எங்கள் வீட்டிலிருந்து எட்டி நடைபோட்டால் பத்து நிடங்களில் பொதுநூலகத்தை அடைந்துவிடலாம்.
நூலகத்திற்கு எதிரே நான் வசிக்கும் பேட்டையையும் கடைவீதியையும் இணைக்கும் தார்ச்சாலை.
நூலகத்தை ஒட்டியிருக்கும் மண்தரையில் காய்கறிக்காரி, கடலைபொறிக்காரி, இளநீர் விற்பவர் ஆகியோர் கடைவிரித்திருப்பார்கள். அவர்களையடுத்து சற்றே வயதான ஒரு பிச்சைக்காரரும் இருப்பார்.
இருக்கிற கொஞ்சூண்டு அறிவை அபிவிருத்தி செய்வதற்காக அவ்வப்போது நான் நூலகத்திற்குச் செல்வதுண்டு.
அன்று நான் சென்றபோது, வழக்கம்போல அந்தப் பிச்சைக்காரர் கையேந்தினார்.
சற்றே யோசித்த பிறகு அவரிடம் ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன்[காரியமாகத்தான்].
புருவம் சுருக்கி, விழிகளில் வியப்பைத் தேக்கி, “அம்பது ரூபாய் குடுத்திருக்கீங்க. மிச்சம் குடுக்குறதுக்கு என் கிட்டே ஏதுங்க பணம்?” என்று சொல்லி, தரையில் விரித்திருந்த அழுக்கேறிய துண்டுத் துணியில் கிடந்த கொஞ்சம் சில்லரையைக் காட்டினார்.
“ஐம்பதும் உனக்குத்தான்” என்று நான் சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
“உனக்கு எந்த ஊர்?” -கேட்டேன்.
சொன்னார்.
“குடும்பம்?”
“இருக்குங்க. பேரன் பேத்திகள் எல்லாம் இருக்கு. பெண்டாட்டியோடு பிணக்கு. பிள்ளைகள் எல்லாருமே அவள் பக்கம். வாழ்க்கை வெறுத்துப்போச்சு. வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். வயித்துப்பாட்டுக்காகப் பிச்சை எடுக்கிறேன்’ என்று நாற்பது ஆண்டுகள் போல நடத்திய வாழ்க்கைப் போராட்டத்தை நான்கு வரிகளில் சுருக்கிச் சொன்னார்..
‘மனநிலை பாதிக்கப்பட்டவரோ?’ என்னும் என் சந்தேகம் தீர்ந்தது.
அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கலாம்; ஆனாலும், உடம்பு திடகாத்திரமாகவே இருப்பது தெரிந்தது.
“நல்லாவே இருக்கீங்க. எதுவும் தொழில் செஞ்சு பிழைக்கலாமே. எனக்குத் தோணினதைச் சொல்லிட்டேன். யோசனை பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு நூலகம் நோக்கி நகர்ந்தேன்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் அன்று நூலகத்துக்குப் புறப்பட்டேன்.
வழக்கத்துக்கு மாறாக, பிச்சைக்காரர் என் கண்ணில் படவில்லை. ‘நம் அறிவுரை வீண்போகவில்லையோ’ என்று என்னை நானே சிலாகித்தவாறு கடைகளைக் கடந்தபோது.....
“ஐயா நலமா இருக்கீங்களா?” என்ற விசாரிப்பு என்னை நின்று திரும்பிப் பார்க்க வைத்தது.
நெற்றியில் பட்டையும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையுமாக மங்களகரமாகக் காட்சியளித்த ஒரு கிளி சோதிடர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். சில வினாடிகள் அவகாசத்திலேயே அவர் நான் அறிந்திருந்த முன்னாள் பிச்சைக்காரர் என்பது புரிந்தது.
“நான் திருந்திட்டேனுங்க. உங்க புத்திமதி என்னைத் திருத்திடிச்சி” என்று நன்றியுணர்ச்சி பொங்கச் சொன்னார்.
சனங்களை முட்டாள் ஆக்குகிற இந்தத் தொழிலை[கிளி சோதிடம்]ச் செய்யுறதைவிட, முன்னாள் பிச்சைக்காரத் தொழில் எவ்வளவோ மேல். அதனால யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்ல. நான் புத்தி சொல்லித் தப்புப் பண்ணிட்டேன்” -இது, அவர் ரொம்பவே வருத்தப்படுவார் என்பதால், சொல்ல நினைத்து நான் சொல்லாமல் தவிர்த்தது!
++++++++++
***இது நடந்த நிகழ்வு என்றால் நம்புவீர்களா?
வேண்டாம்.
ஒரு திடகாத்திரப் பிச்சைக்காரருக்குப் புத்தி சொல்ல நினைத்து, “ஒத்தை ரூபா போட வக்கில்ல. புத்தி சொல்ல வந்திட்டாரு, புத்தி” என்று கடுப்படித்தால் என்ன செய்வது என்று பயந்து பின்வாங்கிய சூழலில் உருவான கதை இது!
ஹி... ஹி... ஹி!!!