வியாழன், 18 ஜனவரி, 2024

மோடியை அவமானப்படுத்தும் ஆளுநன் ஆர்.என்.ரவி!!!

“ராம ராஜ்ஜியத்தை நோக்கிப் பாரதம் சென்றுகொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார் ஆன்மிகச் செம்மல் ஆர்.என்.ரவி[தினத்தந்தி, 18.01.2024; பக்கம் 10].

ராம ராஜ்ஜியத்தை நோக்கிப் பயணிக்கிறோமாம். சரி. பயணத்தைத் தொடங்கவதற்கு முன்னால் நாம் எங்கு வாழ்ந்துகொண்டிருந்தோம்?

இந்தியாவில்தானே?

இந்த இந்தியாவைத்தான் பாரதம் என்கிறார் ரவி.

இந்தப் பாரதத்துக்குப் ‘புண்ணிய’ என்னும் அடைமொழி கொடுத்து, ‘புண்ணிய பூமி’ என்பார்கள் ராம பக்தர்கள்.

இது[இந்தியா] புண்ணிய பூமி என்பதால் இங்கு வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் கொடுத்துவைத்தவர்கள்; அதாவது, புண்ணியம் செய்தவர்கள்.

இந்தப் புண்ணிய தேசமாம் இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பவர் ராமனின் அதி தீவிரப் பக்தரான மோடி.

மோடியே ராமர். ராமரே மோடி. மோடி ஆளும் இந்த ராஜ்ஜியம் ராம ராஜ்ஜியமே.

மோடியின் ஆட்சியில்[10 ஆண்டுகள்] இந்தப் புனித மண்ணில் பாலாறுகளும் தேனாறுகளும் ஓடுவதால் மக்கள் சுபிட்ஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்; இருக்கிறார்கள்.

மக்கள் சுகபோகிகளாக வாழ்வதற்கு இதைவிடவும் சிறந்த ராஜ்ஜியம்[நாடு] வேறு எங்கும் இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம்.

ஆளுநர் அவர்கள் பாரதம்[மோடி ஆளும் இந்தியா] ராம ராஜ்ஜியம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

இங்கே ‘பாரதம்’ என்பது பாரதத்தில்[இந்தியாவில்] வாழும் மக்களைக் குறிக்கிறது.

அதாவது, மோடி ஆளும் பாரதத்தில்[இந்தியாவில்] வாழப் பிடிக்காமல், ராம ராஜ்ஜியம் வேறு எங்கோ இருப்பதாக நம்பி, அதை நோக்கி மக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதாகச்  சொல்லியிருக்கிறார் ஆர்.என்.ரவி.

மோடியின் தயவில் ஆளுநர் பதவி பெற்று ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவர், நன்றி மறந்து, அவரை இப்படியெல்லாம் இழிவுபடுத்தலாமா?!

பாவம் மோடி!