தனைப் பொய்யானது’ என்பதை உணரவைக்கும்.

*திரைப்படங்களில் காதலர் நடத்தும் ஆபாசக் கூத்துகளுக்குத் தடை விதிக்கலாம்.

*காதல் போதையூட்டும் கவிதைகளுக்கும் கதைகளுக்கும்கூடத் தடை தேவை[நன்கு யோசித்துச் செயல்பட்டால் இது சாத்தியமே].

*காதல் தொடர்பான குற்றங்கள் புரிவோருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் தேவை.

***ஆய்வறிஞர்கள், குழு சேர்ந்து சிந்திக்கும்போது, மேலும் சிறப்பான வழிமுறைகள் தென்படக்கூடும்.

* * * * *

ஒரு கதை:

“உன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்னு போன மாசம் சொன்னே. மாப்பிள்ளை பார்த்துட்டியா?” என்றார் சிவராமன், தன் நண்பர் சதாசிவத்திடம்.

“தேடிட்டிருக்கேன். உனக்குத் தெரிஞ்ச பையன் இருந்தா சொல்லு.”

“ஒருத்தன் இருக்கான். அவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர். அவனுடய அப்பா தனியார் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மாவும் பட்டதாரிதான்; வேலைக்குப் போகல. கவுரவமான குடும்பம்…”

குறுக்கிட்ட சதாசிவம், “பையனுடைய பழக்கவழக்கங்கள் பத்திச் சொல்லு” என்றார்.

“பையனுக்குக் கெட்ட பழக்கமெல்லாம் இல்ல; கவிதையில், குறிப்பா காதல் கவிதைகள் எழுதுறதில் ஈடுபாடு அதிகம். முப்பது வயசுக்குள்ள மூனு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கான். எல்லாமே காதல் சம்பந்தப்பட்டதுதான். இவனுடைய கவிதைகள் குங்குமம், ராணி, விகடன், குமுதம்னு அத்தனை முன்னணிப் பத்திரிகைகளிலும் வந்திருக்கு. ஒரு பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் தன்னோட புதுப் படத்துக்குக் கவிதை எழுத இவனை ஒப்பந்தம் பண்ணி…..”

மீண்டும் இடைமறித்த சதாசிவம், “இந்த மாப்பிள்ளை வேண்டாம்” என்றார்.

“என்னப்பா சொல்லுறே?”

“இந்தக் காதல் கவிதை எழுதுற பைத்தியங்களுக்கு அது விசயத்தில் பெண்டாட்டியைத் திருப்திபடுத்திச் சந்தோசமா வைத்துக்கொள்ளத் தெரியாது. எந்நேரமும் கனவிலும் கற்பனையிலும் மிதக்கறவனுக இவனுக. காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடியறதுக்கு இந்தக் கவிதைப் போதையும் ஒரு முக்கியக் காரணமா இருக்கு. என்ன சொல்லுறே?”

“நீ அது விசயத்தில் பெரிய கில்லாடி. ஒன்னுக்கு மூனு கல்யாணம் பண்ணிட்டு மூனு பேரோடவும் சந்தோசமா குடும்பம் நடத்துறவன் நீ. நீ சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.” -அலைபேசியின் தொடர்பைத் துண்டித்தார் சிவராமன். 

***நண்பரொருவரின் காதல் கவிஞர்கள்’ பற்றிய ’கருத்து’ கதையாக்கப்பட்டுள்ளது. நண்பரின் கருத்து மிகைப்படுத்தப்பட்டது போல் தோன்றினாலும் உண்மைக்குப் புறம்பானதல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

========================================================================