//வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு ரூ.300 சிறப்புத் தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும், இலவசத் தரிசனம் மூலம் 50,000 பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்க வாசல் திறந்திருக்கும் இந்த 10 நாட்களிலும் சுமார் 7 முதல் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்குத் தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது// https://tamil.asianetnews.com/spiritual/vaikunta-ekadasi-2023-10-days-devotees-are-allowed-to-vaigunta-vaasal-in-thirupathi-rya-s3jies
சொர்க்கவாசலைத் திறந்துவைத்துப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைப் பிரவேசம் செய்விக்கும் ஆன்மிகப் பணியை ஆண்டுதோறும்[விசேட நாட்களில்] தவறாமல் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம்.
இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பை மேற்கண்டவாறு அது செய்துள்ளது.
அந்தச் சொர்க்கத்திற்குப் புண்ணியம் பல செய்தவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது நம்மவர்களின் நீண்ட நெடுங்கால நம்பிக்கை.
சொர்க்கம் செல்லும் அத்தனைப் புண்ணியவான்களும் அதற்கான வாயிலை[சொர்க்க வாசல்]க் கடந்தால்தான் சொர்க்கத்தில் நுழைய முடியும்.
ஆக, புண்ணியவான்கள் மட்டுமே நுழையக்கூடிய வாசலில்[சொர்க்க வாசல்] புண்ணியம் செய்தவர், செய்யாதவர் என்று உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் நுழைந்திடும் அரிய வாய்ப்பைத் திருப்பதி நிர்வாகம் வழங்குகிறது என்பது பெரிதும் போற்றத்தக்கது.
இந்த அதிசயத்தை அவ்வப்போது நிகழ்த்தும் தேவஸ்தானிகள் நினைத்தால்.....
சொர்க்கம் சென்று திரும்பும் பேரதிசயத்தையும் அவர்கள் நிகழ்த்துவார்கள் என்று உறுதிபடச் சொல்லலாம்.
சொர்க்க வாசலில் நுழைவதற்குக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது[நாள் ஒன்றுக்கு ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும், இலவசத் தரிசனம் மூலம் 50,000 பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது].
சொர்க்கத்தில் நுழைவதற்கும் கூடுதலாகவோ, மிகக் கூடுதலாகவோ, மிக மிகக் கூடுதலாகவோ கட்டணங்கள் வசூலிக்கலாம்.
நிர்ணயிக்கவிருக்கும் தொகை குறித்து அறிவிக்குமாறு ஏழுமலையானிடமே கோரிக்கை வைக்கலாம்.
சீனியர் அர்ச்சகர்களின் கனவிலோ, அவர்களுக்குக் கேட்கும்படியாக அசரீரியாகவோ அத்தொகை பற்றி அவர் அறிவிப்புச் செய்வார் என்பது 100% உறுதி.
ஏழுமலையான் கோடி கோடி கோடி கோடீஸ்வரக் கடவுள் என்பதால் ஏழைகளுக்கான இலவச அனுமதிகளை விரும்பமாட்டார் என்பதும், மகான்களும் ஞானிகளும் அவதாரங்களும் மட்டுமே அங்கு[சொர்க்கம்] நிரந்தரமாகத் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.