அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 3 நவம்பர், 2023

தமிழ்நாடு அரசே, இனியும் இப்படித் தமிழை இழிவுபடுத்தாதே!!!

//தமிழில் பெயர்ப்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ2000 அபராதம்// 

இது சற்று முன்னர்[07.30] ‘சன்’ தொலைக்காட்சியில் வெளியான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, அதாவது, வணிக நிறுவனங்களுக்கான எச்சரிக்கை; மிரட்டல் என்றும் சொல்லலாம்[உண்மையல்ல].

இந்த அறிவிப்பு அவ்வப்போது[பல ஆண்டுகளாக] வெளியாகிறது என்பது தமிழறிந்த யாவரும் அறிந்ததே.

பயன்?

ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்ற பெயர்ப் பலகைகள் பலவும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

பலர், ஆங்கிலத்துக்கு கீழே, எட்ட நின்று பார்த்தால் கண்ணுக்குத் தெரியாத அளவில் தமிழுக்கும் இடம் தருகிறார்கள்.

இவ்வாறெல்லாம் தமிழை அவமதித்தால் ரூ2000 அபராதமாம்.

இந்த அறிவிப்பு வணிகர்களை மிரட்டவா, தமிழை அவமதிக்கவா?

இந்த அறிவிப்பு வெளியாகத் தொடங்கிய நாளிலிருந்து எத்தனைக் கடைக்காரர்களிடம் ரூ2000 அபராதமாக வசூலிக்கப்பட்டது? அபராதம் செலுத்தியதால் எத்தனை வணிகர்கள் மனம் திருந்தித் தமிழில்[பெரிய எழுத்துகளில்] பலகை வைத்தார்கள்?

இல்லை. மாற்றம் ஏதும் நிகழவே இல்லை. 

ரூ2000 என்பது வணிகர்கள் சில நிமிடங்களில் சம்பாதிக்கும் அற்பத் தொகை[விதிவிலக்கானவர்கள் இருக்கலாம்].

நகராட்சி ஊராட்சி போன்றவற்றின் அதிகாரிகளுக்கும், வணிகவரிக்காரர்களுக்கும் அவர்கள் கொடுக்கும் ‘மாமூல்’ தொகையுடன் ஒப்பிட்டால், இது வெறும் தூசு.

தமிழில் எழுதாதற்காக அபராதம் செலுத்த நேர்ந்தாலும், அவர்கள் செலுத்தும் அந்தத் தொகை தமிழ்நாடு அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ போடப்படும் ‘பிச்சை’[அற்பத் தொகை]யாகும்.

அப்புறம் எதற்கு அவ்வப்போது வணிகர்களுக்கான இந்தவொரு எச்சரிக்கை?

இது, தமிழை வாழவைக்கும் செயலா, அவமதிக்கும் சடங்கா?

இந்தச் சடங்கைச் செய்யுமாறு தமிழர்கள் கோரிக்கை வைக்கிறார்களா? போராட்டம் நடத்துகிறார்களா?

இல்லை. காரணம், அண்டை மாநிலத்துக் கன்னடக்காரனுக்கு இருக்கும் மொழிப்பற்றில் பத்தில் ஒரு பங்குகூட இவர்களுக்கு இல்லை.

கர்னாடகாவில் கன்னடம் இடம்பெறாத பெயர்ப்பலகையே இல்லாததற்குக் காரணம், வணிகர்களுக்கு அவர்கள் தந்த மிரட்டல்; கன்னடம் இல்லாத பலகைகளை அடித்து நொறுக்கியது.

தமிழர்களுக்குத் தமிழ்ப்பற்று[போதுமான அளவுகூட] இல்லை. தமிழ் தமிழ் என்று அனைத்துத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும்[திமுக உட்பட] மேடைகளில் வாய் கிழியக் கத்துவது வழக்கமாகிப்போன ஒரு பழக்கம். அதைச் செய்யாவிட்டால் தமிழர்கள் ஓட்டுப் போடமாட்டார்கள் என்பதெல்லாம் இல்லை.

எனவே.....

தமிழ்நாடு அரசுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது, உண்மையில் அனைத்துப் பெயர்ப் பலகைகளிலும் தமிழ்[பெரிய எழுத்தில்] இடம்பெற வேண்டுமானால்.....

அபராதத் தொகையைக் குறைந்தபட்சம்[நிறுவனத்தின் தரத்தைப் பொருத்துத் தொகை மாறுபடலாம்] ரூ20000[இருபதாயிரம்] என்று உயர்த்துங்கள்.

கையூட்டுப்[லஞ்சம்] பெற்றுக்கொண்டு அபராதம் வசூலிக்கத் தவறும் அதிகாரிகளைத் தண்டியுங்கள்.

இவற்றில் எதுவும் சாத்தியப்படவில்லை என்றால், மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வழிவகைகளைக் கையாளுவதில் கவனம் செலுத்துங்கள்.

மாறாக, ‘பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லையென்றால் ரூ2000 அபராதம் விதிக்கப்படும்’ என்பதான  அறிவிப்புகளை வெளியிட்டுத் தமிழை அவமானப்படுத்தாதீர்கள்.