இதைப் ‘புலம்பெயர்தல்’ என்கிறார்கள்.
உலக அளவில் இது பரவலாக நிகழ்ந்திருக்கிறது.
பெருமளவில் செல்வம் சேர்க்கலாம் என்று ஆசைப்பட்டுப் புலம் பெயர்வோரும் உண்டு[இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது, எவரொருவரும் சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளின் அனுமதி பெற்றுத்தான் அங்கெல்லாம் செல்ல முடியும் என்பது].
நாடுவிட்டு நாடு செல்வதுபோலவே, ஒரு நாட்டிலுள்ள ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் தேடியோ, செல்வம் சேர்க்கவோ செல்லுவதும் புலம்பெயர்தல்தான்.
இந்திய தேசத்திலும் இது நிகழ்ந்திருக்கிறது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன.
இந்த நாடு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலத்திலிருந்தோ, மாநிலங்களிலிருந்தோ வேலை வாய்ப்புத் தேடிப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் குடியேறும்போது, புகலிடம் தரும் மாநிலத்தவர் கவலைக்குள்ளாவதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் இயல்பே.
இந்தியா ஒரே நாடு. எந்தவொரு மாநிலத்தவரும் எந்தவொரு மாநிலத்திற்கும் வாழ்வாதாரம் தேடிச் செல்கையில், செல்வோர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே வகைதொகை இல்லாமல் பெருகுவது பல சிக்கல்களுக்கு வித்திடுவதாக அமையும்.
இதனால், மொழிவாரி மாநிலம் என்னும் கட்டமைப்பு சீர்குலையும். சீர்குலையும்போது அது இன மோதல்களுக்கும் பிரிவினைகளுக்கும் கலவரங்களுக்கும் வழிவகிக்கும்[இதை இன்னும் விவரித்துச் சொல்வது இங்கு தேவையற்றது].
தலைப்புக்கு வருவோம்.
வாழ்வாதாரம் தேடிப் பெரும் எண்ணிக்கையில் பிற மாநிலத்தவர் வந்து குவியும்போது, புகலிடம் தரும் மாநில ஆட்சியாளர்கள் கூடுதல் சுமையை ஏற்கவேண்டியுள்ளது; பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் கணக்குவழக்கில்லாமல் பிற மாநிலத்தவர் குடியேறிய நிலையில், அவர்களின் குடியேற்றத்தால் உருவெடுத்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கட்டாயத்துக்குத் தமிழ்நாடு அரசு உள்ளானது.
அவற்றைத் தீர்ப்பதில் பல சங்கடங்களை எதிர்கொண்டது; சலிக்காமல் போராடி, இது விசயத்தில் சாதனைகளயும் நிகழ்த்தியுள்ளது. ஆனால்.....
சம்மந்தப்பட்ட மாநில அரசுகளோ, கடும் பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள் போன்ற புலம்பெயர்தலுக்கான சூழல் இல்லாத நிலையில், தங்கள் மாநில மக்களை அகதிகள் ஆக்கியதற்குக் கொஞ்சமும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
மாறாக, தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்கிறார்கள் என்று பரப்புரை செய்வதிலும், தமிழ்நாடு அரசு கலவரம் செய்யத் தூண்டுவோரைக் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துவதிலும், போலி வீடியோக்களைப் பரப்பி, தமிழ்நாட்டில் குடியேறிய தங்களின் மக்களுக்காக அனைத்திந்திய அளவில் அனுதாபம் தேடிக்கொள்வதிலும்தான் முனைப்பாகச் செயல்பட்டார்கள்; படுகிறார்கள்[இவர்களைச் சமாதானப்படுத்த த.நா.அரசு பட்ட சிரமம் கொஞ்சநஞ்சமல்ல].
சம்மந்தப்பட்ட எந்தவொரு வட மாநில அரசும், “நாங்கள் எங்கள் மக்களுக்கான வாழ்வாதரங்களை மேம்படுத்தத் தவறிவிட்டோம்[மிகப் பல ஆண்டுகளாக]. கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்ளுங்கள்; அதைச் செய்து எங்கள் மாநிலத்தவரை இயன்றவரை வரவழைத்துக்கொள்ளப் பாடுபடுவோம்” என்று சொன்னதில்லை; சொல்லும் நாகரிகமும், கடமையுணர்வும் அவர்களுக்கு இல்லை.
இந்நிலையில், இங்கு நாம் முன்வைக்கும் கேள்விகள் இவைதான்.....
வாழ்வாதாரம் தேடி வருவோரால் எழும் அத்தனைத் தொல்லைகளையும் புகலிடம் தரும் மாநில அரசேதான் ஏற்க வேண்டுமா? சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லையா?
சிறுகுறு மொழிகளை அழித்து இந்தியை வளர்ப்பதும்[இந்திக்கும் செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு ஆண்டுதோறும் செலவிடும் தொகை கோடிக்கணக்கான ரூபாய்], ‘இந்தி’யர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதும், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், சூழ்ச்சிகள் பல செய்து அம்மாநில அரசுகளைக் கைப்பற்றுவதும், ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே இனம்[’இந்தி’யர்], ஒரே ஆட்சி[பாஜக] என்று உலகறிய முழக்கமிடுவதும்தான் ஒன்றிய அரசின் வேலையா? மேற்கண்டவை போன்ற மாநில அவலங்களைக் கண்டுகொள்ளாதது ஏன்?
இந்தச் சாமானியன் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு எந்தவொரு தரப்பிலிருந்தும் பதில் வராது என்பது தெரியும். தெரிந்திருந்தும் கேள்விகள் கேட்பது பித்துக்குளித்தனம் என்பதையும் நாம் அறிவோம்!
==========================================================================================