கடவுள் இல்லை[“இல்லவே இல்லை” -பெரியார்] என்றாலும், அவரிடம் கோரிக்கை வைப்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்றாலும், அவரை நம்புகிறவர்களும், தங்களின் குறைகள் தீர அவரிடம் கோரிக்கை வைப்பவர்களும் கோடிக்கணக்கில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கை, அளவு கடந்த துன்பங்களை அனுபவிக்கும்போது, “எல்லாம் அவன் செயல்” என்று சொல்லி ஆறுதல் பெற உதவுகிறது என்பதும் ஒரு நம்பிக்கைதான்.
எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாதபோது, “அவன் விட்ட வழி” என்று அவர் மீது பாரத்தைச் சுமத்திவிட்டுக் கவலையைக் குறைத்துக்கொள்ள முயல்பவர்களும் உள்ளனர்.
இஸ்லாமியர்கள் என்றால், பாராட்டுக்குரிய சாதனைகள் நிகழ்த்தினாலும் “எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்பார்கள் தன்னடக்கத்துடன்.
ஆக, நல்லது செய்யும்போது, அல்லது நிகழும்போது மட்டுமே நம் மக்கள் கடவுளின் பெருமை பேசுவார்கள்.
தப்புத்தண்டாவில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ளும்போதுகூட, “இதுவும் ஆண்டவன் செயலே என்று அவன் மீது பழி சுமத்துவதில்லை. “எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்று அல்லாவின் புகழ் பாடும் இஸ்லாமியர்கள்கூட, தவறு செய்தாலும், குற்றம் புரிந்தாலும், “எல்லாப் பழியும் இறைவனுக்கே[அல்லாவுக்கே] என்று சொல்வதில்லை.
ஆக, எம்மதம் சார்ந்தவராயினும் எந்தவொரு சூழலிலும் கடவுளை இழித்துரைக்காமலிருப்பதற்கு.....
அவர் மீதான பக்தி என்பதைவிடவும், பழி தூற்றினால் அவர் தண்டிப்பார் என்று அஞ்சுவதே முக்கியக் காரணம் ஆகும்.
ஆனால், இந்த இருபதாம் நூற்றாண்டில், இந்த நிலைமை முற்றிலுமாய் மாறிவிட்டது.
அதற்கு உதாரணமான ஒரு நிகழ்வு பின்வருமாறு:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் 50 வயதான செந்தில் குமார்.
கடந்த 3 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து திருமுடி விநாயகர் கோயில் தெருவில் வடமாநிலத் தொழிலாளர்களுடன் தங்கி வேலை பார்த்துள்ளார்.
இவர்[செந்தில் குமார்] தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகே மூக்குப்பொடிச் சித்தர் கோயில் உள்ளது. 48 வயதான் ‘கமல் உஸ்மான்’ என்பவர் தினமும் அங்குச் சாமி கும்பிடுவதை[?!] வழக்கமாக்கியிருந்தார்.
எதிர்பாராத வகையில் ஒரு நாள், திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு வந்த கமல் உஸ்மான், செந்தில் குமாரைக் கொலை செய்துவிட்டதாகச் சரணடைந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கூறிய வாக்குமூலத்தைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தில்.....
//செந்தில் குமார் அடிக்கடி அவர் தங்கியிருந்த அறைக்குப் பெண்களை அழைத்து வருவதையும், அவ்வாறு அழைத்துவரும் பெண்களுடன் சித்தர் கோயில் அருகே நின்று பேசுவதையும் அவர்களுடன் பின்னர் சல்லாபிப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். அவர் இவ்வாறு நடந்துகொண்டது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காததால், அது குறித்துச் சிவபெருமானிடம்[?!] முறையிட்டேன்.
பல முறை முறையிடவே, ஒரு நாளில், செந்தில் குமாரைக் கொலை செய்யுமாறு கடவுள் கூறினார்.....
கடவுள் சிவபெருமானின் ஆணைக்கிணங்க, செ.குமார் தங்கியிருந்த அறைக்குக் கத்தியுடன் சென்ற நான்[கமல் உஸ்மான்] அவரை 18 முறைக்கு மேல் வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்திக் கொலை செய்தேன்// என்று கூறியுள்ளார்.
இது கலிகாலம் என்பார்கள்.
கொலை செய்துவிட்டுக் கடவுளின் மீது பழி போடுவது போல, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும், வன்புணர்வு செய்வோரும்கூட, கடவுளின் தூண்டுதலால் குற்றம் செய்ததாகக் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
எல்லாம் அவன் செயல்! எல்லாப் பழியும் இறைவனுக்கே!!
* * * * *