சனி, 13 மே, 2023

அவளும் அவனும், ‘ஒரு முறை’ உடலுறவும்![‘காதல்&காமம்’ கதை]


“வாணி, வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?” 

குரலை வைத்து, செல்ஃபோனில் பேசுபவன் குமார் என்பதை அறிந்து, பதில் சொல்லாமல் காலதாமதம் செய்தாள் வாணி.

“சொல்லு வாணி, நீ மட்டும்தான் இருக்கியா?’

“எதுக்குக் கேட்குறே?”

“வந்து ஒரு மாசம் ஆச்சு. உன் வீட்டுக்கு வரவான்னு கேட்டபோதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டே. லீவு முடிஞ்சி நாளை அமெரிக்கா திரும்புறேன். மறுபடியும் எப்போ வருவேன்னு தெரியாது. எப்போதும் உன் நினைவாகவே இருக்கேன்..... ”

இடைமறித்தாள் வாணி: “மேலே சொல்லு.”

“கல்யாணத்துக்கு முன்பு நீயும் என்னை மனப்பூர்வமா நேசிச்சிருக்கே. சேர்ந்து சினிமாவுக்குப் போயிருக்கோம்; முத்தங்களைப் பகிர்ந்திருக்கோம். உன்னைப் பெத்தவங்க கட்டாயப்படுத்தி உனக்குக் கல்யாணம் செய்துட்டதால அது மட்டும் நடக்கல. நீ சம்மதிச்சா ஒரே ஒரு தடவையாவது ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம்.  அப்புறம், அந்த நினைப்போடவே காலத்தைக் கழிச்சிடுவேன்.”

“உன்னைச் சந்தோசப்படுத்த என்னை உயிருக்குயிரா நேசிச்ச என் கணவருக்கு நான் துரோகம் செய்யணுமா?” -வாணியின் குரலில் கடுமை பரவியிருந்தது.

“அவர்தான் போன வருசமே விபத்தில் இறந்துட்டாரே. வீணா துரோகம் அது இதுன்னு மனசைபோட்டுக் குழப்பிக்காதே. சம்மதம் சொல்லு வாணி.” -கெஞ்சும் பாவனையில் கேட்டான்  குமார்.

சற்றே யோசித்த பிறகு பேசத் தொடங்கினாள் வாணி: “நீ ஆண்பிள்ளை. அந்த ‘ஒரு தடவை’ சந்தோசத்தோடு காலம் கழிச்சிடுவேன்னு சொல்லுறதெல்லாம் சும்மா. அதுக்குன்னு உனக்குப் பெண்டாட்டி இருக்கா. ரொம்பத் திணவெடுத்தா, நீ கள்ளக் காதலிகளையும் தேடிக்குவே. ஆண்பிள்ளை என்பதால் ஊர் உலகம் கண்டுக்காது. பெண்ணாக இருந்தா, அது படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமில்ல.”

சில வினாடித் தாமதத்திற்குப் பிறகு தொடர்ந்தாள் வாணி: “ஒரு தடவை உன்னோடு கள்ள உறவுச் சுகத்தை அனுபவிச்சிட்டா அப்புறமும் அதுக்காக மனசு கிடந்து அலையும். ஒரு பெண்ணாக இருந்தாலும், அதை அடக்குறதும் முடக்கி வைக்கிறதும் அவ்வளவு சுலபமில்லை மாஜிக் காதலனே.....

நான் ஒரு பெண்; சுய சம்பாதனை இல்லை.  மாமனார் மாமியார் ஆதரவில்தான் வாழ்ந்திட்டிருக்கேன். அவங்க கவுரவம் என்னால் சிதைஞ்சிடக்கூடாதுன்னு நினைக்கிறவ நான். என் கணவரின் நல்ல குணங்களை அடிக்கடி நினைவுபடுத்திக்கிறது,  ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமா பாடம் சொல்லித் தருவது, துணி தைக்கிறது, சமைக்கிறது, படிக்கிறதுன்னு பல வகையிலும் மனசைக் கட்டுப்படுத்திட்டுச் சந்தோசமா காலம் கழிக்கிறேன். இந்தச் சந்தோசத்தோடவே வாழ்ந்து முடிக்க முடியும்னு மனப்பூர்வமா நம்புறேன்.  இனியும் “சந்திப்போம், இன்பம் துய்ப்போம்”னு சொல்லித் தொல்லை தர வேண்டாம். போய் வா... மன்னிக்கணும், வராதே போ நண்பா.”  

தொடர்பைத் துண்டித்தாள் வாணி.
                               *   *   *   *   *
*****இது, உண்மை நிகழ்வைக் காட்சிப்படுத்தும் கதை! கற்பனைக் கலப்பு சுமார் 10% மட்டுமே.