திங்கள், 19 ஜூன், 2023

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!!!

னிதன் விலங்காக வாழ்ந்த காலத்தில், இனவிருத்திக்காகச் சிறிது நேரமே உடலுறவு கொண்டதால் இது சிற்றின்பம் எனப்பட்டது. 

இது சிற்றின்பம் எனப்பட்டதால் ‘பேரின்பம்’ என்று ஒன்று இருந்தாக வேண்டிய அவசியமில்லை. கடவுளைத் துதித்தால் பேரின்பம் கிட்டும் என்று பக்திமான்கள் சொல்வதைப் புத்தி உள்ளவர்களால் ஏற்க இயலாது.

‘இன்பம்’ என்பது உணர்தல் சம்பந்தப்பட்டது. அனுபவிக்கிற சூழலையும் அனுபவிப்பவரின் மனநிலையையும் பொருத்து அதன் அளவு கூடும்; குறையும்.

இந்த இன்பத்தைப் பெறுவதற்குச் சமூகம் சட்டரீதியாக வழங்கியுள்ள அனுமதியின் பெயர் ‘திருமணம்’.

இந்தத் திருமண முறை எதிர்பார்த்த அளவுக்கு இருபாலருக்கும் இன்பம் நல்குகிறதா?

“அன்று எப்படியோ, இன்று இல்லை” என்பதே நம்மில் மிகப் பெரும்பாலோரின் பதிலாக இருத்தல்கூடும்.

‘வாலிபம்’ துள்ளலுடனும் துடிப்புடனும் இயங்கத் தொடங்கிவிடுகிற பதின் பருவத்திலேயே ஆணும் பெண்ணுமாக இணைந்து சுகித்திருப்பதற்கான வாய்ப்பு, மனிதர்கள் ஒரு சமூகமாக இணைந்து, கட்டுப்பாடுகள் விதித்து வாழத் தொடங்கியபோதே பறிக்கப்பட்டுவிட்டது[அதன் விளைவாக, விதி மீறிய கள்ள உறவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல இடர்ப்பாடுகள் நேர்கின்றன என்பதால் இவ்வுறவு புறக்கணிக்கத்தக்கதாகவும் ஆனது].

பல ஆண்டுகள் படித்துப் பட்டங்கள் பெற்று, வேலை தேடி, நிரந்தர வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்துபோனதால், வயது இருபதைக் கடந்த பிறகும்கூட, ஓர் இளைஞன் உடலுறவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது கனவிலும் பகற்கனவிலும் மட்டுமே சாத்தியமாகிப்போனது.

பெரும்பாலான திருமணங்கள் 30 வயதுக்குப் பிறகே நடைபெறுகின்றன.

முப்பத்தைந்து, நாற்பது என்று நடுத்தர வயதை நோக்கிப் பயணிக்கும்போதுதான் இனிய இல்லற இன்பத்தை நுகரும் வாய்ப்பு பலருக்குக் கிட்டுகிறது.

சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாகப் பொருத்தமான துணையைத் தேடிக்கொள்வதும் அத்தனை எளிதாக இல்லை. 

இணை சேர்ந்த பிறகும், பெரும்பாலான தம்பதியருக்கு மனப் பொருத்தமும், உடற்பொருத்தமும் அமைவதில்லை.

கணவனைப் போலவே மனைவியும் வேலை தேடிச் சம்பாதிப்பது காலத்தின் கட்டாயமாகவிட்ட சூழலில், ஓய்வு கிடைத்து, ஆர அமற ஒட்டி உறவாடி மகிழ்வதற்கும் போதிய அவகாசம் இல்லாமல்போனது.

பிள்ளைகள் பெற்று, அவர்களை உரிய முறையில் வளர்த்து ஆளாக்குவது தவிர்க்க இயலாத கடமை என்றான பிறகு, போதும் என்னும் அளவுக்குக் கூடிக் களிப்பதும் அரிதானது..

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால்.....

சிற்றின்பம் என்று சொல்லப்படுகிற உடலுறவு இன்பத்தைத் துய்த்து மனநிறைவு பெறுவது மிக மிக மிகக் குறைந்துவிட்டது.

கூடிக் களிக்கும் நேரத்தைக் கூட்டுவதற்கு வழியே இல்லாததால், அவ்வப்போது நாம் அனுபவிக்கிற ‘சிறு சிறு’ இன்பங்களை அதிகரித்து ஓரளவுக்கேனும் மன நிறைவு பெறுவது புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறது.

அதென்ன சிறு சிறு இன்பங்கள்?


காலையில் காபி குடிக்கிற பழக்கம் இருப்பவர்கள், ‘மடக் மடக்’ என்று ஒரே மூச்சில் தம்ளரைக் காலி செய்யாமல், மெல்ல, மிக மெல்ல, சுவைத்துச் சுகானுபவம் பெறுதல் சிறு இன்பமே. அதற்கான நேரத்தை அதிகப்படுத்தலாம். 

ஓய்வு நேரங்களில் ‘தொ.க.’ பார்ப்பது, ஓவியம் வரைவது, பாடுவது, பாடக் கேட்பது, எழுதுவது, படிப்பது, அருகில் பூங்காவோ ஆற்றங்கரையோ குளத்தங்கரையோ கடற்கரையோ இருந்தால் அங்குச் சென்று இயற்கை அழகை ரசிப்பது போன்றனவற்றை வழக்கமாக்கிக்கொள்ளலாம். இவற்றிற்கு நாம் ஒதுக்கும் கால அவகாசத்தை, சூழ்நிலையைப் பொருத்து இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ, அவற்றிற்கும் மேலானதாகவோ ஆக்கலாம்.

எதிர் வீட்டுக் குழந்தைகைளின் அழகையும்[ஆண்கள் குமரிகளை ரசிப்பதையும், குமரிகள் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதையும் தவிர்த்திடுக] அவை செய்யும் குறும்புத்தனங்களையும் தவறாமல்  பார்த்துச் சுகிப்பது தவிர்க்கவே கூடாதது.

சாலை ஓர மர நிழலில் நின்றுகொண்டு வாகனங்களில் பயணிக்கும் விதம் விதமான மனிதர்களையும், வினோதமான நிகழ்வுகளையும் வேடிக்கை பார்க்கலாம். அதற்கென, சற்றே அதிக நேரம் ஒதுக்கலாம்.

பணி நிமித்தம் எங்கெல்லாமோ அலைந்து திரிந்ததில் அதிக தாகம் எடுத்தால்,  நம் பிரியத்திற்குரிய குளிர்பானத்தை வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்தால், நீண்ட நேரம் சொர்க்கத்தில் உலவிவிட்டு வந்த அனுபவம் கிடைக்கும்.

நான்கு பேர் சுற்றியிருக்கும் போது மறைவிடங்களில் அரிப்பு எடுத்தால், கொஞ்சம் மறைவான இடத்திற்குச் சென்று, பொறுமையாகச் சொறிந்துகொள்வதும்கூட ஒரு வகைச் சுகமே.

கொஞ்சம் யோசித்தால், ஆணோ பெண்ணோ, பிறிதொருவரைச் சார்ந்திராமல், இவ்வாறான சிறு சிறு இன்பங்களைப் பெறுவதற்கான வழிகள் நிறையவே தென்படும்.

யோசியுங்கள்.

தனிமையில் சிறு சிறு இன்பங்களைத் துய்த்திடுங்கள்! துயரங்கள் குறைந்து மன நிறைவுடன் வாழ்ந்திடுங்கள்.

வாழ்த்துகள்!