ஒருநாள் பங்காரு அடிகளார் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவரின் உடம்பில் பாம்பு ஊர்வதை உணர்ந்தார். கண் விழித்தபோது, அந்தப் பாம்பு அவரின் உடம்பிலிருந்து இறங்கிச் சென்றதைக் கண்டார். அவரைப் பெற்ற அண்னை அஞ்சி அலற, அக்கம்பக்கத்தார் அங்கு கூடினார்கள். அவர்களின் கண்முன்னே அது மாயமாய் மறைந்தது.
ஆதிபராசக்தியே பாம்பு வடிவில் வந்து அவரை ஆட்கொண்டார் என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுகிறது.
இதைவிடவும் கீழான இன்னொரு கற்பனைக் கதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘பங்காரு அடிகளாருக்கு தனலட்சுமி என்று ஒரு தங்கை இருந்தார். அவர் மீது பங்காரு அடிகளாருக்கு கொள்ளைப் பாசம். திடீரென ஒரு நாள் தங்கை இறந்தார்.
தண்ணீர்கூடக் குடிக்காமல் மணிக்கணக்கில் தங்கை புதைக்கப்பட்ட இடத்திலேயே அழுதுகொண்டிருந்தார் பங்காரு. அங்கு வந்த ஒரு பெண் அவரின் தாகம் தணிக்கத் தண்ணீர் கொடுத்தார்.
தாகத்தால் தவித்த தனக்குத் தண்ணீர் கொடுத்த பெண் யார் என்னும் கேள்வி பங்காரு மனதில் எழுந்தது. அந்தக் கேள்வியோடு அவர் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாருமில்லை. ஆதிபராசக்தி, உமாமகேஸ்வரி உருவத்தில் வந்து தண்ணீர் கொடுத்தார் என்பதை உணர்ந்து அடிகளார் மெய்சிலிர்த்தார்’ என்று முடிகிறது கதை.
ஆன்மிகத் துறையில் பங்காரு செய்த புரட்சி அவரை ‘அடிகளார்’ ஆக்கியது. படு மூடத்தனங்களை மக்களிடையை பரப்பியதால் ‘அடிகளார்’ விடுபட, அவர் மீண்டும் வெறும் ‘பங்காரு’ ஆனார் என்று சொல்ல நினைக்கும்போது மனம் வருந்தவே செய்கிறது!
ஆயினும், அவரின் உயிரிழப்பு தமிழர்களுக்கான குறிப்பிடத்தக்க இழப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
* * * * *