இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, முதல்வர் பதவிக்காகக் குடம் குடமாக ‘ஜொள்ளு’ வடித்துக்கொண்டிருக்கும் நிலையில், மத்தியப் ‘பாஜக’ அரசின் இன்றைய ‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ பஜனைக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார், தமிழ்நாட்டுப் ‘பாஜக’வின் ‘பாடிகார்டு’ எடப்பாடியார்.
‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ கொள்கையைப் பின்பற்றினால் தேர்தல் செலவு மிச்சமாகும் என்பதால் அதை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்.
4 ஆண்டுகள் அனுபவித்த ‘பதவி சுகம்’ இப்படி அவரைக் ‘கரணம்’ போட வைத்திருக்கிறது.
ஒட்டு மொத்த உடம்பிலும், மறையாததும் மறைக்க இயலாததுமான ஊழல் கறை படிந்திருப்பதால், ‘பாஜக’வின் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை[அவ்வப்போது ‘பாஜக’ அரசை விமர்சிப்பதாகக் காட்டிகொள்கிறாரே தவிர, உண்மையில் அதை எதிர்க்குக் ‘தில்’ இவருக்கு இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை] இவருக்கு.
‘ஒரே தேர்தல்’[5 ஆண்டுகளுக்கு ஒருமுறை] நடைமுறைப்படுத்தப்பட்டு, அடுத்துவரும் தேர்தலில் ‘பாஜக’ வென்று நடுவணரசைக் கைப்பற்றினால், மாநில ஆட்சியைக் கைப்பற்றும் மாற்றுக் கட்சி அரசை, ஏதேனும் ஒரு சப்பைக் காரணம் காட்டிக் கலைத்துவிட்டு, அடுத்த தேர்தல் வரும்வரை குடியரசுத் தலைவர் ஆட்சியைப் அது அமல்படுத்தும்.
இவர் உட்பட ஒட்டுமொத்த அ.தி.மு,க.வையே விலைக்கு வாங்கும் அதிசயம், அக்கிரமம் எல்லாம் நடக்கக்கூடும்.
தன்னால் நியமிக்கப்படும் ஆளுநர் மூலம் 'பாஜக'வே ‘அடாவடி’ ஆட்சி நடத்த முடியும் என்னும் கசப்பான உண்மையை எடப்பாடியார் அறியாமல் போனது பரிதாபம்.
இவரே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும், ‘பாஜக’ அதில் அங்கம் வகித்திட ஆசைப்பட்டுப் பங்கு கேட்கும்.
துணை முதல்வர் பதவி கேட்கலாம்; இரட்டைப்படையில் உறுப்பினர்கள் தேர்வு பெற்றுவிட்டால், முதல்வர் பதவிக்குக்கூட குறி வைக்கலாம்.
பிற இனத்தவனின் அடி வருடாமல், இயன்றவரை தன்மானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது தமிழினம்.
சுய சுகத்துக்காக அந்தத் தன்மானத்தை அடகு வைத்திட வேண்டாம் என்று தமிழன் என்ற வகையில், எட்டரை மாற்றுத்[தங்கம்] தமிழன் எடப்பாடியாரை அன்புடன் வேண்டுகிறோம்.
நம் வேண்டுதலைப் புறக்கணித்தால்.....
“அடுத்த தேர்தலுக்குப் பிறகு முகவரியை முற்றிலுமாய் இழப்பீர்கள்” என்று எச்சரிக்கையும் செய்கிறோம்!