“ஆன்மா உண்டு உண்டு” என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.
கடவுளை ஏற்காத புத்த மதம் ஆன்மாவின் இருப்பை மறுக்கவில்லை. சைன மதம் நுண்ணுயிர்[பாக்டீரியா] முதலான அனைத்து உயிர்களுக்கும்[மனிதன் உட்பட] ஆன்மா உண்டு என்று நம்புகிறது.
இந்துமதம் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்துமதச் சாமியார்கள் பலரும் பிழைப்பு நடத்துவதே ஆன்மாவை வைத்துத்தான்.
ஆன்மா தீயில் கருகாதது; நீரில் கரையாதது; கண்களுக்குப் புலனாகாதது; என்றென்றும் அழியாமலிருப்பது என்கிறார்களே தவிர, மதவாதிகள் எவரும் அதன் உண்மையான வடிவம் பற்றியோ, தோற்றம் நிகழ்ந்த காலம் பற்றியோ, இயக்கம் குறித்தோ தெளிவான விளக்கம் தந்ததில்லை.
‘மண்ணுலகம் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. உயிர்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது' என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆதிமனிதனும் அந்தக் காலக்கட்டத்திலேயே தோன்றிவிட்டதாகச் சொல்கிறார்கள்[மனிதர்களுக்குச் சிந்திக்கும் அறிவு வாய்த்தது எப்போது என்பது பற்றிய ஆய்வு இங்கு அவசியமற்றது]. https://ta.wikipedia.org/
ஆன்மாவைக் கடவுள் எனப்படுபவர் தோற்றுவித்தார் என்றால், உயிர்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் அவர் ஆன்மாக்களையும் தோற்றுவித்திருத்தல் வேண்டும்[ஆன்மா தானாகத் தோன்றியது என்றால், அனைத்தையும் படைத்தவன் அவனே என்னும் கோட்பாடு அடிபட்டுப்போகிறது].
உயிர்கள் தோன்றுவதும் இருப்பதும் அழிவதுமான நிகழ்வுடன்[வெகு அற்பம்] ஒப்பிடும்போது அதற்கு முன்பே[கோடி கோடிக் கணக்கான ஆண்டுகள்; அவற்றை அளவிடுவது சாத்தியமில்லை] அண்டவெளியில் நட்சத்திரங்களும் கோள்களும் தோன்றுவதும் அழிவதுமாக இருந்ததும் இருப்பதும் வெகு பிரமாண்டம்; பிரமிக்க வைப்பவை.
ஆக, கடவுளின் படைப்பில்[அல்லது தற்செயலான இயற்கை நிகழ்வில்] தோன்றுதலும் இருத்தலும் அழிதலும் என்பது பொதுவானதொரு தொடர் நிகழ்வு.
இந்நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கென்று எந்தவொரு ஏற்பாட்டையும் கடவுள் செய்ததாகத் தெரியவில்லை. மகான்களும் ஞானிகளும் அவதாரங்களும்கூட ஏதும் சொன்னதில்லை.
இது தேவை எனின், உயிர்களின் செயல்பாடுகளை[பாவம், புண்ணியம் என்பவையெல்லாம் ஆன்மிகவாதிகளின் கற்பனை] ஏதேனும் ஒரு வகையில் பதிவு செய்வது கடவுளுக்கான கடமை என்னும்போது, அவர் தனக்கு நிகராக அழிவே இல்லாத ஆன்மாக்களைப் படைப்பதற்கான அவசியம் ஏதுமில்லை.
தோன்றுவதும் இருப்பதும் அழிவதும் மட்டுமே நிரந்தரமாய் நிகழக்கூடியவை என்பது மீண்டும் நினைவுகூரத்தக்கது.
மனிதர்களுக்குப் பரிணாம வளர்ச்சியின் விளைவாக ஆறறிவு வாய்த்திருக்கிறது. அதைக்கொண்டு, தங்களின் செயல்பாடுகளில் நன்மை எது தீமை எது என்று பகுத்தறிந்து, சக மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் இயன்றவரை உதவிகள் செய்து வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்!
குறிப்பு:
ஆன்மா குறித்த மேற்கண்ட கருத்துகளை நீங்கள் ஏற்பீர்களா, புறக்கணிப்பீர்களா என்பது பற்றி ஏதும் அறியேன். ஆயினும், புதியதொரு கோணத்தில் அதை நான் ஆராய்ந்திருப்பதைப் பாராட்டுவீர்கள் என்பது என் நம்பிக்கை. ஹி...ஹி...ஹி!!!