இது நான் படைத்த, கருத்தாழம் மிக்க உளவியல் கதை[ஹி... ஹி... ஹி!!!]; 2015இல் 67 பேர் மட்டுமே வாசித்தார்கள்.
“பாவம் ‘பசி’பரமசிவம்!” என்று பரிதாபப்படுகிறீர்களா?
ஊஹூம்! அந்த 67இல் நீங்களும் ஒருவர் என்றாலும் மீண்டும் படியுங்கள்.
இதைக் குறைந்தபட்சம் 1,00,000 பேராவது[ஹி... ஹி... ஹி!!!] வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை... அல்ல, பேராசை!
நன்றி!
“சாயங்காலம் வரும்போது எப்பாடுபட்டாவது ஒரு மாந்திரீகனை அழைச்சிட்டு வாங்க" என்றார் அன்னபூரணி.
“எதுக்கு.” -விழிகள் விரியக் கேட்டார் சாமிநாதன்.
“கொஞ்ச நாளா நம்ம புள்ளயோட நடவடிக்கை ஒரு மாதிரியா இருக்கு. எனக்குப் பயமாவும் இருக்கு.”
“விளக்கமா சொல்லு.”
அது ஒரு மனநல மருத்துவமனை.
காத்திருந்த சாமிநாதன், தன் முறை வந்ததும் மருத்துவர் குணசீலனைச் சந்தித்து ’வணக்கம்’ சொன்னார்.
“சொல்லுங்க” என்றார் டாக்டர் குணசீலன்.
தன் மகனின் மன நிலை மாற்றங்களை விவரித்த சாமிநாதன், “என் மனைவி, ஒரு மாந்திரீகனைத் தேடிப் பிடிச்சி அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. எனக்கு, மந்திரம், மாந்திரீகத்திலெல்லாம் நம்பிக்கை இல்லாததால, உங்களைத் தேடி வந்தேன்” என்று சொல்லி முடித்து, டாக்டரின் மறுமொழிக்காகக் காத்திருந்தார்.
"உங்க பையன் பேரு?”
“கவின் டாக்டர்.”
கவினுக்கு என்ன வயசு?”
“பதினாறு முடிஞ்சி ஆறு மாசம் ஆச்சு.”
“நாம எல்லோருமே பதினாறு பிளஸ்ஸைக் கடந்தவங்கதான். பதினாறில் கால் பதிச்ச போது பெண்களுடனான உங்க அனுபவத்தை மீட்டெடுத்துச் சொல்லுங்களேன்.” -சிரித்துக்கொண்டே சொன்னார் குணசீலன்.
கண்மூடி யோசனையிலாழ்ந்த சாமிநாதன் சொன்னார்: “ஓடிப் பிடிச்சித் தொட்டுத் தழுவி என்னோடு விளையாடிய என் தோழி ஒருத்தியை, சில ஆண்டுப் பிரிவுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. மலர் மொட்டுகளையும் மணம் பரப்பும் பூக்களையும் சுமந்த பூங்கொடி போல அவள் அசைந்து ஒசிந்து நடந்து வர்றதைப் பார்த்த போது, என் உடம்பு முழுக்க ஒருவித இன்பச் சிலிர்ப்பு பரவிச்சி டாக்டர்.....
.....அப்புறமும் அவளைப் பார்க்கணும், பேசணும்னு மனசு ஆசைப்பட்டது. பட்டும் படாமலும் ஒட்டி நின்னும் பேசினப்போ, உடம்போடு உடம்பு லேசா உரசினப்போ எல்லாம் புதுவிதமான சந்தோஷத்தை மனம் அனுபவிச்சது. அவளுடனான சந்திப்பு சாத்தியம் இல்லாமல் போன பிறகு, அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம், நெருங்கி நின்னு அவங்க அழகை ரசிக்கவும், தொட்டுப் பேசவும், ஏன், கட்டி அணைக்கவும்கூட மனம் ஏக்கப்பட்டது. அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலையில், மானசீகமாய் அவர்களுடன் உறவாடித் திருப்தி அடைஞ்சிருக்கேன்.....
