ஞாயிறு, 26 மார்ச், 2023

படு படு படு அப்பாவி ‘ஃபரூக் அப்துல்லா’!!!

“பாரதிய ஜனதா கட்சியினருக்கு ராமர் மீது உண்மையான அன்பு இல்லை; சாமானிய மக்களைக் கவர்வதற்காகவே புதிது புதிதாக ராமர் கோயில்களைத் திறக்கிறார்கள்; தேர்தல் வரும்போதெல்லாம் ‘இந்துக்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து நேரவுள்ளது’ என்று பரப்புரை செய்கிறார்கள். அதிகாரத்துக்காக அவர்கள் அவரைத் தங்களுக்கு மட்டுமேயான கடவுளாகச் சொல்லிக்கொள்கிறார்கள்” என்று ‘ஜம்மு-காஷ்மீர்’ முன்னாள் முதல்வர்  ‘ஃபரூக் அப்துல்லா’ பேசியிருக்கிறார்[காணொலி உரை -நியூஸ்18].

இஸ்லாமியரைச் சீண்டித் தங்களின் கட்சியை வளர்ப்பவர்கள் ‘பாஜக’வினர் என்பதால், ஃபரூக் அப்துல்லா இப்படிப் பேசியதில் தவறே இல்லை.

ஆனால் அவர் தொடர்ந்து பேசுகையில், “ராமர் ஒரு இந்துக் கடவுள் மட்டுமல்ல. இந்த எண்ணத்தை ஒவ்வொருவரும் மனதில் இருந்து அகற்ற வேண்டும். முஸ்லீமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி, ரஷ்யராக இருந்தாலும் சரி, பகவான் ராமர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்[‘அல்லாவும் எல்லா மதத்தவருக்கும் பொதுவானவரே’]” என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல்.....

“அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் ராமர்” என்றும் உதம்பூரில் பாந்தர்ஸ் கட்சி ஏற்பாடு செய்த பேரணியில் அவர் கூறியுள்ளார்.

கடவுள் என்றொருவர் ‘இருப்பது’ உறுதிப்படுத்தப்படாத நிலையில், “அல்லாதான் ராமரை அனுப்பினார்” என்ற ஃபரூக் அப்துல்லா, மண்ணுலக மனிதர்களால் கணக்குவழக்கில்லாமல் கற்பனை செய்யப்பட்ட அத்தனைக் கடவுள்களையும் அவரே அனுப்பினார் என்று சொல்லியிருந்தால் அதை வெகுவாக ரசித்து மகிழ்ந்திருக்கலாம்.

‘அனைத்து மதத்தவருக்கும்[இஸ்லாமியர் உட்பட] ராமன் பொதுவான கடவுள் என்று பாகிஸ்தான் எழுத்தாளரை மேற்கோள்காட்டி அவர் சொல்லியிருப்பது அனைத்து இஸ்லாமியர்களையும் சினம்கொள்ளத் தூண்டும் என்பது உறுதி.

இப்படிப் பேசியதற்காக இந்துத்துவாக்கள் அவரைச் சாடுவதோடு சாபமும் கொடுப்பார்கள் என்பதை அவர் அறியாமல்போனது பரிதாபத்திற்குரியது. 

முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மிகவும் நல்லவர் என்பதை அறிய முடிகிறது. அதே வேளையில், இத்தனை அப்பாவியா அவர் என்று பரிதாபபப்படவும் தோன்றுகிறது.


பாவம் ஃபருக் அப்துல்லா!

====================================================================================