பழுதுபடாத அதி பயங்கர விரைவு ஊர்தி[கற்பனைதான்] ஒன்றில் பயணித்தால், செல்லும் வழியெங்கும் நாம் அறிந்த கோள்களும், மினுக்கும் நட்சத்திரங்களும், நாம் முன்னெப்போதும் அறிந்திராத அரிய புதிய பொருள்களும் காணும் இடமெல்லாம் இறைந்து கிடப்பதையோ, இயங்கிக்கொண்டிருப்பதையோ காணலாம்.
கால வரையறையின்றி, கோடி கோடி கோடானுகோடியோ கோடி ஆண்டுகள் பயணித்துக்கொண்டே இருக்கலாம். பயணம் முற்றுப்பெறுதல் என்பதே இல்லை.
அத்தனைப் பிரமாண்டமானது இந்த அண்டம். இதைப் பேரண்டம், பெரும் பெரும் பெரும்... பேரண்டம் என்றும் சொல்லலாம்[இதில் இந்துக் கடவுள்களையோ, கர்த்தரையோ, அல்லாவையோ, இன்ன பிற கடவுள்களையோ தேடிக் கண்டறிவது அத்தனை எளிதல்ல!!!]
இதில் நாம் பயணிக்கும் பாதை நெடுக, கோள்களும் நட்சத்திரங்களும் மட்டுமல்லாமல், மனித அறிவால் அறியப்படாதனவும் அனுமானிக்கப்படாதனவும் ஆன பிறவும் ஒன்றை மற்றொன்று விழுங்குவதும், ஒன்றோடொன்று மோதிச் சிதறுவதும், கரைந்து மறைவதும், உதிப்பதும் ஆன அதிசய நிகழ்வுகளும் தென்படக்கூடும்.
வடிவம் மாறாமலோ முற்றாய் அழியாமலோ, எப்போதும் ‘இருந்துகொண்டே இருப்பது’ என்று எதுவுமே இல்லை.
இவ்வகையில் சிந்தித்தால், பிரமிப்பூட்டுவதும் நம்மை அதிசயத்தில் ஆழ்த்துவதுமான ‘எது’வும் பெரும் பெரும் பேரண்டத்தில் இல்லை என்பதை உணரலாம்.
இதை உணர்வது மனிதர்கள் அனைவருக்கும் சாத்தியப்படுமேயானால், எந்தவொன்றின் அழிவும் அவர்களுக்கு ஆச்சரியத்தையோ, வருத்தத்தையோ உண்டாக்காது.
இதை மனதில்கொள்வதோடு.....
இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் யூதர்-இஸ்லாமியர் போர் குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், இந்த இரு மதத்தவருக்கும் இடையேயான போர் உலகப் போராக மாறும் என்றே தோன்றுகிறது.
இதனால் ஒட்டுமொத்த மனித இனமே அழிந்தொழியும் என்பது உறுதி.
இந்த அழிவு பேரதிர்ச்சியூட்டிப் பெரும் கவலைக்கு உள்ளாக்குகிற ஒன்றுதான்.
ஆயினும்,
இடைவிடாமல் பேரண்டத்தில் இடம்பெறும் பெரும் பெரும் அழிவுகளோடு ஒப்பிட்டால், அற்ப மனித இனத்தின் அழிவு ஒரு பொருட்டே அல்ல என்பது புரியும்.
ஆகையினால் மக்கள் அனைவரும் அறியத்தக்கது.....
இஸ்ரேல்-இஸ்லாமியர் போர் மூன்றாம் உலகப் போராக மாறி, ஆறறிவால் சீரழிந்த மனிதச் சாதி முற்றிலுமாய் அழிந்தொழியுமாயினும், இன்றளவில் கவலைப்பட ஏதுமில்லை என்பதே!