அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 15 ஜனவரி, 2024

கசக்கும் பொங்கல்! வருத்தங்கள் பகிர்வு!!

பொங்கலன்று, அதிகாலையில் எழுந்து ஊரை[நாமக்கல்] ஒரு முறை சுற்றிவந்து, வாசல்தோறும் வரையப்பட்டிருக்கும் விதம் விதமானவையும் அழகானவையுமான கோலங்களைப் பார்வையிடுவது என் வழக்கம்.

நெஞ்சில் கட்டுக்கடங்காத வருத்தம் சுமந்து வீடு திரும்புவதும் வழக்கமாகிப்போன ஒன்று.

காரணம், ஆங்கிலத்தில் ‘Happy Pongal' சொல்லும் தமிழச்சிகள்[மற்ற ஊர்களிலும் இதே நிலைதான்?].

கடந்த ஆண்டுகளில், அரிதாகச் சில வாசல்களில் ‘பொங்கல் வாழ்த்து’ தென்பட்டதுண்டு. இந்த ஆண்டு அரிதினும் அரிதாகவே தமிழிலான வாழ்த்துகளைக் காண முடிந்தது.

ஆண்டுக்கொரு தடவை இடம்பெறும் சாதாரண நிகழ்வுதானே இது என்று அலட்சியப்படுத்த இயலாது.

காரணம்.....

‘தமிழ் தங்களின் தாய்மொழி. அது மதித்துப் போற்றப்பட வேண்டிய ஒன்று’ என்னும் உணர்வு தாய்க் குலத்தின்[தந்தைக் குலமும்தான்] மனங்களில் முற்றிலுமாய் அழிந்துபோனதன் அடையாளம் இது.

பிள்ளைகளை ஆங்கிலத்தில் கல்வி கற்க வைப்பதையே இவர்கள் விரும்புகிறார்கள்[மிக மிக மிக... பெரும்பான்மையோர். சிந்திக்கும் அறிவு வளரத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதையோ, அயல் நாடுகளில் வேலை தேட ஆங்கில அறிவும், அந்தந்த நாட்டின் தாய்மொழி அறிவும் தேவை என்பதையோ அறியாத செம்மறி ஆட்டுக் கூட்டம் இது].

ஆளும் கட்சிக்காரகளுக்கோ, ஓட்டு வாங்க வெறும் “தமிழ் வாழ்க” கூச்சலே போதுமானதாக உள்ளது. இதைவிடவும், பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம் அளிப்பதன் மூலம்[ரூபாய் ஐந்தோ பத்தோ கொடுத்துப் பயணச் சீட்டு வாங்க வக்கில்லையா? இவர்களென்ன வயதான அநாதைகளா? பிச்சைக்காரிகளா?] வாக்குகளை அள்ளிவிட முடிகிறது.

தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் ஆங்கில வழி பயில்வோர்[தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி மட்டுமே. இந்தி வளர்ப்பு வேறு], தமிழ் வழி பயில்வோரவிட 2 பங்குக்கும் அதிகம் என்பதும், இந்நிலையை மாற்ற இவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதும்[தனிப் பதிவு தேவை] அறியத்தக்கது.

தமிழர்களின் மனங்களில்[தமிழ்நாடு அரசு உட்பட] தமிழ் வாழவில்லை. தமிழ் வளர்க்கும் முயற்சியும் இல்லை என்பது மறுக்க இயலாத உண்மை.

தமிழுக்கான அரியணையில் அமர்ந்து கோலோச்சும் ஆங்கிலம் காலப்போக்கில் விரட்டியடிக்கப்பட்டு அந்த இடத்தை இந்தி கைப்பற்றும்[கல்லில் செதுக்கி வையுங்கள்]. வயிற்றுப்பாட்டுக்காக வெளிநாடு செல்லும் தமிழர்கள் அந்தந்த நாட்டுக் குடிமகன்களாக மாறி, தமிழை அறவே மறந்து வாழ்வார்கள்.

இனியும், தமிழை வைத்து இனி சொகுசாக வாழ இயலாது என்று கருதும் தமிழர்கள் அதை[உண்மைத் தமிழ்ப்பற்று உள்ள சிலர் சீந்துவாரற்று ஆங்காங்கே முடங்கிக் கிடக்கிறார்கள்] அலட்சியப்படுத்தி வாழ்வார்கள்.

இந்த அவல நிலை நீடித்தால், சில 100 ஆண்டுகளில்[அதிகம்?] தமிழ் அழியும்; தமிழின உணர்வும் அழியும். தமிழன் இங்கு[தமிழ்நாடு] மட்டுமல்ல, வேறு எங்கெல்லாமோ எவருக்கெல்லாமோ அடிமையாய் வாழ்ந்துகொண்டிருப்பான்.

அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் வருத்தங்கள்!