திருமணம் ஆகும்வரை இந்த நிலைதான் நீடிச்சது. எல்லாப் பதினாறு பிளஸ் விடலைகளின் நிலையும் இதுதானே டாக்டர்?” என்றார் சாமிநாதன்.
“ஆமா. இந்த மாற்றங்கள் இயற்கையானதுதான். கவலைப்பட ஒன்னும் இல்ல.”
“எங்க பிள்ளையோட நடத்தை ரொம்ப வித்தியாசமா இருக்கே டாக்டர்?”
“குமரிகளைப் பார்ப்பது, பேசுவதுமான இன்னபிற அனுபவங்களையெல்லாம் தனிமையில் அசைபோட்டுச் சுகம் காணும்போது பிறர் குறுக்கீடு நிகழ்ந்தால், அவர்களிடம் எரிந்து விழுவதும் விடலைகளுக்கான பொதுக் குணம்தான். இந்தக் குணம் உங்க மகனுக்கும் இருக்கு. அதோட கொஞ்சம் விதிவிலக்கானவனாகவும் இருக்கான். இவனைப் போன்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்..” என்ற டாக்டர் தொடர்ந்து பேசினார்.
“கவின், ஆஞ்சநேயர் உருவத்தைக் கையில் சுமந்து திரியறான்னா, அந்த பிரமச்சரியக் கடவுள், இச்சையைக் கட்டுப்படுத்த உதவுவார் என்ற நம்பிக்கைதான் காரணம். நடு இரவில், கவர்ச்சிக் குமரிகளின் நினைப்பில் உறக்கம் வராமல் இம்சைப்படும் போதெல்லாம் குளிர்ந்த நீரில் குளிச்சிருக்கிறான். அது இச்சையைத் தணிக்கும் என்பது தெரிஞ்சிருக்கு. எங்கோ படிச்சிருக்கான்; கேள்விப்பட்டிருக்கிறான். அசைவம் வேண்டாம்னு சொல்றது, அது இச்சையைத் தூண்டும் என்பதால்தான்.....
.....இந்த மாதிரியான காரியங்களில் அவன் ஈடுபடுறான்னா, அதுக்கு, சராசரிக்கும் மேலான காம உணர்ச்சியின் தாக்குதலே காரணம். எப்பாடு பட்டாவது அதை ஜெயிக்கணும்; வாழ்க்கையில் சாதிக்கணும்கிற உத்வேகம் அவனுக்கு இருக்கு. இது ஒரு வகையான போர்க்குணம். அதீதக் காம உணர்ச்சி உள்ள இளைஞர்கள், முறையா அதைக் கட்டுப்படுத்தி, ஒரு லட்சியத்தோடு வாழ்ந்தா, எதிர்காலத்தில் சாதனையாளர்களா உருவாவது நிச்சயம்.
சாதனை நிகழ்த்திய அறிஞர்கள், மற்றும் மேதைகளின் வாழ்க்கையைத் தோண்டித் துருவி ஆராய்ந்தால், அவர்களில் மிகப் பலரும் மிகையான காம உணர்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஒரே ஒரு உதாரணம்... மகாத்மா காந்தி, தன் வாலிப வயதில் இதைக் கட்டுப்படுத்த மணல் மூட்டை சுமந்து ஓடுவாராம்; ஜில் தண்ணீரில் நேரம் போறது தெரியாம உட்கார்ந்திருப்பாராம்......
.....உங்க மகன், எதிர்காலத்தில் நிச்சயம் சாதிப்பான்.....
.....நல்ல சிந்தனையாளர்களின் நூல்களைப் படிக்கக் கொடுப்பது; அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கச் செய்வது; பல்வேறு இடங்களுக்கும் அழைச்சிட்டுப் போயி, பலதரப்பட்ட மனிதர்கள் பற்றி அறியச் செய்வது என்று உங்களால் முடிந்தவரை அவனுக்கு உறுதுணையா இருக்கலாம்.” -சொல்லி முடித்தார் டாக்டர்.