உடலுறவு வேட்கை என்பது இயற்கையானது.
இது ஆண், பெண் என்னும் இருபாலினத்தவருக்கும் பொதுவானது.
வேட்கையைத் தணித்திடவே இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். இதன் மூலம் இருவருமே இன்பம்[அளவு வேறுபடக்கூடும்] பெறுகிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால்.....
இங்கே முகிழ்க்கும் ஒரு முரண்பாடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சிறிது சிந்தித்தாலே அந்த முரண்பாடு என்னவென்று புரியும்.
ஆணைப் பொருத்தவரை, பெண்ணுடன் இணைவது இந்தச் சுகானுபவத்திற்காக மட்டுமே.
பெண்ணின் நிலை இதுவல்ல.
அவன் மூலம் இவள் சிலவோ பலவோ பிள்ளைகளைப் பெற்ற பிறகு அவனால் கைவிடப்பட்டால், வயிற்றுப்பாட்டுக்காக இதைச் செய்வதும் நிகழ்கிறது[ஆடம்பர வாழ்வின் மீதான மோகம் காரணமாகப் பிற ஆடவருடன் உறவு கொள்கிற பெண்களும் உளர். இது விதிவிலக்கானது].
பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பெண்கள் கடத்தப்பட்டுப் பரத்தையர் ஆக்கப்படும் அவலமும் அரங்கேறுகிறது.
ஒரு காலக்கட்டத்தில், இவர்கள் இறைப்பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டு ஆடவரின் சரச சல்லாபத்துக்கு உட்படுத்தப்பட்டக் குரூரங்களும் நிகழ்ந்தன.
உடலுறவு கொள்வது இயற்கையோ, இறைவனின் திருவிளையாடலோ, ஆடவனைப் பொருத்தவரை ‘அது’ முடிந்த பிறகு அதற்கான பின்விளைவு ஏதுமின்றிச் சுதந்திரமாகச் செயல்படுகிறான்.
அந்தச் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை; கருவுற்று, பல மாதங்கள் அதைச் சுமந்து, பல துன்பங்களை அனுபவித்து ஈன்று புறம் தருதல் என்னும் கடமையைச் செய்கிறாள்.
படைப்பில் ஏனிந்த முரண்பாடு?
படைத்தவன் கடவுள் என்றால் அவன் பண்பற்றவன் என்றாகிறதே!
இப்படிப் பாரபட்சம் காட்டும் அவனை, ஆண்களைக் காட்டிலும் அதிகம் நம்பி வழிபடுபவர்கள் பெண்களே என்னும் உண்மை நம்மைப் பெரு வியப்பில் ஆழ்த்துகிறது!!
===========================================================================================================