“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. நான் ரெண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன். நீ ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கே?” என்று தங்கராசுவிடம் நான் கேட்டபோது அவன் சொன்ன பதில் என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அவனின் பதிலை நீங்களும் தெரிந்துகொள்வதற்கு முன் எங்களைப் பற்றிய சிறு குறிப்பு:
இருவரும் பிறந்து வளர்ந்து, உருண்டு புரண்டு விளையாடிப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தது சேலம் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில்[பெயர் வேண்டாமே].
அப்புறம் இருவரும் பயணித்தது வேறு வேறு பாதைகளில்.
நான் படிப்பில் கொஞ்சம் மந்தம் என்பதால், தனியார் கல்லூரிக்கு நன்கொடை அழுது, பட்டப்படிப்பு, மேற்படிப்பெல்லாம் முடித்துப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து, கல்யாணம் கட்டி இரு பிள்ளைகளின் தந்தை ஆனது இன்றுவரையிலான என் கதை.
தங்கராசு படிப்பில் படு சுட்டி. ஒரே ‘தம்’மில் பி.டெக்., எம்.டெக்., எல்லாம் முடித்து இன்று பெங்களூருவில் பெட்டி பெட்டியாய்ச் சம்பளம் வாங்குகிறான்.
ஆண்டுக்கு ஓரிரு முறை சந்திக்கும்போதெல்லாம், “கல்யாணம் எப்போதுடா?” என்று கேட்டால், பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகப் பொய் சொல்லுவான்.
நேற்றைய சந்திப்பின்போது, “உண்மையைச் சொல்லு. கல்யாணம் பண்ணிக்கப்போறியா, இல்லையா?” என்று கேட்டபோதுதான் “இல்லை” என்று சொன்னதோடு காரணத்தையும் சொன்னான்.
“ஒரு பொண்ணுக்குப் புருசனாக இருப்பதற்கான முழுத் தகுதி எனக்கு இல்ல. அது விசயத்தில் மனசைக் கட்டுப்படுத்தி, நிதானமா செயல்படுறது எனக்குச் சாத்தியமாகல.”
குறுக்கிட்டேன். “எப்படித் தெரிஞ்சுகிட்டே?”
“பலான இடங்களுக்குப் போய்த் தெரிஞ்சிகிட்டேன். தப்பா நினக்காதே அந்தப் பழக்கத்தை எப்போதோ கைவிட்டுட்டேன்.” -முகத்தில் அசடு வழியச் சொன்னான் தங்கராசு.
“இந்த ‘இயலாமை’க் குறையைச் சரிக்கட்ட மருந்து மாத்திரைகள் இருப்பதாகச் சொல்லுறாங்களே?” -நான்.
“தெரியும். இந்தக் காலத்துப் பொண்ணுக அந்தரங்க உறவு பத்தி நிறையவே தெரிஞ்சி வைச்சிருக்காங்க. அது விசயத்தில் கட்டுபடி ஆகாம கட்டின புருசனைக் கைவிட்டு ஒருத்தனோடு ஓடிப்போறது, தைரியமாத் தீர்த்துக்கட்டுறதெல்லாம் செய்யுறாங்க. அவங்கள்ல ஒருத்தியைக் கல்யாணம் கட்டிகிட்டு, அவளைத் திருப்திப்படுத்துறதுக்காக, மருந்து மாத்திரைகளைத் தேடி நாயாய்ப் பேயாய் அலையுறது எனக்குப் பிடிக்கல. அதனாலதான், கல்யாணமே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.”
நண்பனின் இந்தப் பேச்சு என்னைக் கோபப்படத் தூண்டியது. கட்டுப்படுத்திக்கொண்டு, “தனியாகவே வாழ்ந்திட முடியுமா? பாலுறவுக்குப் பலானதுகளைத் தேடிப் போறது உடம்புக்குக் கெடுதல். ஒரு பெண் துணை அவசியமில்லையா?” என்றேன்.
