ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த், அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் சென்றார்.
ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் ஆளுநரும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஜெயிலர் படத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பார்ப்பேன் என்று கூறினார். ஆனால், ஜெயிலர் படத்தை ரஜினியுடன் பார்க்க யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகின.
மானம், ரோஷம், சூடு, சொரணைன்னு ஏதாவது ஒன்று இருந்திருந்தாலும் இந்த மனுசன் ரஜினி, “போடா புண்ணாக்கு” என்று சொல்லியிருக்கலாம்.
சொல்லவில்லை.
அந்தக் காவி, படம் பார்க்கத் துணை அமைச்சரை அனுப்பியது. அந்த நபர் பாதிப் படம் மட்டும் பார்த்து வெளியேறி, நம் பிரபல நடிகரும் பிரபலத் தவயோகியும்[பனி படர்ந்த ‘ஜில் ஜிலீர்’ இமயமலைக்குப் போய் தவம் இருப்பது அத்தனை எளிதல்ல!] ஆன ரஜினியை அவமானப்படுத்தினார்.
தவம் இருந்து இருந்து இருந்து கொஞ்சநஞ்சத் தன்மானத்தையும் இழந்துவிட்ட இவர், தனக்குள்ள ஆன்மிகச் சக்தியைப் பயன்படுத்தி, காவிச் சாமியாருக்கு, “என்னை அவமானப்படுத்திய நீ, அடுத்த பிறவியில் காவி உடுத்து, வயிற்றுப் பசிக்குக் கண்டவரிடமெல்லாம் கை நீட்டும் தெருப் பிச்சைக்காரனாகப் பிறக்கக்கடவது" என்று சாபம் கொடுத்திருக்கலாம்.
நடிகர் இதையும் செய்தாரில்லை.
அதற்கு மாறாக,
இரவு நேரத்தில் தன் மனைவி லதாவுடன் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்குச் சென்றார். யோகி ஆதித்யநாத் ரஜினியை வரவேற்க வீட்டு வாசலுக்கு வந்தார். காரில் இருந்து கீழே இறங்கிய ரஜினிகாந்த் வேகமாகச் சென்று, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
இவர் அந்த நபரின் காலில் விழுந்து கும்பிட்டதற்கான காரணம் அவருடைய தீவிர ரசிகர்கள் உட்பட எவருக்குமே தெரியவில்லை; புரியவும் இல்லை.
ரஜினிக்கு உள்நோக்கம் எதுவும் இருந்தால்.....
நோக்கம் நிறைவேறிட, இதைவிடவும் சிறந்த சில வழிகள் உள்ளன.
அவை;
1]அந்த ஆளின் பாதங்களைக் கழுவிய நீரை[புனிதமானது] இவர் பெருவிருப்புடன் பருகிப் பரவசப்படலாம்.
2]அவரின் பாதக்குறடுகளை[செருப்புகள்] இறைஞ்சிப் பெற்று, அவற்றால் தன் தலையில் அடித்துக்கொள்ளலாம்.
3] காரியம் ஆக வேண்டும் என்றால், ஒரு சில அரசியல்வாதிகள் தங்கள் தலைவரின் செருப்புகளைத் துடைத்துச் சுத்தம் செய்து அவரின் பாதக்கமலங்களில் அணிவிப்பதுண்டு. இந்தச் சூப்பர் ஆன்மிகவாதியும் இதைச் செய்யலாம்.
4] இதைவிடவும் சிறந்ததொரு வழி உள்ளது. மனிதப் பண்பாடு கருதி அதைக் குறிப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
அடுத்தக் கட்டமாக, உ.பி.சாமியாரைச் சந்திக்கும்போது, ரஜினி செயல்படுத்தவிருப்பது, மேற்கண்டவற்றில் ஒன்றையா, இரண்டையா, மூன்றையுமா?
அறிந்து இன்புற ஆவலுடன் காத்திருப்போம்!
* * * * *