‘முத்துமாரியம்மன்’ கல்யாணம் ஆகியும் ‘கன்னி கழியாத’ ஒரு பெண் சாமி.
அதன் நான்கு கைகளில் திரிசூலம், மண்டை ஓடு, டமரு[சிறிய டிரம்] எல்லாம் இருக்கும். காளியம்மனாகச் சிங்க வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பதும் உண்டு.
இதைப் பலரும் கண்டு களித்திருக்கலாம்.
ஆனால், அவர் ‘புல்லட் பைக்கில் அமர்ந்து அருள்மழை பொழியும் கண்கொள்ளா அழகுக் காட்சியை எவரும் கண்டதில்லை.
நம் ‘தேனி’ மாவட்டத்துத் தமிழர்கள் அப்படியானதொரு கோலத்தில் முத்துமாரியம்மனைத் தரிசித்து இறும்பூது எய்தியிருக்கிறார்கள்.
அதி நவீன ‘புல்லட்’ வாகனத்தில் அவரை ஆரோகணிக்கச் செய்து, மலர் மாலைகள் சூட்டி, அவற்றில் ரூபாய் நோட்டுகளும் செருகி அலங்கரித்து, ஆராதித்து மெய்சிலிர்த்திருக்கிறார்கள் அவர்கள்.
இந்தக் கோலத்தில் முத்துமாரியம்மனத் தரிசிப்பவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது அந்தச் சகோதரர்களின் நம்பிக்கை.
முத்துமாரி அம்மனைச் சுப்ரமணியரின் தெய்வீக மனைவி என்று சொல்லி மனம் பூரிப்பதோடு, அந்த அன்னையைக் கன்னித் தெய்வமாகவும் வழிபடுகிறார்களாம் அவர்கள்[“மனைவியில் தெய்வீக மனைவி வேறா? மனைவி ஆன பிறகும் கன்னி கழியாயது ஏன்?” என்று எவரும் முணுமுணுக்க வேண்டாம்].
அம்மனைப் ‘புல்லட்’ வாகனத்தில் ஏற்றி அழகு பார்க்கும் தேனி மாவட்டத்து அதிபுத்திசாலிகளிடம் நாம் வைக்கும் கோரிக்கை ஒன்று உண்டு.
அது.....
“அம்மனைப் பைக்கில் ஏற்றிய நீங்கள், அவரைச் செயற்கைக் கோள்களில் ஏற்றிச் சந்திரன், செவ்வாய் போன்ற கோள்களுக்கும் அனுப்பி வைத்திட வேண்டும். அப்படிச் செய்தால், இந்த மண்ணுலக மனிதர்களுக்கு மட்டுமல்ல, அங்கெல்லாம் வாழும் ஜீவராசிகளுக்கும் அவர் அருள்பாலிப்பார் என்பது உறுதி.
அம்மனை மட்டுமல்ல, உலகில் உள்ள அத்தனை அம்மா சாமிகளையும் அப்பாசாமிகளையும்கூட அங்கெல்லாம் அனுப்பிவைக்கலாம்.
“இங்கே சாமிகளே இல்லாத நிலை உருவாகுமே. நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமே” என்று கவலைப்படுதல் வேண்டாம். அண்டவெளியிலிருந்தே அத்தனைச் சாமிகளும் இங்குள்ளவர்களுக்கு அருள்பாலிப்பார்கள் என்று நம்புங்கள்.
நம் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றினால்.....
ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பெருமை உலகெங்கும் பரவும் என்பது உறுதி!
* * * * *
At THIS temple in Tamil Nadu, a touch of modernity places Goddess Muthumari on a bike (msn.com)