“தேவைதான். அந்தத் தேவையை நிறைவேத்துறதுக்காகத்தான் சேர்ந்து வாழுறதில் விருப்பமுள்ள ஒருத்தியோடு சேர்ந்து வாழுறதுன்னு முடிவு பண்ணினேன். இம்மாதிரியான வாழ்க்கையில், இருவரில் ஒருத்தருக்கு விருப்பம் இல்லேன்னாலும் பிரிஞ்சுடலாம். யாரோ ஒருத்தனோடு ஓடிப்போறது, தீர்த்துக்கட்டுறதுக்கெல்லாம் இங்க இடமில்ல. குழந்தை பெத்துக்கக் கூடாதுங்கிற நிபந்தனையோடு, என்கூட வேலை பார்க்குற, ஏற்கனவே விவாகரத்துச் செய்துகிட்ட ஒருத்தியைச் சேர்த்துகிட்டுக் குடித்தனம் நடத்தினேன். ரெண்டு வருசம்தான், பிரிஞ்சுட்டோம். ஒரு வருசம்போலத் தனியா இருந்தேன். இப்போ இன்னொருத்தியைச் சேர்த்துகிட்டிருக்கேன்.....” -உணர்ச்சியற்ற தொனியில் பேசிக்கொண்டிருந்தான் தங்கராசு.
குறுக்கீடு செய்யாமல் அவன் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“இவளோட உறவு எவ்வளவு நாள் நீடிக்கும்னு தெரியாது. அப்புறமும், புருசனால் கைவிடப்பட்டவளோ விவாகரத்துச் செய்தவளோ கிடைச்சா சேர்த்துக்கலாம்தான். ஆனா, வயசாயிட்டா இதைத் தொடர முடியாது. தனியாவே காலத்தைக் கழிச்சிட வேண்டியதுதான்.”
“வாரிசுகளே இல்லாம போனா, வயசான காலத்தில் யார் கவனிப்பாங்க?”
“இப்போ எல்லாம் ஊரூருக்கு முதியோர் இல்லங்கள் வந்திடிச்சி. பணத்தை விட்டெறிஞ்சா ரொம்ப நல்லா கவனிச்சிக்குற விடுதிகளெல்லாம் இருக்கு.”
“தீராத நோய் காரணமாகவோ, தள்ளாத வயசு காரணமாகவோ நடமாட முடியாத நிலைக்கு ஆளாகும்போது.....”
குறுக்கிட்டான் தங்கராசு, “வாரிசுகள் இருந்தா மட்டும் கட்டிலோடு ஒன்னுக்கு ரெண்டுக்குப் போயிட்டிருந்தா பணிவிடை செய்யுறாங்களா என்ன? பதினைஞ்சாயிரம் இருபதாயிரம் சம்பளத்தில் ஆள் ஏற்பாடு பண்ணிடுறாங்க. பண வசதி இல்லாதவங்க ஏதோ ஒரு வழியைக் கையாண்டு மூச்சை நிறுத்திடுறாங்க.”
“அதைச் செய்யவாவது வாரிகள் இருக்கணும் இல்லையா?’
“தேவையில்லை. இனி நடமாடவே முடியாதுங்குற நிலைக்கு ஆளாகும்போது, வாங்கி வைத்திருக்கிற தூக்க மாத்திரையில் ஒரு கைப்பிடி அளவு விழுங்கிட்டு, ‘நான் செத்திட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்னுடும். வந்து எடுத்துட்டுப் போயி அனாதைப் பிணம்னு அடக்கம் பண்ணிடுங்க’ என்று நகராட்சிக்கு ஒரு போன் செய்தி அனுப்பிட்டா எல்லாம் சுமுகமாக முடிஞ்சிடும்” என்று சிரித்தான் தங்கராசு; சிரித்துக்கொண்டே இருந்தான் என்னிடமிருந்து விடை பெறும்வரை. அது விரக்தி கலந்த சிரிப்பு.
என்னால் சிரிக்க இயலவில்லை. அவன் தேர்வு செய்திருந்த வாழ்க்கை முறை பற்றிச் சிந்திக்கும் நிலையிலும் நான் இல்லை.
“தங்கராசுகளின் எண்ணிக்கை இனி வெகுவாக அதிகரிக்குமோ?” என்று மட்டும் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அப்புறமும் எப்போதாவது இப்படிக் கேட்டுக்கொள்வது தொடர்ந்தது.