நேற்றிரவு, ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிச் சிதறிய விபத்தில், 288[‘சன்’ தொ.கா. >261 -நண்பகல் 1மணிச் செய்தி] பயணிகள் உயிரிக்க[மேலும் அதிகரிக்கக்கூடும் என்கின்றன ஊடகச் செய்திகள்], 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது நம்மை அளப்பரிய சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாகும்.
விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே, மீட்புக் குழுவினர் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது ஆறுதல் அளிக்கும் தகவல்.
அனைத்து ஊடகங்களும் உடனுக்குடனான செய்திகளை நமக்கு வழங்கிவருவது பாராட்டுக்குரியது.
நடுவணரசும் மாநில அரசுகளும் தத்தமக்குரிய கடமைகளை ஆற்றிவரும் நிலையில், விபத்து நடந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குப் பிரதிபலனை எதிர்பாராமல் ஆற்றிய/ஆற்றும் பணிகள், பெரிதும் மெச்சத்தக்கனவாகவும், பெருமிதம் கொள்ளத்தக்கனவாக உள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை.....
‘விபத்து நடந்த இரவில் மட்டும் இளைஞர்கள் ஒடிசா மருத்துவ மனைகளுக்குச் சென்று 500 யூனிட் ரத்தம்(தானம்) வழங்கினார்கள்.’
‘விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்யவும், ரத்ததானம் செய்யவும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே குவிந்தார்கள்; குவிந்துகொண்டிருக்கிறார்கள்.’
விபத்து குறித்த செய்திகளுக்கே ஊடகங்கள் முக்கியத்தும் தருவது இயல்பாதலால், மக்களின், பிரதிபலனை எதிர்பாராத பணி பற்றிய இன்னும் அறியப்படாத தகவல்கள் பின்னர் வெளியாக வாய்ப்புள்ளது.
நல்ல உள்ளங்கள் வாழ்க! வளர்க மனிதாபிமானம்!!
* * * * *