பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 26 ஜனவரி, 2024

வாழ்ந்து தொலைப்பவன்களும் வாழப் பணித்தவனும்!!!

வாழ்ந்து சாகும்வரை, ஆசை, பாசம், நேசம், பூசல், பொறாமை, காதல், காமம் என்று பல்வேறு உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகிறோம்.

உடம்பை வளர்க்கவும், பாதுகாக்கவும், உணர்ச்சிகளுக்குத் தீனி போடவும்  காலமெல்லாம் போராடுகிறோம். அந்தப் போராட்டம் இறுதி மூச்சுவரை தொடர்கிறது.

எத்தனைப் போராடினாலும் நாம் அனுபவிக்கும் இன்பம் மிகக் குறைவு; துன்பங்களோ ஏராளம்.

இன்பதுன்பங்களால் ஆன இந்த வாழ்க்கை நாம் விரும்பிப் பெற்றதல்ல; நம்மினும் மேலான சக்தி உண்டு என்கிறார்களே, அதனிடமோ, வேறு எதனிடமோ வேண்டுதல் வைத்துப் பெற்றதும் அல்ல.

இம்மண்ணில் 'பிறந்து வாழ்தல்’ என்பது நம் மீது வலிந்து திணிக்கப்பட்டது.

திணிக்கப்பட்டதுதான். சந்தேகமே வேண்டாம்.

திணித்தது நம்மினும் மேலானது என்று சொல்லப்படும் அந்தச்  சக்திதானா?

அந்தச் சக்தியைத்தான் கடவுள் என்கிறார்களா?

பிறந்து வளர்ந்து, வறுமை, நோய்மை, பகைமை, இயற்கைப் பேரிடர்கள் என்றிவற்றை எதிர்த்துப் போராடி வாழ்ந்து, கொஞ்சம் இன்பங்களையும், அவற்றினும் பல மடங்குத் துன்பங்களையும் அனுபவித்துச் சாகும் வகையில் நம்மைப் படைத்தவன் அவன்தானா?[அறிந்தவர் எவருமில்லை]

“ஆம்” என்றால்.....

அவன் அயோக்கியன்! 

அந்த அயோக்கியனைக் கருணை வடிவானவன் என்று சொன்னவர்கள்/சொல்பவர்கள்.....

மன்னியுங்கள், அவர்கள் அறிவிலிகள் என்பது என் எண்ணம். 

அவனை வழிபட்டால் துன்பங்கள் அகலும்; இன்பங்கள் பெருகும்; செத்தொழிந்த பிறகு ‘நற்கதி’ வாய்க்கும் என்றவர்கள்/என்பவர்கள், ‘மனிதர்கள் அத்தனை பேரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, நல்லுறவை வளர்த்தால் மட்டுமே வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும்’ என்பதை அறியாத அடிமுட்டாள்கள் என்கிறேன் நான்.

நீங்கள்?