அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 1 ஜூன், 2023

இறை வழிபாடும் ஓர் அறிவுஜீவியின் அர்ச்சனைக் கவிதையும்!!!

ர் ஊராகச் சென்று, இல்லாத கடவுளைப் போற்றித் துதிபாடுவதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லாத பக்திப் பித்தர்களால் படைக்கப்பட்டவையே ‘பக்திப் பாடல்’கள்[அவ்வகைப் பித்தர்களில் ஒருவரான மாணிக்கவாசகன் திருவாய் மலர்ந்தருளிய பாடல்களில் ஒன்று கீழே இடம்பெற்றுள்ளது].

இவர்கள் பாடிய பாடல்கள் ஆன்மிகவாதிகளால் பல நூறு ஆண்டுகள் பரப்புரை செய்யப்பட்டதன் விளைவே மூடர்களின் எண்ணிக்கை மிகப் பலவாக இருப்பதற்கான காரணம் ஆகும்.

இவர்களைத் திருத்துவதற்குச் சீரிய சிந்தனையாளர்கள் பலரும் மேற்கொண்ட முயற்சி நிழலுக்குப் பாய்ச்சிய நீரானது.

                                  *   *   *   *   *

மாணிக்கவாசகனின் பாடல்:

//அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே// 

*   *   *   *   *
கடவுள்களைப் புகழ்ந்தேத்தும் பக்திப் பாடல்களையே வாசித்துப் பழக்கப்பட்ட வாசகர்களுக்கு, அடியேன் படைத்த பின்வரும் ‘அர்ச்சனை’க் கவிதை புதியதொரு அனுபவத்தை நல்கும் என்பது என் நம்பிக்கை!
கவிதை:

ஓ..... சிவபெருமானே,
நீ எனக்கு
அம்மையல்ல, அப்பனும் அல்ல.

அன்பினில் விளைந்த ஆரமுதமா நீ?
அல்ல அல்ல.

உயிர்களுக்கு அளப்பரிய துன்பங்களைக்
கொடுத்த நீ ஆலகால
நஞ்சினும் கொடியவன்!

நான் பொய் பேசுபவன் அல்ல;
உன்னைப் பொய்யாய்ப் புகழ்பவனும் அல்ல.

அது.....
புத்தி கெட்ட உன்
பக்தர்கள் செய்யும் வெட்டி வேலை!

என் உடம்பு
என்றோ ஒரு நாள் புழுத்து நாறி
மண்ணோடு மண்ணாவது நிச்சயம்.
இந்தப் பொய் உடம்போடு மண்ணில்
என்னை வாழப் பணித்த நீ
பொல்லாதவன்; ‘அயோக்கியன்’ என்று சொல்லவும்
எனக்கு ஆசைதான்.

ஆனால்.....

உன் பக்தர்களின் மனம் புண்படும் என்பதால்
அதைத் தவிர்க்கிறேன்!

உன் பாதம் செம்மையானதாம். 

இந்த நொடியில் இங்கிருக்கும் நீ
அடுத்த நொடியில் அண்டசராசரம் எங்கும் 
ஆவியாய் உருமாறிப் பவனி வருவாய்;
உருவம் தவிர்த்து அருவமாக அணுக்கள் சுமக்க 
அலைந்து திரிவாய்.
உனக்கு 
எதுக்கய்யா பாதமும் பாதாதிகேசமும்?

உன்னைப் புகழ்வதும் போற்றுவதும்
உன்னால் ஆறறிவு மழுங்கடிக்கப்பட்டவர்களின் 
செயல்.

நான் ஓர் அறிவுஜீவி.
அனுதினமும் உன்னைச் சாடுவது 
என் அன்றாடக் கடமைகளில் ஒன்று.

அது.....
பக்திமான்களைப் பகுத்தறிவாளர் ஆக்கும்
என்பது என் நம்பிக்கை.

உன் மீது தாக்குதல் தொடுக்கும்
என்னை நீ தண்டிக்க நினைக்கிறாய்தானே?
“ஆம்” என்றால்.....
என் ஆயுள் முடிவதற்குள் 
அதைச் சாதித்துக் காட்டு!

                      *   *   *   *   *
***இந்த அர்ச்சனைக் கவிதை, இந்துக் கடவுள்களுக்கு மட்டுமல்ல, வேறு எந்தவொரு கடவுளுக்கும் பொருந்துவதாகும்!