வியாழன், 23 மார்ச், 2023

அவர்களுக்குச் ‘சாவர்க்கர்! இவர்களுக்குக் ‘காந்தி’!!


’ரூபாய் நோட்டிலுள்ள காந்தியடிகளின் பெயரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக, 'சவார்க்கர்' மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும்’ என்று இந்து மகாசபை நடுவணரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நாடெங்கும் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சாவர்க்கர் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்துச் சிறையிலிருந்து விடுதலை பெற்றார் என ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இவர் ஆங்கிலேயருக்குப் பலவகையிலும் உதவிகள் செய்ததோடு,  காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்குத் துப்பாக்கியை ஏற்பாடு செய்ததும் சாவர்க்கர்தான் என்று சொல்லப்படுவதோடு, அந்தக் குற்றச்சாட்டைச் சுமந்துகொண்டுதான் தன் வாழ்நாளைக் கழித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இவர் ஆகச்சிறந்த சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்லுகிற இந்துத்துவாக்கள், ‘பாஜக’ ஆட்சியில் சவார்க்கர் பெயரை ரூபாய் நோட்டுகளில் பொறிப்பது சாத்தியமே. ஆனால்,

காந்தியடிகளின் படம் நீக்கப்படுதல் வேண்டும்[முஸ்லீம்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டார் காந்தி என்பது இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. முஸ்லீம்களைச் சகோதரர்களாக நினைத்துச் செயல்பட்டாரே தவிர, இவர்கள் சொல்லுவதில் முழு உண்மை இல்லை என்பது நினைவுகூரத்தக்கது] என்று இவர்கள் கோரிக்கை வைப்பது அடாவடித்தனத்தின் உச்சம் ஆகும்.

தன்னைத்தானே வருத்திக்கொண்டு, பகைவனைப் பணிய வைத்திடும் அதிசயமான போராட்ட முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் காந்தி. 

தமிழ்நாட்டில் கோவணத்தடன் அலைந்த மனிதர்களைப் பார்த்ததிலிருந்து இடுப்பில் வேட்டி, மேலே போர்த்துக்கொள்ள சிறு வேட்டி என்று வாழ்ந்துமுடித்த பெருந்தகை அவர்.

இவரோடு ஒப்பிட்டால், சாவர்க்கர் என்னும் அந்த இந்துமதப் பற்றாளர்[வெறியர்?] வெகு அற்பம்.

சாவர்க்கருக்காக, ரூபாய் நோட்டிலிருந்து காந்தி பெயர் நீக்கப்பட்டால், அது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகும் என்பதோடு, நாடெங்கும் பெரும் கலவரங்களை உருவாக்கும் என்பது உறுதி.

இந்த இந்துமத வெறியர்கள், ரூபாய் நோட்டுகளில் சாவர்க்கரின் படத்தைச் சேர்ப்பதோடு நிற்கமாட்டார்கள்; இந்தியத் தேசியக் கொடியிலும், சின்னத்திலும்கூட சாவர்க்கர் படத்தைச் சேர்ப்பார்கள் என்பது உறுதி. ஒரு கட்டத்தில், ‘இந்தியத் தேசம்’ என்னும் பெயரைக்கூட, ‘சாவர்க்கர் தேசம்’ என்று மாற்ற முனைவார்கள்.

இந்துத்துவாக்களின் இந்த வெறித்தனமான செயல்களை எதிர்ப்பவர்கள்.....

சவார்க்கருக்காக, ரூபாய் நோட்டில் காந்தியடிகள் பெயர் நீக்கப்படுமேயானால், இந்திய அரசு வெளியிடும் சவார்க்கர் படம் பொறித்த ரூபாய் நோட்டை நாங்கள் கையால் தொடமாட்டோம். காந்தி படத்துடனான ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுப் பயன்படுத்தும் உரிமை எங்களுக்குத் தேவை என்று பல மாநில அரசுகள் சொல்லும் நிலை உருவாகலாம்.

ஒரு வேளை.....

‘ஒரு வேளை...’தான்[100% அவ்வாறெல்லாம் நடக்காது என்று நம்புவோம்]. இந்தியா சாவர்க்கர் தேசம் என்று மாற்றப்படுமானால், அதை விரும்பாத மாநிலங்கள் ஒருங்கிணைந்து, 'காந்தி தேசம்' என்றொரு புதிய தேசத்தை உருவாக்க முயற்சி செய்யவும்கூடும்.

இது ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே.

நடுவணரசு மிக மிக மிக விழிப்புணர்வுடன் செயல்படவேண்டிய நெருக்கடியான காலக்கட்டம் இதுவாகும்!
===============================================================================