அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 8 மார்ச், 2023

நாம் இந்தியர்கள்! வாருங்கள் ‘இந்தி’யர்களிடம் பாடம் கற்போம்!!


பீகாரின் பாட்னா நகரில் 4ஆவது வேளாண் திட்ட நிகழ்ச்சி முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடந்தது. இதில், லக்கிசராய்யைச் சேர்ந்த அமித் குமார் என்ற விவசாயி பங்கேற்றுப் பேசினார்; ஆங்கிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரைப் புகழ்ந்து தள்ளினார்.

மேனேஜ்மெண்ட் படித்தவரான அவர், புனேவில் நல்ல வேலையை விட்டுவிட்டுச் சொந்த மாவட்டத்தில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கான தைரியம் வருவதற்கு நிதீஷ் குமார் அரசு கொண்டுவந்த திட்டம்தான் காரணம் என்றெல்லாம் சொல்லி, முதல்வரைப் பாராட்டிக்கொண்டிருந்தார்.


இந்தப் புகழ்ச்சியால் கிறுகிறுத்துப்போய், அமித்குமாரைக் கட்டித் தழுவிக் கைகுலுக்கி நன்றி சொன்னாரா முதல்வர் நிதிஷ்குமார் என்று கேட்டால், ‘இல்லை’ என்பதே அதற்கான பதில்.


பேசுவதை நிறுத்தச் சொன்னதோடு, “இது இங்கிலாந்து நாடல்ல. நீங்கள் பீகாரில் இருக்கிறீர்கள். ஆங்கிலத்தில் பேசாதீர்கள்; நம் மொழியான இந்தியில் பேசுங்கள்” என்றார் முதல்வர் நிதீஷ்குமார்.


[இவர்களில்{பீகாரிகள்} பலருக்கு இந்தியே தெரியாது. பிஹாரில் இருந்து வருபவர்கள் போஜ்புரி, மைத்திலி மொழி பேசக் கூடியவர்கள்’ என்கிறது ‘இந்து தமிழ்’இல் வெளியான ஒரு கட்டுரை https://www.hindutamil.in/news/opinion/columns/955163-migrant-workers-and-north-indians-issues-in-tamil-nadu-4.html பொய்ச் செய்தி பரப்புகிறதா ‘இந்து தமிழ்’?]


“நான் படித்தது ஆங்கிலவழிக் கல்வியில்” என்றார் அந்தப் பேச்சாளர். 


கல்வி கற்க ஆங்கில மொழியைப் பயன்படுத்துவது வேறு விசயம். அதற்காக நம் தாய்மொழியான இந்தியை அலட்சியப்படுத்தக் கூடாது” என்றார் பீகார் முதல்வர்.


இதைக் கேட்டு உற்சாகமான பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.


நிதீஸ்குமாரும் அங்குக் கூடியிருந்த பீகார் மக்களும் இந்தியர்களே என்றாலும், தாங்கள் ‘பீகாரிகள்’ என்பதையும், தங்களின் தாய்மொழி ‘இந்தி’ என்பதையும் மறக்கவில்லை; மறப்பதில்லை.


இதே மாதிரியான ஒரு நிகழ்ச்சி நம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால்.....


புரிகிறதோ இல்லையோ, ஆங்கிலத்திலான சொற்பொழிவைக் கேட்டுக் கைதட்டி ஆரவாரம் செய்திருப்போம். 


நம் தாய்மொழி புறக்கணிக்கப்படும்போது நம் உள்ளம் கொதிப்படைவதில்லை; இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நம் தமிழ் அழியும் என்று தமிழர்களாகிய நாம் கவலைப்படுவதும் இல்லை. 


“வாழ்க தமிழ்” என்று வாய்கிழிய மேடைகளில் முழங்குகிறோமே தவிர, மனதாரத் தமிழ் வளர வேண்டும் என்று எண்ணுவதில்லை. அதை வளர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதும் இல்லை.


“தமிழைப் படி; தமிழில் படி” என்று இங்கு வலியுறுத்துவார் இல்லை, 


தமிழ் அழிந்துகொண்டே இருக்கிறது.


இங்கே தமிழுக்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கும் தமிழர்களே எதிரிகள்.


இந்தி வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் வளர்ச்சியில் நடுவணரசு தனிக் கவனம் செலுத்துகிறது[கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கிறது] என்பது மட்டும் அதன் அசுர வளர்ச்சிக்குக் காரணம் அல்ல; ‘இந்தி’யர்களின் அசைக்க முடியாத தாய்மொழிப் பற்றும் காரணம்.


குறிப்பு:

பதிவில் தமிழர்களின் தாய்மொழிப் பற்றின்மை குறித்துக் கடிந்துரைத்திருப்பினும், ’தம் உயிரினும் மேலாகத் தமிழை மதிப்பவர்களும் உளர்’ என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் உண்மை!

===========================================================================================

https://tamil.oneindia.com/news/patna/is-this-england-nitish-kumar-after-an-upwardly-mobile-farmer-speaks-in-english-499949.html