வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

சமுத்திரமும் எஸ்.ராமகிருஷ்ணன்[எழுத்தாளர்] என்னும் சிற்றோடையும்!!


ர் இளம் பெண் தன்னந்தனியாக ஆற்றுக்குக் குளிக்கச் செல்கிறாள்.

இருபக்கமும் ஆங்காங்கே அடர்ந்த புதர்களும், தென்னந்தோப்புகளுமாக, ஆள் நடமாட்டம் அறவே இல்லாத ஒற்றையடிப் பாதையில் அவள் சென்றுகொண்டிருக்கிறாள்.

அந்த நண்பகல் பொழுதில்,  நீண்ட நாட்களாக அவள் மீது கண் வைத்திருந்த ஒரு கசடன் அவளைப் பின்தொடர்கிறான்.

சுற்றுமுற்றும் பார்க்கிறான். மனித உருவம் ஏதும் தென்படவில்லை.

அவளை மடக்குவதற்கு இதுவே தோதான நேரம் என்று முடிவு செய்த அவன், ஒரு புதர் மறைவுக்கு அவளைத் தூக்கிச் செல்கிறான். அவள் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியதில் அவள் சரிந்து விழுகிறாள்.

அவன் தன் இச்சையைத் தணித்துக்கொள்கிறான்.

அவளை அனுபவித்த திருப்தியோடு அங்கிருந்து ஓடிவிடும் முயற்சியிலும் ஈடுபடுகிறான் அவன். 

களைந்த ஆடையைச் சரிசெய்துகொண்ட அவள், சோர்ந்து துவண்ட நிலையிலும் மனோதைரியத்துடன், அவளின் ஊரைச் சேர்ந்தவர்கள் எவரேனும் வருகிறார்களா என்று எதிர்பார்த்துப் புதர் மறைவிலிருந்து வெளிப்படுகிறாள்.

சில நூறு அடிகளையே அந்த அயோக்கியன் கடந்திருந்த வேளையில், அவளுக்கு நன்கு அறிமுகமான நான்கைந்து இளைஞர்கள் எதிர்த் திசையிலிருந்து வருவது தெரிகிறது.

தன்னைச் சீரழித்தவன் அவர்களைக் கடப்பதற்கு முன்னால், கூச்சல் போட்டு,  அவர்களின் கவனத்தை ஈர்த்து நடந்ததை அவர்களிடம் சொல்லிவிடலாம் என்று நினக்கிறாள்.

சில கணங்களிலேயே மனம் மாறுகிறாள்.

வந்துகொண்டிருப்பவர்கள் அவளின் சாதிக்காரர்கள். அவளைக் கெடுத்தவனோ அதே ஊரைச் சேர்ந்த இனொரு சாதிக்காரன்; சரிசமமான எண்ணிக்கையில் உள்ளவர்கள்.

ஏற்கனவே, இரண்டு தடவை இருதரப்பினரும் மோதிக்கொண்டதில், இரு பக்கத்திலும் அரைச் சத அளவுக்கு உயிரிழப்பு நேர்ந்தது அவளின் நினைவுக்கு வருகிறது.

நடந்த அசம்பாவிதத்தை அவர்களிடம் சொன்னால், மூன்றாவதாக ஒரு சாதிக்கலவரம் ஏற்படுவதோடு முன்னைவிடவும் அதிகம் உயிர்ச் சேதம் ஏற்படும் என்று நினைக்கிறாள்.

நெருங்கிவந்த தன் சாதி ஆட்களிடம் ஒரு வெற்றுப் புன்னகையை மட்டும் பகிர்ந்துகொண்டு தன் ஊர் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள்.

“என்னால் இன்னொரு சாதிக் கலவரம் மூள வேண்டாம். எதிர்பாராத வகையில் என்னைப் பலவீனப்படுத்திப் பலவந்தப்படுத்திய அந்தக் குடிகாரனின் இரு கைகளையும் தக்க சமயம் பார்த்து வெட்டிப்போட்டுப் பழி தீர்ப்பேன். இது என் குலதெய்வத்தின் மீது சத்தியம்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே நடக்கிறாள் அவள்.

                                *   *   *   *   *

இந்தச் சிறுகதை[இன்று இதை எழுதியவன் நான் என்றாலும், இந்தக் கருவை மையமாகக் கொண்டு அழியாத ஒரு புனைகதைக் காவியத்தைப் படைத்தவர் மறைந்த எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்கள்; முன்னணி இதழ்கள் பலவற்றில் வெளியான அவருடைய கதைகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்; சிறந்த நாவல்களையும் படைத்தவர்; சாகித்திய அகாடமி பரிசு பெற்றவர்.

இந்தக் கதை ‘கண்ணகி 19[?]..’என்னும் தலைப்பில் வெளியானதாக நினைவு; வெளியான ஆண்டு  நினைவில் இல்லை. இதழும் கைவசம் இல்லாததால் மூலக்கதையின் நகலைப் பதிவு செய்ய இயலவில்லை.

இயலாத நிலையிலும், சமுத்திரத்தின் தரமான பல கதைகளில் ஒன்றான இந்தக் கதையின் கருவுக்கு ஒரு வடிவம் கொடுத்து இங்கு வெளியிட்டதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு.

எஸ்.ராமகிருஷ்ணன் என்பவர் ஆனந்த விகடனால்  சற்றே பிரபலப்படுத்தப்பட்ட இன்றைய எழுத்தாளர்.

தமிழில் ‘நூறு சிறந்த சிறுகதைகளுக்கான ஒரு தொகுப்பு’ப் பட்டியலை இவர் வெளியிட்டிருக்கிறார்[பட்டியல் 2014இல் வெளியானது[?].* இவர் தேர்வு செய்த கதைகளில் பாதிக்கும் மேலானவை பயனற்ற வெற்றுக் கதைகள். 

இந்தத் தொகுப்பில், தமிழ் வாசகர்களால் மட்டுமின்றி, தமிழின் பிரபலமான பல எழுத்தாளர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட/மதிக்கப்படும் மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதை இடம்பெறவில்லை. இதை அறியச் செய்வதற்காகவே இந்தப் பதிவு[எப்போதோ எழுத நினைத்து இப்போதுதான் சாத்தியமாயிற்று].

தரத்தில் சராசரிக்கும் கீழேயான கதைகளை எழுதியுள்ள இந்த எஸ்.ராமகிருஷ்ணன்,  பிரபலமானவராகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் தரமான பயனுள்ள படைப்புகளைத் தந்தவருமான சு. சமுத்திரத்தின் கதைகளைப் புறக்கணித்தது, சு. சமுத்திரத்தின் மீதான இவரின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

சு.சமுத்திரம், படைப்பிலக்கியத் துறையில், பெயருக்கேற்ப ஒரு சமுத்திரம் என்றால், இந்த எஸ். ராமகிருஷ்ணன் நீர்வரத்து இல்லாமல் வற்றிக்கிடக்கும் ஒரு சிற்றோடை என்று சொல்லலாம்!

*https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/