அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 6 மார்ச், 2023

'சவால்’ விடுவதும் ஒரு குற்றமே! அண்ணாமலையைக் கைது செய்யுமா தமிழ்நாடு அரசு?!


‘பாஜக’ தலைவர் அண்ணாமலை மீது, வட மாநிலத்துத் தொழிலாளர் பிரச்சினையில் கலவரத்தைத் தூண்டியதாகத் தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்துள்ளமை ஊடகங்களில் வெளியான செய்தி. 

அதே ஊடகங்களில், “ஒரு சாமானிய மனிதனாகச் சொல்கிறேன், 24 மணிநேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள்” என்று திமுகவுக்கு[தமிழ்நாடு அரசுக்கு] அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்” என்னும் செய்தியும் வெளியானது.

ஒருவர் மீது காவல்துறை ‘வழக்குப் பதிவு’ செய்தால், குற்றம் புரிந்ததற்கான முழு ஆதாரங்களையும் திரட்டிய பிறகே அவரைக் கைது செய்வது வழக்கம். இது முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலைக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும், 24 மணி நேர அவகாசம் கொடுத்து, “முடிந்தால் என்னைக் கைது செய்” என்று சவால்விடுவது சரியா?

”நான் குற்றம் செய்திருந்தால் அரசு என்னைக் கைது செய்யட்டும்” என்று அண்ணாமலை சொல்லியிருந்தால் அதில் பிரச்சினை ஏதும் இல்லை.

ஒரு மாநிலத்தில் குற்றச் செயல்கள் ஏதும் நடவாமல் அதைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை. ஒரு நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், அவரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும் உரிமை அரசுக்கு உண்டு.

இந்தவொரு நடைமுறையைப் பின்பற்றித்தான் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளது அரசு.

அது அண்ணாமலையைக் கைது செய்யலாம், செய்வதைத் தவிர்க்கவும் செய்யலாம்.

இது பற்றிய தகவல் ஏதும் அறியப்படாத நிலையில்.....

“திராணி இருந்தால் என்னைக் கைது செய்” என்று சவால்விடும்[மிரட்டுதல், அச்சுறுத்துதல்] இவர் மக்கள் ஆட்சி நடக்கிற ஒரு நாட்டின் கட்சித் தலைவரா, உலகு தழுவிய ஒரு ‘ரவுடி’க் கூட்டத்தின் தாதாவா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

கைது செய்யப்பட்டால் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் இருக்கும்போது என்ன தைரியத்தில் இவர் இப்படிச் சவால் விடுகிறார்?

ஒரு ‘பிக்பாக்கெட்’ திருடனையோ, கள்ளச் சாராயம் காய்ச்சுபவனையோ சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஒரு காவல்துறை அதிகாரி விசாரிக்கச் சென்றால், அவரைப் பார்த்து, ”என்னைக் கைது செய்து பார்” என்று சவால் விட்டால்[மிரட்டினால்] அவனை அவர் என்ன செய்வார்?

ஏதும் செய்யாமல் இருந்துவிட்டால் காவல்துறை என்ற ஒன்று எதற்கு?

காவல்துறையின் மீதான பதிப்பும் மரியாதையும் என்னாவது?

இதே கேள்வியைத்தான் அண்ணாமலை விசயத்திலும் கேட்க வேண்டியுள்ளது.

இவர் குற்றவாளியோ அல்லவோ, மாநிலத்தின் அமைதியைக் கட்டிக் காக்க வேண்டிய அரசைப் பார்த்து, “என்னைக் கைது செய்து பார்” என்று சவால் விட்ட இவரைக் கைது செய்யாவிட்டால், “இது கையாலாகாத அரசு” என்று மக்கள் கைகொட்டி நகைப்பார்கள்!

தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?

அண்ணாமலையைக் கைது செய்யுமா? அல்லது.....

இவரைக் கைது செய்தால் ’பாஜக’வினர் கலகம் விளைவிப்பார்கள் என்றோ, நடுவணரசு தலையிட்டு ஆட்சியைக் கலைத்துவிடும் என்றோ அஞ்சி, இனியும் அடுக்கடுக்காய் இவர் விடவிருக்கும் சவால்களை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்குமா?!

============================================================