*இந்தச் சொல் இடம்பெறாத மொழி அகராதி எதுவும் இல்லை. ஆனால் இதற்கான, புரிந்துகொள்ளும்படியான முழுமையான விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை.
*அண்டசராசரத்திலுள்ள அணுக்கள், கோள்கள், மனித இனம், பிற உயிரினங்கள் என்று அனைத்திற்குமே தோற்றமும் அழிவும் உண்டு. இவை இல்லாதவர் இவர் மட்டும்தானாம்!
*அனைத்துப் பொருள்களும் உயிர்களும் அஃறிணை, உயர்திணை, ஆண்பால், பெண்பால் என்று ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும். எந்த ஒன்றிலும் அடங்காத பெருமைக்குரியவர் இவர் என்கிறார்கள்[இதனால்தான், ஞானிகள் ‘கடவுள் அவனாகவும் அவளாகவும் அதுவாகம் எதுவாகவும் இருப்பார். அவ்வாறு இல்லாமலும் இருப்பார்’ என்று தாமும் குழம்பி மக்களையும் குழப்பினார்கள்].
*கோள்கள் பல. உயிர்கள் பல. அணுக்கள் பல பல பல. ஆனால், இவர் மட்டும் ஒரே ஒருவர்தான் என்கிறார்கள்.
*எந்தவொரு அளவுகோளுக்கும் கட்டுப்படாத விரிந்து பரந்த பிரபஞ்ச வெளியில் இருந்துகொண்டிருக்கும் அல்லது இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்தும் இவருக்கு மட்டுமே சொந்தம். உரிமை கொண்டாட வேறு எதுவுவோ எவையுமோ எவருமோ எவர்களுமோ இல்லாதது இவரின் அதிர்ஷ்டம்.
*அன்பு, பாசம், நேசம் என்று அனைத்துப் பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக விளங்குபவர் இவர் மட்டுமே என்பதும், இவரிடமிருந்துதான் இப்பண்புகள் நம்மால் பெறப்பட்டன என்பதும், வரம்பு கடந்த பேரறிவும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர் இவரே என்பதும் அளப்பரிய இவர்தம் பெருமையின் அடையாளங்கள் என்றியம்புகிறார்கள்.
*உடல் உழைப்பையும் அறிவாற்றலையும் பயன்படுத்திப் பிற மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்க, கணக்குவழக்கில்லாமல் பொய்யான [கடவுள்]கதைகள் சொல்லிச் சில[பல?]பேர் பிழைப்பு நடத்துவதற்குக் காரணமாய் அமைந்தவர் இவர்.
*இவரால் நல்லது ஏதும் நடக்காவிட்டாலும், இவரை நம்பும் மனிதர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது புரியாத பெரும் புதிர்.
*இவர் சொன்னதாக, மதவாதிகள் இல்லாதது பொல்லாதது என்று மதப்புத்தகங்களில் எதை எதையோ எழுதி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்கும் திராணி கொஞ்சமும் இல்லாதவர் இவர்.
*இவர் படைத்ததாகச் சொல்லப்படும் அனைத்திலும் எத்தனை எத்தனையோ குறைகள்/குளறுபடிகள் இருப்பினும், இவரின் புகழ் பாடுவதற்கென்று எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டிருப்பது இவர் பெற்ற பேறு!