அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 24 ஜூன், 2023

“இந்தியா பிரியக்கூடும்[பல நாடுகளாக]”... இது ‘ஒபாமா’ சொன்னது; சொல்லாதது?

//தென்ஸில் பிரபலப் பத்திரிகை ஒன்றுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ‘பராக் ஒபாமா’ அளித்த பேட்டியில், ‛‛இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு முக்கியமானது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுக்காக்கப்படாவிட்டால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிவதற்கான[பிளவுபடுவதற்கான] வாய்ப்பு அதிகமாகும்” என்று கூறியுள்ளார்//*

இது நேற்றையச்[23.06.2023] செய்தி.


‘இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர்’ என்று ஒபாமா குறிப்பிட்டது இந்தியாவிலுள்ள பல மதங்களைச் சார்ந்த சிறுபான்மையினரை.

மதச் சார்பு மட்டுமல்ல, ‘இந்தி’யைத் தாய்மொழியாகக் கொண்ட ‘இந்தி’யரைத் தவிர, பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள இனச் சிறுபான்மையிரும் இங்குப் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை ஒபாமா அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுபான்மை இனத்தவர் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில்,  அங்கு ஆட்சி செய்யும் அரசுகளுக்குரிய அதிகாரங்களைப் பறிப்பது; இந்தி மொழியைத் திணிப்பது; அதை வளர்ப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவிடுவது; அதிகாரத்தைப் பயன்படுத்தி அமலாக்கத் துறையினரையும், வருமானவரித் துறையினரையும், லஞ்ச ஒழிப்புத் துறையினரையும் ஏவி, மாநில அரசுகளின் நற்பெயருக்குப் பங்கம் விளைவிப்பது,
ஆளுநர்கள் மூலம் மூடநம்பிக்கைகளைத் திணித்து மக்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிப்பது; மாநில மக்களின் மொழிப் பற்றையும் இனப்பற்றையும் மழுங்கடிப்பது; மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது; மாற்றுக் கட்சியினர் வசமுள்ள  ஆட்சியைக் கலைப்பது
போன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால்  சிறுபான்மை இனத்தவர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளார்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கமாட்டார்.

அறிந்திருந்தால்.....

“இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று சொல்லியிருக்கமாட்டார். மாறாக.....

“இந்தியா பிளவுபடும்; உடைந்து சிதறும். இது உறுதி” என்று கடும் எச்சரிக்கை விடுத்திருப்பார்.

ஒபாமாவின் இந்த எச்சரிக்கை எவ்வகையிலும் நமக்குப் பயன் அளிக்க வாய்ப்பில்லை, இதை நம் ஒன்றிய அரசு ஒரு பொருட்டாக மதிக்காது என்பதால்.

எனினும், இங்குள்ள சிறுபான்மை இனத்தினர் ‘இந்தி’யர் என்னும் பெரும்பான்மையினருக்குள் முற்றிலுமாய்க் கரைந்துபோவதைத் தடுக்க, உரிய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது, இந்திய ஒருமைப்பாட்டின் மீது அசையாத நம்பிக்கையும், நாட்டின் நலனில் அக்கறையும் கொண்ட நல்ல தலைவர்களின் கடமை ஆகும்.
                                             
                                             ++++++++++