எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நான் தாடி வளர்க்கிறேன்... இன்றிலிருந்து!!!

தாடி வளர்ப்பதால் உண்டாகும் பல நன்மைகள் கீழே இடம்பெற்றுள்ளன. 

இவற்றிற்கான இந்தப் பட்டியல் வெளியாகியிருப்பது, https://www.penmai.com/ என்னும் தளத்தில்.

இது பெண்களுக்கான தளம் என்பதால்[பெண்கள் பொய் சொல்லமாட்டார்கள்!] நன்மைகள் விளைவது உறுதி என்னும் நம்பிக்கையில், இந்நாள்வரை தாடி வளர்ப்பதில் ஈடுபாடு இல்லாத நான், இன்றே அதை வளர்க்கத் தொடங்கிவிட்டேன் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

                                                              *   *   *   *   *

 நன்மைகள்:

*தாடி வளர்ப்பதன் மூலம் முகம் அசத்தலானதொரு தோற்றத்தைப் பெறுகிறது.  

*முக வசீகரம் கூடுகிறது.

*தாடி வளர்ப்பது அறிவாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

*முகத்தை, சூரியக் கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. 

*வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்குத் தாடி உதவுகிறது[அதனால், முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சியளிப்பதை விரும்பும் கிழங்கள் தாடி வளர்க்கலாம்].

*நன்றாக முகச் சவரம் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட, தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

*சவரம் செய்யும்போது சருமம் எரிச்சலுக்கு உள்ளாவதோடு தடிப்புகளும் தோன்றக்கூடும். 

*தாடி வளர்த்தால் முகப்பருப் பிரச்சினை எட்டிப்பார்க்காது[எனவே, முகப்பரு&சருமப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் அவசியம் தாடி வளர்க்க வேண்டும்].

*சவரம் செய்வதால் சருமத்தில் உள்ள துளைகள் திறந்துகொள்ளும். அதனால், சிலருக்குத் முகத் தோலில் வறட்சி ஏற்படும். அதன் மூலம் கோடை, குளிர் காலங்களில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இவை போன்ற பிரச்சினைகள் ஏற்படா.

***தாடி வளர்ப்பது பெரிய விசயமல்ல. அதனை நேர்த்தியாகப் பராமரிப்பது முக்கியம். பராமரித்தால்தான் தாடியால் முகத்தின் அழகு கூடும்.