பக்கங்கள்

செவ்வாய், 3 அக்டோபர், 2023

ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிக்கு ரூ10 கோடி கொடுத்தவன் புத்திசாலியா, பித்துக்குளியா?!

'நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் 1929இல் வெளியான, அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனின், 14 பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் பிரதி, அண்மையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் 10.7 கோடி ரூபாய்க்கு  விற்பனை ஆனது என்பது 27.09.2023 செய்தி.

பிரதியில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைகள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இக்கொள்கைகள் செய்தி இதழ்களில் வெளியாகி, பாடப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டு மிகப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அறிஞர் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதி ரூ10.7 கோடிக்கு விலைபோன செய்தி நம்மை வியக்க வைக்கிறது.

அவரால் எழுதப்பட்ட பிரதியை வாசிக்கும்போதெல்லாம், அவர் மீதான நம் மதிப்பு அதிகரிக்கும்; அறிவியலின் மீதான ஆர்வம் பெருகக்கூடும்; ஆராய்ச்சிகள் செய்து அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்த வேண்டும் என்னும் உத்வேகம் மனதில் உருவாகக்கூடும் என்பது உண்மையே.

இவற்றிற்காக, சில ஆயிரங்களோ, கையில் தேவைக்கு மேல் பணம் இருந்தால் பல ஆயிரங்களோ கொடுத்தும் பிரதியை வாங்கலாம். 10 கோடிக்கு ஏலம் எடுத்தது பித்துக்குளித்தனம் என்றே சொல்லலாம்.

கடும் போட்டி காரணமாக, கிடு கிடுவென ஏலத் தொகை அதிகரித்திருக்கலாம் என்றால், ஐன்ஸ்டீனின் கையால் எழுதப்பட்ட வாசகங்களுக்கு இத்தனை விலையா என்று கேட்கத் தோன்றுகிறது.

பிரதியில் இடம்பெற்றுள்ள அதே வாசகங்களை, ஐன்ஸ்டீன் எழுதாமல் அவர் சொல்ல வேறு ஒருவர் எழுதியிருந்தால் இதே தொகைக்கு விற்றிருக்குமா? வாசங்களின் பொருள் மாறியிருக்குமா?

தட்டச்சு செய்திருந்தாலோ, கணினி மூலம்[அன்றே இவ்வசதி இருந்திருந்தால்] எழுதப்பட்டிருந்தாலோ ஏலத் தொகை குறையாமல் இருந்திருக்குமா?

ஐன்ஸ்டீனின் அறிவு மதித்துப் போற்றத்தக்கதுதான். மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. எழுத்துப் பிரதிக்கு இத்தனை மதிப்பு தேவையில்லை.

அவரின் மூளை பல துண்டுகளாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது[மிகச் சமீபத்தில், ஐன்ஸ்டீனின் மூளையின் 46 சிறிய பகுதிகள் பிலடெல்பியாவில் உள்ள முட்டர் மியூசியத்தால் வாங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டில், மூளையின் பகுதிகள் அருங்காட்சியகத்தின் நிரந்தரக் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சியில் ஐன்ஸ்டீனின் மூளையின் மெல்லிய துண்டுகள், நுண்ணோக்கி ஸ்லைடுகளில் பொருத்தப்பட்டிருந்தன. https://en.wikipedia.org/wiki/Brain_of_Albert_Einstein].

பாதுகாக்கப்படும் மூளைக் கூறுகள் ஏலத்தில் விடப்பட்டு, அவை பத்துக் கோடி என்ன, பத்தாயிரக் கணக்கான கோடிகளுக்கு விலை போகுமாயின் அது வரவேற்கத்தக்கதே[விஞ்ஞானிகளையே பெரு வியப்பில் ஆழ்த்துயுள்ளது அவரின் மூளை என்கிறார்கள்].

ஆக, ஒரு விஞ்ஞானியின் கையெழுத்துப் பிரதி என்பதற்காகப் ரூ10 கோடி கொடுத்து அதை வாங்கியது படு பித்துக்குளித்தனம் என்றே சொல்லத் தோன்றுகிறது!