பக்கங்கள்

சனி, 12 ஆகஸ்ட், 2023

அதென்ன வெங்காய ஜீவகாருண்யம்?1?!

ரவு 8 மணிக்கு ‘லக்‌ஷிதா’(6) தன் பெற்றோருடன் திருமலைக்கு மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தார்.

லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே, பெற்றோர்களுக்குச் சற்று முன்னால் நடந்துகொண்டிருந்த லக்‌ஷிதாவைத் திடீரென வந்த சிறுத்தை ஒன்று, அடித்து ஒரு புதருக்குள் இழுத்துச்சென்றது. தங்களின் கண் முன், மகளைச் சிறுத்தை இழுத்துச்செல்வதைப் பார்த்துப் பெற்றோர் அலறிக் கூச்சலிட்டனர். சக பக்தர்களும் சிறுத்தையை விரட்டிச்சென்றனர்.

இது குறித்துத் திருப்பதி வன அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், இரவு நேரம் என்பதால் சிறுமியைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

விடிந்த பிறகு தேடியதில், சிறுமியின் பாதி உடல் ஒரு புதர் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோரும் உற்றாரும் கதறி அழுதனர்[‘இந்து தமிழ்’].

[தன்னைக் காணவந்த கள்ளங்கபடமற்ற சிறுமியைக் காப்பாற்றாமல் 'மோனத் தவத்தில்’ மூழ்கிக்கிடந்தாரா கடவுள்?!]

கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோருடன் திருமலைக்கு மலையேறிச் சென்றுகொண்டிருந்த 3 வயதுச் சிறுவனைச் சிறுத்தை கவ்விக்கொண்டு ஓடியது[இதற்கு முன்னரும் இத்தகையக் கொடூரங்கள் நடந்துள்ளன] என்பது கூடுதல் செய்தி.

பிடிக்கப்படும் சிறுத்தைகளைத் தேவஸ்தானத்தினர், கொல்லாமல்[சிறுத்தை இனம் அழிந்தால் கடவுள் கோபித்துக்கொள்வாரா?] வனத்திற்குள்ளேயே விட்டுவிடுகிறார்களாம்.

காரணம் ஜீவகாருண்யம்.

எத்தனையோ சிறுவர் சிறுமியரைக் கடித்துக் குதறிக் கொன்றிருக்கின்றன|கொல்லுகின்றன தெரு நாய்கள். அவையும் கொல்லப்படுவதில்லை.

காரணம் ஜீவகாருண்யம்.

மிருகங்களும் கடவுளால் படைக்கப்பட்ட  ஜீவன்களே என்பதால் கருணை காட்டுகிறார்களா?

கண்ணுக்குத் தெரிகிற மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஜீவன்களுக்குக் கருணை காட்டச் சொல்லுகிற ஜீவகாருண்யர்கள், பல்வேறு நோய்களை உண்டுபண்ணிக் கோடி கோடி கோடிக் கணக்கில் மனித உயிர்களைப் பலிகொள்ளுகிற, எண்ணி மாளாத கிருமிகள் கொல்லப்படுவதைக் கண்டிப்பதில்லையே, ஏன்?

இங்கே இவர்களின் கருணை உணர்வு காணாமல் போவது ஏன்?

மனிதர்களால் நாளும் தொழுது விழாக்கள் எடுத்துக் கூத்தடித்துக் கொண்டாடப்படுகிற  கடவுளும் ஜீவகாருண்யராக இருப்பதால்தான், ஏதுமறியாத பச்சிளம் சிறுவர் சிறுமியர்களை வேட்டையாடுகிற சிறுத்தை, சிங்கம், ஓநாய் போன்ற மிருகங்களைக் கண்டுகொள்ளாமல் நடமாடவிடுகிறாரா?

எத்தனை ஆசையோடு, குளு குளு மலை உச்சியில் குடிகொண்டிருக்கிற  தன்னைத் தரிசிக்கச் சிறுவர்களும் சிறுமிகளும் உடல் வலியைப் பொருட்படுத்தாமல் மலையேறி வருகிறார்கள் என்பது சர்வ சக்தி வடிவமான கடவுளுக்குத் தெரியாதா?

ஏன் மௌனம் சுமந்து வேடிக்கை பார்க்கிறார்?

தன்னால் படைக்கப்பட்ட உயிர்கள் வதைபடுவதைக் கண்டு களிக்கும் கயமைக் குணம் மிக்கவரா அவர்?

இந்த மனிதர்கள் கடவுளைக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டாடிச் சாதித்துக் கிழித்தது என்ன? என்னவெல்லாம்?

அனைத்து உயிர்களும் தத்தம் இனத்தின் மீது அளவில்லாத பற்றும் பாசமும் கொண்டுள்ளன.

மனிதர்கள் மட்டும்தான், தம்மைச் சார்ந்தவர்களின் நலன்களை மட்டுமல்ல, உயிர்களையேகூடப் பொருட்படுத்தாமல், சாமி பூதம் என்று பித்துப் பிடித்து அலைகிறார்கள்.

வகை வகையான முட்டாள்தனங்களைச் சுமந்து திரியும் இவர்களை என்ன சொல்லிச் சாடினாலும் மனம் ஆறுதல் பெறாது!

* * * * *

https://www.h okindutamil.in/news/india/1091684-tirupathi-6-year-dies-of-leopard-attack.html