சில நாட்கள் முன்பு, ஓய்வூதியத் திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்திற்குச் செல்ல நேரிட்டது.
வளாகத்தில் உள்ள ஒரு புதிய கடைக்குத் தேனீர் அருந்தச் சென்றபோது, அங்கிருந்த(கடைக்குள்) வேப்பமரத்தம்மனைத் தரிசித்துக் கழிபேருவகை எய்தினேன்[ஹி... ஹி... ஹி!!!].
அந்தத் தெய்வீக மரத்தின் தலைப்பகுதி முற்றிலுமாய் அகற்றப்பட்ட நிலையில் முண்டமாகக் காட்சியளித்த அதன் அடிப்பக்கத்தில் செங்கற்களால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு[நீர்பாய்ச்சுவதற்கு], குங்குமம் பூசி, மாலை அணிவித்து, வண்ணத்தாள்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஊதுவர்த்தி வாசம் கடையெங்கும் கமகமத்தது.
“இதென்ன வேப்ப மரம்தானே?” என்று நான் கேட்க, சில கணங்கள் என்னை முறைத்துவிட்டு, “இது மரமல்ல, வேப்பமரத்தம்மன்” என்று அம்மனை எனக்கு அடையாளப்படுத்தியதோடு, மரம் அம்மன் ஆன வரலாற்றையும் விவரித்தார் கடைக்காரர்.
நிர்வாகத்தின் அனுமதியோடு புதிய கடைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கிருந்த வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டி முடித்தபோது, இருள்சூழத் தொடங்கிவிட்டதால் அடிமரம் வெட்டும் வேலையை ஒத்திவைத்து வீடு சென்றார் கடைக்காரர்.
இரவில் உறங்கும்போது அம்மனே அவர் கனவில் தோன்றி, “நீ பாதி வெட்டிய வேம்பு வெறும் மரமல்ல, அதில் நான் நீண்ட காலமாகக் குடியிருக்கிறேன்” என்று சொன்னாராம்.
அடுத்த நாளே, மரத்தைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, உரிய முறையில் பூஜை செய்து வேம்பை ‘வேப்பமரத்தம்மன்’ ஆக்கிவிட்டார் கடைக்காரர்.
வேம்பு மரம் அம்மன் ஆன கதையைச் சொன்னதோடு, வாடிக்கையாளர்களில் பலரும் வேப்பமரத்தம்மனிடம் வேண்டுதல் வைப்பதாகவும், சில நாட்களிலேயே வேண்டுதல் நிறைவேற்றப்படுவதால், மீண்டும் வந்து அம்மனைத் தரிசித்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் கடைக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருமானமும் கூடியிருக்கும் என்பதை அவர் சொல்லாமலே நான் புரிந்துகொண்டேன்.
புறப்படும்போது, “உண்டியல் வெச்சிடுங்க. அந்த வருமானத்தை வைத்து ஆண்டுதோறும் வேப்பமரத்தம்மனுக்கு விமரிசையாய் விழா நடத்திடலாம்; நன்கொடை வசூலித்துக் கோயில்கூடக் கட்டலாம்” என்றேன்.
அவர் முகத்தில் மலர்ந்த புன்சிரிப்பு என் யோசனை ஏற்கப்பட்டது என்பதை அறியச்செய்தது!