அப்போது, அவருக்கு எதிராகப் பா.ஜனதா எம்.பி.க்கள் முழக்கமிட்டார்கள். அதே சமயத்தில், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசத் தொடங்கினார்.
வெளியேறிக்கொண்டிருந்த ராகுல் அவர் பேசுவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
பார்த்துக்கொண்டே ஸ்மிரிதி இரானியையும், மற்றும் பெண் எம்.பி.க்களையும் நோக்கிப் 'பறக்கும் முத்தம்' கொடுத்தபடி வெளியேறினார்.
இந்நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லாவைப் பா.ஜனதாவைச் சேர்ந்த அந்த 20க்கும் மேற்பட்ட பெண் எம்.பி.க்கள் சந்தித்தனர்.
பறக்கும் முத்தம் அளித்த ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் மனு அளித்தார்கள்’ என்பது செய்தி[தினத்தந்தி].
பறக்கும் முத்தம் தந்தது ஒரு நா.ம.உறுப்பினரின் அநாகரிகமான செயல் என்றும், பெண் விரோத நடவடிக்கை என்றும், இதற்கு முன்பு அத்தகைய ஒரு நிகழ்வு அங்கு இடம்பெற்றதே இல்லை என்றும், ராகுலைக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
உண்மையில் பெண் எம்.பி.களுக்கு ராகுல் பறக்கும் முத்தம் தராமல், தற்செயலாய் வாயைத் துடைத்துக்கொண்டு யாரோ ஒரு நண்பரைப் பார்த்துக் கையசைத்துச் சென்றிருக்கலாம்.
அவ்வாறல்ல, அவர் கொடுத்தது பறக்கும் முத்தமேதான் என்றாலும், அதை அவர் ஏன் கொடுத்தார் என்பதை ஆராய்வது அவசியம் என்று தோன்றுகிறது.
பறக்கும் முத்தம் தருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே[ராகுல், நடுத்தர வயதை எட்டியவர் என்றாலும் திருமணம் ஆகாததால் அவர் இளைஞர் என்றே கருத்தப்படலாம்].
முத்தம் என்பது, தான் நேசிக்கும் பெண்ணுக்கு, தொட்டுத் தழுவி, இதழ்கள், கன்னங்கள் போன்றவற்றில் உதடுகளை அழுந்தப் பதிக்கிற அந்தரங்க ஆசையின் வெளிப்பாடு ஆகும்.
அவ்வாறு முத்தம் கொடுத்துப் புளகாங்கிதம் அடைய முடியாத நிலையில், தொலைவிலிருந்து உள்ளங்கையில் அதைப் பதித்துத் தனக்கானவளை நோக்கிக் காற்றில் பறக்கவிடுவது ‘பறக்கும் முத்தம்’ ஆகும்.
பறக்கும் முத்தம் தருகிற ஒருவன், தான் காதலிக்கிற ஒரே ஒரு குமரிக்குத்தான் தருவானே ஒழிய, வயதில் கூடக்குறைய இருக்கிற ஒரு கிழக் கும்பலுக்குத் தரமாட்டான்.
ராகுல் தன் ஆசை முத்தத்தை, யாரையெல்லாம் நோக்கிப் பறக்கவிட்டாரோ அவர்களில் எவருமே வயசுப் பெண்கள் அல்ல என்பது கவனிக்கத்தக்கது.
வெளிப்படையாகச் சொன்னால், அவர்கள் எல்லோரும் ராகுலுக்கு அக்காமார்கள் என்றோ, அம்மாமார்கள் என்றோ கருதத்தக்க வயசுக்காரர்களே[ஸ்ருதிக்கு ராகுலைவிடவும் வயது குறைவு. எனவே, அவர் ராகுலுக்கு இளைய சகோதரி ஆகிறார்].
இது தெரிந்தும் ராகுல், அந்த அன்னையர் குலத்துக்குப் பறக்கும் முத்தம் அனுப்பியது ஏனென்றால், அந்த 20க்கும் மேலான பெண்களில் ஒரு சாராரைச் சகோதரிகளாகவும் மற்றொரு சாராரைத் தன் அம்மாக்களாகவும் பாவித்ததால்தான்.
அவர்களுக்கு அவர் பறக்கும் முத்தம் கொடுத்ததற்கு அந்தரங்க ஆசை காரணமல்ல; அது தூய அன்பின் வெளிப்பாடாகும்.
தான் பேசி முடிக்கும்வரை அவர்கள் அமைதி காத்ததைக் கருத்தில் கொண்டு நன்றி சொல்ல நினைத்தவர், அந்த நன்றியை முத்தத்தின் வடிவில் அனுப்பியிருக்கிறார்[அவர்களுக்குப் பக்கத்தில் இருந்திருந்தால், வாய் திறந்து “நன்றி” என்று சொல்லியிருப்பார்.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் அந்த 20க்கும் மேலான பெண் எம்.பி.களுக்கு இல்லையே என்பது நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது!
ஹி... ஹி... ஹி!!!
* * * * *