ஆர்வம் காரணமாக, என்னுள் எழுந்த ‘கடவுளின் படைப்பு’ குறித்த எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளேன்.
புரிந்தால் இது பற்றிய ஆய்வை ஆர்வத்துடன் தொடர்வீர்கள். புரியவில்லை எனின், உங்களின் நேரத்தை வீணடித்தமைக்காக என்னை மன்னித்திட வேண்டுகிறேன்.
* * * * *
அண்டவெளியில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள். அனைத்தும் என்பதில், ஆறறிவால் அறியப்படுகிற, படாத பொருள்கள் உயிர்கள் என்று எல்லாமே அடங்கும்.
எல்லாமே கடவுளின் படைப்புதான் எனின், அவர் படைப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பு எதுவுமே இருந்திருக்கவில்லை என்றாகிறது.
எதுவுமே இல்லாத ஒரு நிலையை ‘வெறுமை’ என்று சொல்லலாம்.
‘வெறுமை’ என்பது என்ன?[பழைய பதிவொன்றில் இது குறித்த சிறு விளக்கம் இடம்பெற்றுள்ளது]
ஞானிகள், மகான்கள், அவதாரங்கள் என்றெல்லாம் போற்றப்பட்டவர்களோ, அறிவியல் அறிஞர்களோ[விஞ்ஞானிகள்] இது பற்றி விளங்கச் சொன்னவர் எவருமில்லை.
நாம் அறிந்த சூரியன், அல்லது சூரியன்கள், அதை/அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் என அனைத்தையும் அகற்றினால்[கற்பனைதான்] வெளியில் எஞ்சியிருப்பது, இருப்பன என்று எதுவும் இல்லை; இருள், வெளிச்சம் முதலான எவையுமே இல்லை.
ஆக, எதுவுமே/எவையுமே இல்லாத அந்த ‘வெறுமை’ எப்படியிருக்கும்?
கேள்வி மிக எளிதானதுதான். விடை?
ஆறறிவு வாய்க்கப்பெற்ற மனிதர்கள் இதற்கு விடை காண்பது எப்போது?
எப்போதோ இப்போதோ அது அத்தனை எளிதல்ல.
ஆக.....
‘வெறுமை’ என்பதே என்னவென்று புரிந்துகொள்ள இயலாத நிலையில் கடவுளைப் பற்றிச் சிந்தித்து, அப்படியொருவர் ‘இருக்கிறார்’ என்று நிரூபிப்பது சாத்தியமே அல்ல என்று சொல்லத் தோன்றுகிறது.
சிந்தியுங்களேன்!
* * * * *
***இப்படிச் சிந்திப்பது நம் வாழ்க்கைக்கு எவ்வகையிலும் பயன் தராது என்றாலும், இது நம் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் என்பது நம் நம்பிக்கை.
* * * * *
***இவ்வகையான கருத்தமைந்த கட்டுரையை எவரேனும் எம்மொழியிலேனும் எழுதியிருக்கலாம். அதைத் தேடிக் கண்டறிந்து மேற்கோள் காட்டுவது அத்தனை எளிதாக இல்லை.