மனிதர்கள் தவறுகள் செய்வதற்கும் களவு, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் இழைப்பதற்கும் சூழ்நிலை, மனப்பக்குவம், மரபுவழிக் குணம் முதலானவை மட்டுமே காரணங்கள் அல்ல; மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரிவதும் தலையாய காரணம் ஆகும்.
புதிது புதிதாக உற்பத்தி செய்யப்படுவனவும், வளர்க்கப்படுவனவும், மக்கள் மனங்களில் திணிக்கப்படுவனவுமான மூடத்தனங்களுக்குக் கடவுள் நம்பிக்கையே காரணமாக உள்ளது என்பதைச் சிந்திக்கத் தெரிந்த யாவரும் அறிவர்.
நிரூபிக்கப்படாத பல கடவுள்களில் திருப்பதி ஏழுமலையானும் ஒருவர்.
அவரின் அருளைப் பெறுவதற்கென்று இடைவிடாது செய்யப்படும் சடங்குகளும் விழாக்களும் சகிக்கவே இயலாதவை.
அவ்வகைச் சடங்குகளில் ஒன்றுதான் சந்திரக் கிரகணத்தின்போது கோயிலின் வாயிலை அடைத்துவிடுவது.
இவை தவிர, கிரகணத்தால் மனித இனத்துக்குப் பெரும் தீங்குகள் விளையும் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
இந்தவொரு முட்டாள்தனத்தைத்தான் இன்று செய்யவிருக்கிறது ஏழுமலையான் கோயில் நிர்வாகம்[மற்றப் பிரபலக் கோயில்களும் இதற்கு விதிவிலக்கல்ல].
இன்றும் நாளையும்(அக் 28, 29) சந்திரக் கிரகணம் நிகழவிருப்பதால், கோயிலின் வாசல் கதவுகளை மூடுகிறார்களாம்[இன்று காலை 07.00 மணி ‘சன்’ தொ.கா. செய்தி].
அதாவது ஏழுமலையான் சாமியை இன்று தரிசிக்கக் கூடாதாம்.
ஏன்?
மனிதர்களும் மற்ற உயிர்களும் பாதிக்கப்படுவது போல இந்தப் பெத்தப் பெரிய சாமியும் பாதிக்கப்படுவாரா?
“ஆம்” என்றால், “ஐயோ பாவம் ஏழுமலையான்” என்று பரிதாபப்படத் தோன்றும்.
இப்படி அறிவியல் அடிப்படையில் எத்தனை கருத்துரைகளை முன்வைத்தாலும் அவற்றிற்கு இந்த ஏழுமலையானின் பிரதிநிதிகளிடமிருந்து பதில் வராது.
“நம் முன்னோர்கள் வகுத்துத்தளித்த வழிபாட்டு நெறிமுறைகளில் இதுவும் ஒன்று” என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் நம் முன்னோர்கள் அத்தனை பேருமே புத்திசாலிகளா என்று இவர்கள் யோசித்ததே இல்லை.
ஏழுமலையான் என்றில்லை, கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரால் மட்டுமே இவர்களைத் திருத்த இயலும்.
செய்வாரா கடவுள்?!