மகாராஷ்டிராவின் அன்வா கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில், 7.30 மணியளவில் ‘குர்ஆன்’ படித்துக்கொண்டிருந்தார் ‘இமாம்’.
அப்போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் முகத்தில் துணியுடன் மசூதிக்குள் நுழைந்து, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுமாறு அவரை மிரட்டினார்கள்.
இமாம் மறுத்ததால், அவர்கள் மசூதிக்கு வெளியே அவரை இழுத்துச்சென்று தாக்கியதோடு, ரசாயனம் கலந்த துணியைப் பயன்படுத்தி அவரை மயக்கமடையச் செய்தனர்.
இரவு 8 மணியளவில் தொழுகைக்காக மசூதிக்கு வந்தவர்கள், இமாம் மயங்கிய நிலையில் வெளியே கிடப்பதைக் கண்டனர். அவர்கள் அவரைச் ‘சில்லோட்’ அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு(ஜிஎம்சிஎச்) மாற்றப்பட்டார், அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.
காவல்துறை, வழக்கம்போல வழக்குப் பதிவு செய்தல் என்னும் கடமையை நிறைவேற்றியுள்ளது[‘இந்தியா டுடே’ செய்தி].
* * * * *
இந்தியாவின் வேறு வேறு மாநிலங்களிலும் நடந்தது/நடப்பதுதான் இந்த அதிர்ச்சிச் சம்பவம். இப்போது மகாராஷ்ட்ராவில் நடந்திருக்கிறது.
அனைத்து மாநிலங்களிலும் நடபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அங்கெல்லாம் உள்ள முஸ்லீம்களை மிரட்டி, ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லக் கற்றுக்கொடுத்த பிறகு, முஸ்லீம் அல்ல என்றாலும், தங்களும் இந்துமதத்தவரே என்று சொல்ல மறுப்பவர்களையும் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வைக்கும் படலம் வெகு விரைவில் தொடங்கும் என்பது உறுதி.
இந்து மதத்தவர் அல்லாத, அல்லது எம்மதமும் சாராத நம்மைப் போன்றவர்களால், வலிமை வாய்ந்த பின்புலம் கொண்ட அவர்களை எதிர்த்துச் செயல்படுவதென்பது சாத்தியமே இல்லை.
போராடினாலும் வெற்றி பெறுவதென்பது கானல்நீர்தான்.
எனவேதான்.....
எப்போது வேண்டுமானாலும் அந்த வெறிக் கும்பலின் வருகை இங்கும் நிகழலாம் என்பதால், இப்போதிருந்தே நாம் அனைவரும் “ஜெய் ஸ்ரீராம்” சொல்லிச் சொல்லி நமக்கு நாமே பழக்கப்படுத்துதல் மிக நல்லது என்பது நம் எண்ணம்!
“ஜெய் ஸ்ரீராம்!!!”