சனி, 21 அக்டோபர், 2023

தமிழ்நாடு ‘ஆளுநன்’ ஆர்.என்.ரவி!!!

மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, நடுவணரசால் நியமிக்கப்படுபவர் ‘கவர்னர்’ எனப்படும் ஆளுநர் ஆவார்.

மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும்போதோ, அரசியல் காரணங்களுக்காக நடுவணரசு ஒரு மாநில[எதிர்க்கட்சி ஆளும் மாநிலம்] அரசைக் கலைக்கும்போதோ, அந்த மாநிலத்தின் இடைக்கால நிர்வாகியாகச்[மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, அம்மாநிலத்தில் மக்களாட்சி மலரும்வரை] செயல்படுபவர் இந்த ஆளுநர்.

நடுவணரசு, தன்னின் விசுவாசிகளுக்கே இந்தச் சொகுசுப் பதவியை அளிப்பது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது.

பெரும்பாலான ஆளுநர்கள், மாநில ஆட்சியாளர்களை அனுசரித்தே செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு வரும் கோப்புகளில் கையெழுத்திடுவதை மட்டுமே கடமையாகக் கருதி, அடக்க ஒடுக்கமாக ஐந்தாண்டுகளை ஓட்டிவிடும் ஆளுநர்களும் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

விதிவிலக்காக, மாநில அரசு அனுப்பும் பெரும்பாலான மிக முக்கியப்  கோப்புகளில் கையெழுத்திடாமல், அதன் செயல்பாட்டை முடக்கி, மக்களின் வெறுப்புக்கு அது உள்ளாகும் வகையில், திட்டமிட்டு அடாவடித்தனங்கள் கெடுபிடிகள் செய்யும் ஆளுநர்களும் உள்ளனர் என்பது மறுக்க இயலாத உண்மை.

ஆயினும்.....

அப்படிப்பட்ட ஆளுநர்களும் மதிக்கத்தக்கவர்களே.

அனைத்து மாநில அரசுகளையும் கட்டுப்படுத்தும் அதிகார பலம் நடுவணரசுக்கு உண்டு என்பதால், தங்களுக்கான ஆளுநரின் நடவடிக்கைகளை மாநில அரசுகளும் மக்களும் வெறுத்தாலும், அவரை அவமதிக்கும் காரியங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை; ஈடுபடுவது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கதும்கூட.

ஆக.....

ஆளுநர் என்பவர் மக்களால் என்றென்றும் மதிக்கத்தக்கவர் என்பதை மக்கள் ஒருபோதும் மறத்தல் கூடாது; கூடவே கூடாது.

மற்ற மாநிலங்களைப் போலவே, தமிழ்நாட்டுக்கும் ஆளுமைத் திறன் படைத்த ஆளுநர்களைப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது; கிடைத்திருக்கிறது.

அவர்களெல்லாம் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்; இப்போதுள்ளவரும் கொஞ்சமே கொஞ்சம் பேரால் மதிக்கப்படுகிறார்.

தமிழ்நாட்டின் இப்போதைய ‘ஆளுநன்’ ஆர்.என்.ரவி என்பது அறியத்தக்கது.

                               *   *   *   *   *

மிக முக்கியக் குறிப்பு:

அவசரமாக வெளியூர் புறப்படும் நெருக்கடியான நேரத்தில் எழுதப்பட்ட பதிவு இது. பிழை[எழுத்துப் பிழைகள் உட்பட] காணின் பொறுத்தருளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி!