கர்நாடகாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்[ஆணுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடப்பது கருத்தில் கொள்ளத்தக்கது] திருமணம் நடந்தது.
புது மாப்பிள்ளையான மணமகன், தன் மனைவியுடன் அவனது தாயார் வீட்டிற்குச் சென்றான். அங்குக் கிட்டத்தட்ட 28 நாட்கள் இருவரும் தங்கியிருந்தனர். இருந்தபோதும், அவர்களுக்குள் தாம்பத்திய உறவு நிகழவில்லை[இது செய்தி. கூடுதல் விவரம் பதிவின் பிற்பகுதியில்].
* * * * *
ஆண்மகன் அந்த இச்சையைத் தன் மனைவியிடம் அப்பட்டமாக வெளிப்படுத்துவான். மனைவியோ மலையளவு காமம் சுமந்திருந்தாலும் அடங்கியே இருப்பாள். அவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.
காத்திருப்பதற்கும் ஓர் எல்லையுண்டு.
அவன் காலம் கடத்துவானேயானால்…..
எந்தவொரு மனைவியும், “படுக்க வா” என்று கூச்சநாச்சமின்றி அழைப்பு விடுக்கமாட்டாள்[விதிவிலக்கு உண்டு?!]. அது நம் பெண்களுக்குரிய பிறவிக் குணம்.
அது நடக்காமலே இருந்துவிட்டால், அதைக் கட்டுப்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள். விரதம் இருப்பது, அரை வயிற்றுக்கு உண்பது, முழுப் பட்டினி கிடப்பது, காம உணர்வைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பது, அடிக்கடி கோயிலுக்குப் போவது என்று அதற்கான வழிமுறைகளைக் கையாள்வார்கள்.
இதனால் பயன் ஏதும் விளையாதபோது, அடக்கியும் அடங்கியும் வீட்டோடு முடங்கியும் கிடப்பார்கள். அந்நிலை நீடித்தால், மனநிலை பாதிக்கப்பட்டுப் பைத்தியங்களாக ஆவதும் உண்டு.
இப்படியான பாவப்பட்ட பெண்களுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று முடிவெடுத்து, பேய் ஓட்டுதல், மாந்திரீகம் செய்தல் என்று பாடாய்ப்படுத்துவார்கள் நம் மக்கள்.
சில துணிச்சல்காரிகள், கள்ளக் காமுகனைத் தேடிக்கொண்டு அவனுடன் ஓடிப்போவது உண்டு. அவனால் கைவிடப்படும்போதோ, அது நாலு பேருக்குத் தெரியவரும்போதோ தூக்கில் தொங்கிவிடுவதும் நடக்கிறது.
கள்ளக்காதலனுடன் ஓடிப்போய், ஒரு கட்டத்தில், ஒவ்வாத சூழலில் கொலை செய்யப்படுவதும் உண்டு.
ஆக, கட்டிய கணவன் என்பவன், தன்னை ஆகச் சிறந்த ஆன்மிகவாதி என்று சொல்லிக் கோயில் கோயிலாக அலைந்துகொண்டும், பக்தி முத்திப்போய்க் கண்ட கண்ட போலிச் சாமியார்களை தேடித் திரிந்துகொண்டும்[இதன் காரணமாக ஆண்மைக் குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது] மனைவிக்குரிய தாம்பத்திய சுகம் அளிக்கும் கடமையைச் சரிவரச் செய்யாதபோது[செய்தாலும் வரம்பு மீறுகிற பெண்களும் உளர்] அந்த மனைவியின் வாழ்க்கை முற்றிலுமாய்ச் சீரழிகிறது; சிதைகிறது.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பெண் படித்தவளாகவும், பொது அறிவு படைத்தவளாகவும் இருந்ததாலோ என்னவோ, மேற்குறிப்பிட்ட அவலங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல், துணிச்சலுடன் குடும்ப நீதிமன்றத்தை நாடினாள்.
தன் கணவனுக்கு எதிராகக் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் ‘இந்துத் திருமணச் சட்டப் பிரிவு 12(1)(ஏ)இன் கீழ்’ வழக்குத் தொடுத்தாள்.
'என் கணவர் என்னுடன் தாம்பத்திய உறவு கொள்வதே இல்லை. அவர் எப்போதும் ஆன்மீக வீடியோக்களையும், பிரம்மகுமாரி சமாஜத்தின் வீடியோக்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் எப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டாலும்[என்ன கொடுமை ஐயா இது!], தாம்பத்தியம் வேண்டாம் என்று கூறுகிறார். அவருடன் சேர்ந்து வாழ்வது எனக்குக் கொடுமையாக உள்ளது. எனவே எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
இவ்வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், கடந்தாண்டு நவம்பர் 16ஆம் தேதி, தம்பதிகளின் திருமணத்தை ரத்து செய்தது.
விவாகரத்து வாங்கிய கையோடு, கணவன் திருமணத்திற்குப் பிறகு தாம்பத்தியத்தை மறுத்துக் கொடுமை செய்ததற்காக அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்னாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாள் அந்தப் பெண்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றத் தனி நீதிபதி எம்.நாகபிரசன்னா, 'மனுதாரரின் கணவர் மீதான ஒரே குற்றச்சாட்டு, அவர் ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர் என்பதுதான். காதல் என்பது தாம்பத்திய உறவால் மட்டும் வருவதில்லை. ஆன்மாவுடன் ஆன்மாவை இணைப்பது[அது புதைகுழிக்குப் போன பிறகு சாத்தியம் ஆகலாம்?] என்று அவர் நம்புகிறார். அவர் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 12(1)(இ)இன் கீழ், தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருப்பது கொடுமையானது என்று கூறப்பட்டாலும், ஐபிசி 498ஏ பிரிவின் கீழ், கணவர் தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருப்பதைக் கொடுமையாகக் கருத முடியாது. கணவன் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க முடியாது’ என்று சொல்லிக் கிரிமினல் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.
அந்தரங்க உறவு விசயத்தில், கணவனால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிற ஒரு பெண்ணின் மனநிலையையும், அவளுக்கு நேரும் அளவிறந்த பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
எதிர்காலத்திலேனும் இம்மாதிரி வழக்குகளில் அவர்கள் ஆழ்ந்து சிந்தித்துத் தீர்ப்புகள் வழங்குவது, வரவேற்கத்தக்கதாகவும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமையும் என்பது நம் எண்ணம்.
+++++++++++++++++++++