சனி, 2 டிசம்பர், 2023

குடி... குட்டி... சரசம்... சல்லாபம்... சாவு... வாழ்க்கை வாழ்வதற்கே!!!

 “அவர் செத்துட்டார். செக்ஸ் மட்டும்தான் வாழ்வுன்னு நம்பி வாழ்றவங்களுக்கு இதுதான் முடிவு. அவருக்கு இந்த லோகத்தில் சந்தோசப்பட வேற ஒன்னும் இல்ல” என்றான் நெல்லையப்பன்.

“உன் சித்தப்பாவுக்குக் கல்யாணம் ஆகலையா?” என்றான் இவன்.

“கல்யாணமாகி அஞ்சு குழந்தைகள் இருக்கு.”

“அப்புறம் ஏன் இந்த செக்ஸ் வெறி?”

“படிக்கும் நாளிலிருந்தே அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம். வயசு ஆக ஆக வெறி அதிகம் ஆயிடிச்சி. ஆனா, அதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைஞ்சி போச்சி. ஏக்கத்தைத் தவிர்க்கக் குடிச்சார். குடிச்சிக் குடிச்சி நுரையீரலில் ஓட்டைகள் விழுந்துடிச்சி. ஆனாலும், அதனால அவர் சாகல; விஷம் குடிச்சிச் செத்தார்.”

“அவர் சாவு உன்னை ரொம்பப் பாதிச்சதோ?”

“இல்ல. மனுசனாப் பொறந்த எல்லாருமே என்னிக்காவது ஒரு நாள் செத்துத்தானே ஆகணும். அவர் சாவை மட்டுமல்ல, என்னுடைய சாவை நினைச்சிக்கூட நான் பயந்ததே இல்ல. சொல்லப்போனா, சாவை நேரடியாவே சந்திச்சவன் நான்.....”

குறுக்கிட்டான் இவன். “ரொம்ப சுவாராசியமா இருக்கும்போல. சொல்லேன்” என்றான்.

நெல்லயப்பன் சொல்லத் தொடங்கினான்.

“ஒரு தடவை  பஸ்ஸில் தேவிகுளம் போய்ட்டிருக்கும்போது டிரைவருக்குப் பஸ்ஸின் கண்ட்ரோல் தப்பிவிட்டது. சாலையை விட்டு இறங்கி அது மலைச் சரிவில் ஓட ஆரம்பிச்சுட்டுது. பஸ்ஸில் இருந்தவங்க, ‘குய்யோ முறையோ’ன்னு கூச்சல் எழுப்பிட்டு அங்குமிங்கும் ஓடுறாங்க. வாசல் வழியாவும் ஜன்னல் வழியாவும் வெளியே குதிச்சி நிறையப் பேர் செத்துட்டாங்க. நான் மட்டும் சீட்டைவிட்டு அசையவே இல்ல. வரிஞ்சி கட்டிட்டுச் சாவை நேருக்கு நேர் சந்திக்கத் தயாரா இருந்தேன். ஆனாலும் நான் சாகல. அந்த விபத்தில் அதிகக் காயம் இல்லாம தப்பிச்சது நான் மட்டும்தான்.”

“மேலே சொல்லு.”

“அப்புறம் ஒரு தடவை பாண்டிச்சேரி போயிருந்தேன். உனக்குத்தான் என்னைத் தெரியுமே. நல்லதோ கெட்டதோ, ஒரு காரியத்தில் இறங்கினால் அதன் கடைசி முனைவரை போய்ப் பார்த்துவிட நினைப்பவன் நான். ஒரு தடவை வஞ்சியூரில் ஒரு ராவும் பகலும் முழுக்க அந்த அப்பளக்காரியின் வீட்டில் நான் இருந்ததை உன்கிட்டே சொல்லியிருக்கேன்.....”

“ஆமா...சொல்லியிருக்கிறே...”

“உனக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கு! ம்ம்ம்..... என்ன சொல்லிட்டிருந்தேன்..... ம்ம்ம்..... பாண்டிச்சேரிக்குப் போயிருந்தேனா..... கையில் இருநூறு ரூபா[பல ஆண்டுகளுக்கு முன்பு] எடுத்துட்டுப் பாரில் நுழைஞ்சேன்; என்னவெல்லாமோ தின்னேன்; குடிச்சேன். கடற்கரை மணலில் போய் விழுந்தேன். என்னைக் கடலுக்குள் இழுத்துட்டுப் போறதும் கரையில் புரட்டித் தள்ளுறதுமாய்க் கடல் அலைகள் ரொம்பவே விளையாடியிருக்கு. இதைக் கவனிச்ச போலீஸ்காரர் ஒருத்தர் என்னைக் காப்பாத்தியிருக்கார். அவர் இல்லேன்னா நான் அப்பவே செத்திருப்பேன். சாவைப் பத்திப் பயம் இருந்திருந்தா ஃபுல்லா தண்ணியடிச்சிட்டுக் கடல் அலை என்னைத் தாலாட்டும்படியாப் போய்ப் படுப்பேனா?.....”

சொல்லிக்கொண்டிருந்தான் நெல்லையப்பன்.

அவனை விழிகளில் வியப்பு மேலிடப் பார்த்துக்கொண்டிருந்தான் இவன்........

                                                  *   *   *   *   *

***பிரபல எழுத்தாளர் நீல. பத்மநாபனின்.‘[அ]லட்சியம்’ சிறுகதையிலிருந்து எடுத்தாண்டது[ஒரு பகுதி மட்டும்].