அன்று முன்னிரவில், மயில்சாமி சிவகாமி வீட்டுக்குப் போனபோது அவள் தேனீர் அருந்திக்கொண்டிருந்தாள்.
அவன் அவளின் வாடிக்கையாளன்.
உரிமையுடன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
தேனீரைக் குடித்து முடித்து, “உனக்கும் டீ கொண்டாறேன்” என்று சமையலறைக்குச் செல்ல முற்பட்ட அவளிடம் “டீ வேண்டாம்” என்றான் மயில்சாமி.
“டீ குடிக்கமாட்டியா?” -விழிகளில் வியப்புத் ததும்பக் கேட்டாள் அவள்.
“குடிப்பேன்.”
“அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்லுறே?”
“அது வந்து... கையில் அதுக்கான பணம் மட்டும்தான் இருக்கு. டீக்குக் கொடுக்கச் சில்லரை இல்ல” என்றான் அவன்.
“இப்போ நீ என் வீட்டு விருந்தாளி. அதுக்கான ரூமுக்குள்ள நுழைஞ்சாத்தான் நீ வாடிக்கையாளன். காசு வேண்டாம்” என்று சொல்லி அவனுக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள் சிவகாமி.
மயில்சாமி அதைப் பருகலானான்.
பட்டும் படாமலும் அவனை ஒட்டி அமர்ந்துகொண்டு, “ஒரு சந்தேகம் எனக்கு. முன்பெல்லாம் மாசத்தில் மூனுநாலு தடவை வருவே. கொஞ்ச நாளா மாசம் ஒரு தடவைதான் வர்றே. வேறே எவள்கூடவும் தொடுப்பு வெச்சிருக்கியா?” -முகத்தில் மெல்லிய வருத்தம் படரக் கேட்டாள் சிவகாமி.
“அதுவா? முன்பெல்லாம் முதலாளி வாரா வாரம் சம்பளம் கொடுத்தார். இப்போ எல்லாம் மாசச் சம்பளம். ஒரு வாரத்துக்கு மேல கையில் பணம் தங்குறதில்ல.”
“வீட்டுச் செலவை எப்படிச் சமாளிக்கிறே?’
“மளிகைக் கடை, காய்கறிக் கடையிலெல்லாம் ‘கடன் கணக்கு’ எழுதிடுவேன். மாசச் சம்பளம் வரும்போது மொத்தமா கொடுத்துடுவேன்” என்றான் மயில்சாமி.
“இங்கேயும் கடன் கணக்கு எழுதலாம். கையில் காசில்லேன்னு வராம இருந்துடாதே” என்று சொல்லி மேசை மீதிருந்த ஒரு குறிப்பேட்டைத் தொட்டுக் காட்டிவிட்டு, அவன் பின்தொடர அதுக்கான அறையை நோக்கி நடந்தாள் அவள்.
===========================================================================================================