பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 4 அக்டோபர், 2023

உத்தமர் மோடியும் ‘திமுக’வின் ஊழல் அறங்காவலர் குழுவும்!!!

தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.....

‘பாஜக’ வேட்பாளர்களை ஆதரித்துத் தெலங்கானாவில் பரப்புரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, தன் உரையினூடே, ‘திமுக’ அரசைச் சாடும் வகையில், தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்” என்று பேசிக் கொந்தளித்தார் என்பது செய்தி.

“கோயில் சொத்துகளையும் அவற்றின் மூலம் வரும் வருமானங்களையும் திமுகவினர் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றும் குமுறியிருக்கிறார்.

‘திமுக’ அரசு புரியும் இந்த அட்டூழியங்களைத் தடுத்து, கோயில்களையும், பூஜை செய்யும் அர்ச்சகர்களையும், குடிகொண்டிருக்கும் கடவுள்களையும் காப்பாற்ற ஏற்ற வழிகள் உள்ளன என்பதைக் கொஞ்சம் சிந்தித்திருந்தாலே மோடி புரிந்துகொண்டிருப்பார்.

அசுர பலத்துடன் ‘பாரத்’ஐப் பரிபாலனம் செய்யும் அவர் நினைத்தால், சனாதனத்தையும் சனாதனிகளையும் அழித்தொழிக்கும் முயற்சியில் ‘திமுக’ ஈடுபட்டிருப்பதை மட்டுமே காரணமாக்கி, அந்த அரசைக் கவிழ்த்து, புனிதரும், பரிசுத்த சனாதனவாதியுமான ஆளுநர் ரவியிடம் மாநில நிர்வாகத்தை ஒப்படைப்பதன் மூலம், கோயில் சொத்துகளுக்கும் வருமானங்களுக்கும் பழுது நேராமல் பாதுகாக்கலாம்.

அதைச் செய்யவிடாமல், மனசாட்சி உள்மனதை உறுத்துமேயானால், கோயில்களை நிர்வகிக்கும் அறங்காவலர்[தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது] குழுவைக் கலைத்துவிட்டு, ஒன்றிய அரசால் அமைக்கப்படும் உத்தமர்கள் அடங்கிய குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது அவர் எதிர்பார்க்கும் பயனை நல்கும் என்பது உறுதி. ஒரே ஒரு ஆணையின் மூலம் இதைச் சாதிக்கலாம்; ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்னும் வரிசையில், ‘ஒரே நாடு ஒரே கோயில் நிர்வாகம்’ என்பதும் அடங்கிவிடும்.

வாயில் நுழையாத இந்திப் பெயரில் அமைக்கப்படும் கோயில் நிர்வாகக் குழுவில்[அறங்காவலர் குழு போன்றது] அயோக்கியர்கள் இடம் பெறுதலைத் தவிர்ப்பது மிக முக்கியம்.

யோக்கியர்களுக்கான ஒரு பட்டியலைத் தயாரித்து, வேத மந்திரங்கள் சொல்லி, சம்பந்தப்பட்ட கோயிலின் கடவுளை வழிபட்டுக் குலுக்கல்[சீட்டுக் குலுக்குதல்] மூலம் தேவையான குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம்.

மேதகு மோடியும் மாண்புமிகு அமித்ஷும் இணைந்து[நம் அண்ணாமலையையும் சேர்த்துக்கொள்ளலாம்] சிந்தித்தால் மேற்கண்டவற்றைக் காட்டிலும் சீரிய சிறந்த வழிகள் தென்படும் என்பது நிச்சயம்.

நேர்மை தவறாத நம் பிரதமர் அவர்கள் விரைந்து செயல்பட்டு, ஊழல் திமுகவிடமிருந்து, மிகக் குறுகிய கால அவகாசத்தில் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்தல் வேண்டும் என்பது நம் ஆசை; ஆதங்கமும்கூட!

* * * * *

https://tamil.oneindia.com/news/hyderabad/temples-in-tamil-nadu-encroachment-by-the-state-government-pm-modi-says-at-telangana-rally-544765.html?story=1