செவ்வாய், 20 ஜூன், 2023

“தமிழிசை[ஆளுநர்] அம்மா, நீங்க ரொம்பப் பெரியவங்க! வழிநடத்துங்க தாயே!!”

தெலங்கானா சென்றிருந்த ஆளுநர் தமிழிசை அவர்கள் அங்கிருந்து புதுச்சேரி திரும்பி, பின்வாசல் வழியாக[செயிண்ட் லூயிஸ் வீதி]   தம் மாளிகையில்[ராஜ்நிவாஸ்] நுழைந்தார்.

நுழைந்தபோது.....

ஆளுநர் மாளிகைப் பணியாளர்கள் அவருக்குத் 'திருஷ்டிப் பூசணிக்காய்' சுற்றி, அதை மாளிகைக்கு எதிரே உள்ள சாலையில் போட்டு உடைத்தார்களாம்[அப்புறம் என்ன நடந்தது என்பதைக் கொஞ்ச நேரம் கழித்துத் தெரிந்துகொள்ளலாம்].

                                           *   *   *   *   *

ம்மா தமிழிசைக்கு நம் வணக்கம்.

நீங்க ஒரு மருத்துவர்[டாக்டர்]; மருத்துவ அறிவு மட்டுமல்ல, நிறையவே ‘பொது அறிவியல்’ அறிவும் உள்ளவங்க.

அறிவியல் அறிவு உள்ளவங்க பெரும்பாலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவங்க. நீங்களும் அப்படிப்பட்டவர்தான் என்பது என் நம்பிக்கை. 

ஆனால், அறிவாளியான நீங்க திருஷ்டிப் பூசணியால உங்க தலையைச் சுத்தித் தரையில் போட்டு உடைக்க அனுமதியளிச்சது என்னைப் போன்றவர்களுக்குக் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருஷ்டியைக் ‘கண்ணேறு’ன்னும் சொல்வாங்க.

நம்ம எதிரிங்க நம் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாம, நம்மப் பொறாமையோடு பார்க்கும்போது நமக்கு ஊறு[கண்ணூறு] உண்டாகுமாம். இது, நம்ம முன்னோர்களில் சிந்திக்கத் தெரியாத கூமுட்டைகள் கட்டிவிட்ட கதை.  

அடுத்தவன் கெட்ட எண்ணத்தோடு பார்த்தா ஒருவன் கெட்டுப்போவான்னா அப்படிக் கெட்டுப்போனவங்க உலகில் எத்தனை பேர்? அதுக்கு அறிவியல் ரீதியான ஆதாரம் இருக்கா?

ஆதாரம் இருக்கோ இல்லையோ, உங்க உள் மனசு இதை நம்புதுன்னா, திருஷ்டிப் பூசணி பற்றிப் புராணக் கதை ஒன்னு இருக்கு. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.

கதை ரொம்ப நீளம் என்பதால் அதன் முடிவு மட்டும் இங்கே.

வெள்ளைப் பூசணி இருக்கில்லையா, அதுக்குள்ள ஒரு ராட்சசன் இருக்கானாம். அவன் கெட்ட கெட்ட ஆவிகளையோ பிசாசுகளையோ கண்டா அலாக்கா தூக்கி வாயில் போட்டு விழுங்கிடுவானாம்.

அந்த ராட்சசன் உங்களை மாதிரி திருஷ்டி பட்டவங்களுக்கு[கெட்ட ஆவிகளும் பிசாசுகளும் அவங்களைச் சுத்திட்டே இருக்குமாம்] உதவுவானாம்.

வெள்ளைப் பூசணியைப் பிளந்து உள்ளே குங்குமத்தைத் திணிச்சா, பூசணி செக்கச் செவேல்னு ஆயிடும் இல்லையா?

தலையைச் சுத்திக் கீழே போட்டு உடைச்ச உடனே, உடைஞ்சு சிதறிய பூசணியில் தெரிகிற சிவப்புக்குள்ளதான் ராட்சசன் மறைஞ்சிருப்பானாம். “ஐயோ, இதுலதான் நம்மை விழுங்குற ராட்சசன் பதுங்கியிருக்கான்”னு சொல்லிட்டு தலையைச் சுத்திட்டிருந்த ஆவிகளும் பிசாசுகளும் ஓடியே போயிடுமாம்.

ஆளுநர் அவர்களே,

இந்தக் கதையை[யும்] நீங்க நம்புறீங்களா?

“ஆம்” என்றால்.....

தாங்கள் திருஷ்டி சுற்றிப் போட்டுக்கொண்டதில் தவறே இல்லை.

இங்கே, தங்களிடம் சொல்லத் தவறியது ஒன்று உண்டு.

உங்க மாளிகை ஊழியர்கள் உங்க தலையைச் சுத்தித் தரையில் போட்டுடைத்த பூசணிச் சிதறல்களை அப்புறப்படுத்தாமல் போனதால், வாகனத்தில் போன ஓர் ஆள், வண்டி அதில் வழுக்கிக் குடைசாய்ந்ததால் கீழே விழுந்து காயம்பட்டார் என்பது செய்தி[தினகரன், 20.6.2023-கோவைப் பதிப்பு]

சிறு காயம்தானாம். படுகாயமடைந்து சிகிச்சை பலனளிக்காமல் மண்டையைப் போட்டிருந்தால்.....

உங்களின் பரிந்துரையின் பேரில் இழப்பீடு வழங்கப்பட்டுவிடும் என்பதால் இங்கே  பெரிதாகக் கவலைப்பட ஒன்றுமில்லை.

தவறாக ஏதும் எழுதியிருந்தால் மன்னிச்சிடுங்க தமிழிசை அம்மா!