திங்கள், 21 ஆகஸ்ட், 2023

'புரட்சித் தமிழர்’ வேண்டாம்; எடப்பாடியாருக்குத் ‘தமிழன்’ பட்டம் போதும்!!

‘அதிமுகவின் வீர வரலாற்றுப் பொன்விழா’ என்ற பெயரில் மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்றதென்பது யாவரும் அறிந்த செய்தி.

இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சேவையைப் பாராட்டி, "புரட்சித் தமிழர்" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவைக் கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, "புரட்சித் தமிழர்" பட்டம் மேடையில் வழங்கப்பட்டது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


நமக்கும் மகிழ்ச்சியே.

ஆனால்…..

வழங்கப்பட்ட பட்டத்தில் ஒரு திருத்தம் தேவை என்பது நம் விருப்பம்.

தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனும், செல்வி ஜெயலிலிதாவும் அந்தப் பட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

சொல்லப்போனால், ‘புரட்சி’ என்னும் சொல்லுக்குரிய பொருள் இந்த இருவருக்குமோ, இவர்களுக்குப் பட்டங்கள் வழங்கியவர்களுக்கோ தெரியாது.

மனித சமூகத்தின் முழு வரலாற்றையும் வாசித்தால், உலக அளவில், அரசியலிலும், சமுதாயத்தைச் சீர்திருத்துவதிலும் புரட்சி செய்தவர்கள் யாரெல்லாம் என்பது தெரியும்[பட்டியல் துல்லியமானதாக இருத்தல் வேண்டும் என்பதால் அது பதிவு செய்யப்படவில்லை].

மேற்கண்ட இருவரின் அரசியல் வாரிசு என்று[அதற்குக் கடும் போட்டி நிலவுகிறது] அ.தி.மு.க.வினரால் புகழப்படும் எடப்பாடி பழனிசாமி அவர்களும் புரட்சி ஏதும் நிகழ்த்தியவர் அல்ல. இனி இவர் ஒரு புரட்சியாளாராக ஆவது சாத்தியமே இல்லை.

இந்தப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது, அரசியல் எதிரிகளால் கடும் விமர்சனத்துக்குப் பயன்படுமே தவிர, எடப்பாடியாருக்கும் இது பயன்படாது என்பது உறுதி. 

ஆகவே, எடப்பாடியாருக்குப் ‘புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கியவர்களிடம் நாம் அன்புடன் முன்வைக்கும் கோரிக்கை பின்வருமாறு:

‘பரட்சித் தமிழர்’ பட்டத்தைத் திரும்பப் பெறுங்கள். இதற்கு மாற்றாக, ‘தமிழன்’ என்றொரு பட்டத்தை வழங்குங்கள்.

எடப்பாடியார், தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் தன்னைத் தகுதி உடையவராக இன்றுவரை ஆக்கிக்கொள்ளவில்லை.

‘தமிழன்’ என்னும் பட்டத்தைப் பெற்ற பிறகாவது அப்பட்டத்திற்கான முழுத் தகுதியையும் பெற்றவராகத் தன்னை ஆக்கிகொள்வார் என்று நம்பலாம்.

அதற்கான அறிகுறிகள் அவரின் பேச்சுகளிலும், நடவடிக்கைகளிலும் தெரியத் தொடங்கியுள்ளன என்பது நம் எண்ணம்.

அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று முழு மனதுடன் நம்புகிறோம்.

வாழ்க ‘தமிழன்’ எடப்பாடி பழனிசாமி! நாளும் சிறந்திடுக அவரின் தமிழர்க்கான பணி!

*   *   *   *   *

https://www.hindutamil.in/news/tamilnadu/1101379-edappadi-palanisamy-was-awarded-the-title-of-puratchi-thalaivar-at-madurai-aiadmk-convention-1.html