தம்பி,
உங்களை நான் ‘தம்பி’ என்று உறவுமுறை கொண்டாடுவதற்கு, வயது வித்தியாசம் என்பதைத் தவிர, அண்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பதோ, இருவருமே கொங்கு மண்டலத்தின் மைந்தர்கள் என்பதோ[ஹி... ஹி... ஹி!!!] காரணம் அல்ல.
கீழ்வருவது, ‘நக்கீரன்’ தளத்தில்[https://www.nakkheeran.in/24-by-7-news/politics/put-me-and-prashant-kishore-same-cell-annamalai-request-chief-minister] நீங்கள் பேசியதாக வந்த செய்தியின் ஒரு சிறு பகுதி.
//திமுகவின் அரசியல் கொள்கை என்பது பிரிவினைவாதம். வடக்கு தெற்கு, திராவிட நாடு வேண்டும் என்று கேட்டவர் பெரியார். அந்த வழித்தோன்றலில் வந்தவர்கள் திமுகவினர்//
பெரியாரின் வழித்தோன்றல்கள் ‘தி.மு.க.’வினர் மட்டுமல்ல; என்னைப் போன்ற ‘வழித்தோன்றல்கள்’ பல்லாயிரக் கணக்கில் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
பெரியாரின் வழித்தோன்றல்களாக இருப்பது குற்றமா? இன்று எங்களில் எவரும் திராவிடநாடு கேட்பதில்லை; கேட்கவேண்டிய[உங்களைப் போன்றவர்களின் தூண்டுதலால்] தமிழ்நாடும் கேட்பதில்லை.
கேட்பது போன்ற ஒரு பொய்யான நம்பிக்கையை இந்திய மக்கள் மனங்களில் விதைத்து, நடுவணரசைத் தூண்டிக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, தமிழர்களின் இனப்பற்றை வேரறுக்க நினைக்கிறீர்களா சகோதரரே?
“நாங்கள் தமிழர்களே[இந்தியத் தமிழர்கள் என்றும் சொல்லத் தயங்குவதில்லை]; பெரியார் வழி வந்தவர்களே” என்று ஆயிரம் தடவை, இமயமலையில் உச்சியில் நின்று, உலகறிய ஓங்கிய குரலில் நாங்கள் முழக்கமிடவும் செய்வோம், உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எங்களைச் சீண்டிக்கொண்டே இருந்தால்.
திராவிட நாடு கேட்பதை[எவரும் கேட்கவில்லை]க் கண்டிக்கிற உங்களுக்கு அண்மையில் ஊடகம் ஒன்றில் கீழ்வரும் காணொலி[வீடியோ] வெளியானது தெரியுமா?[காணொலிச் செய்தியை விவரித்து எழுதினால், காலிஸ்தான் ஆதரவாளர் என்று முத்திரை குத்துவீர்கள் என்பதால் அது தவிர்க்கப்பட்டது].
ஒரிஜினல் தேசியவாதியான நீங்கள்[‘நாங்களும் இந்தியர்களே’ என்று தமிழர்கள் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள்] இப்படியொரு காணொலி வெளியானதை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
அறிந்திருந்தால் அவர்களைக் கண்டித்துக் கடும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை சகோதரரே?[அதைக் காணும் வாய்ப்பு அமையவில்லை என்றால் தமிழ்நாடு என்னும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவரா நீங்கள்?]
அன்புத் தம்பி அண்ணாமலை அவர்களே,
தமிழ்நாடு முதல்வர் ஆகவேண்டும் என்னும் தணியாத ஆசையின் விளைவாகப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு நீங்கள் உள்ளாகியிருந்தால்.....
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘ராஜினாமா’ செய்யும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
உங்களின் நிலைமையறிந்து அவர் ராஜினாமா செய்வார். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக உங்களை முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
அதன் பிறகேனும் அடாவடித்தனமாகவும் முரட்டுத்தனமாகவும்[இதைக் கருத்தில்கொண்டுதான் உங்களின் கட்சி மேலிடம் உங்களைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராக்கியது என்பதைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு இல்லை] பேசித் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகாமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.
உங்களைத் தம்பி என்று உறவுமுறை கொண்டாடியது தவறு என்றால் அன்புகொண்டு என்னை மன்னியுங்கள்.
நன்றி!
===========================================================================================