வியாழன், 25 ஜனவரி, 2024

கற்சிலையும் ‘பிராணப் பிரதிஷ்டை’யும் வஞ்சக நெஞ்ச மனிதர்களும்!!!

22.01.2024வரை ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்து கற்சிலைக்குள் தெய்வீகத்தன்மையை ஏற்றும் மந்திரம் பிராமணர்களுக்கு மட்டுதான் தெரிந்திருந்தது. அதாவது, கடவுள் அவர்களுக்கு மட்டும்தான் கற்றுக்கொடுத்திருந்தார்.

22.01.2024ஆம் நாளில்தான் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கற்சிலைக்குள் தெய்வீகத் தன்மையை ஏற்றும் பேற்றினைச் சூத்திரரான நரேந்திர மோடிக்கும் அவர் அருள்பாலித்திருக்கிறார் என்பதை உலகம் அறிந்தது.

பிராணப் பிரதிஷ்டை மூலம் வெறும் கற்சிலைக்குள் தெய்வீகத் தன்மையைப் புகுத்தி, அதைத் தெய்வமாக்க முடியும் என்றால், ஆறறிவு படைத்த மனிதர்களையும் தெய்வீகக் குணம் பெற்ற மனிதத் தெய்வங்களாக மாற்ற முடியும் என்பது உறுதி.

பொறாமை, சூது, வாது, வஞ்சகம், குரோதம், வன்கொடுமை செய்தல் போன்ற பல கெட்ட குணங்களின் வாழிடமாக உள்ள மனிதர்களையும், மேற்படிப் ‘பிராணப் பிரதிஷ்டை’ மந்திரத்தைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி இவ்வுலகிலுள்ள அத்தனை மனிதர்களுக்குள்ளும் பிராமணர்கள் தெவீகத்தைப்  புகுத்தியிருக்கலாம்.

அவர்கள் அதைச் செய்திருந்தால்.....

ஒட்டுமொத்த உலகமும் சொர்க்கப்புரியாக மாறியிருக்கும்.

பிராமணர்கள் அதைச் செய்யாதது ஏன்?

கடவுளின் பிரதிநிதிகளான[பிராணப் பிரதிஷ்டை மந்திரம் கற்றவர்கள், தங்களுக்குள் தெய்வீகத் தன்மையை ஏற்றிக்கொள்ளக் கூடாது என்பது கடவுள் விதித்துள்ள நிபந்தனை] தங்களைக் காட்டிலும் மேம்பட்ட நிலையைச் சூத்திரர்கள் பெறுதல் கூடாது என்ற பொறாமைக் குணம் அதற்கான காரணம் ஆகும்.

நரேந்திர மோடி பிராமணன் அல்ல; ஒரிஜினல் சூத்திர இனத்தவர் ஆவார்.

பிராமணர்களுக்கு உள்ள பொறாமைக் குணம் சூத்திரரான மோடிக்குக் கொஞ்சமும் இல்லை என்று நம்பலாம்.

இந்த நம்பிக்கையுடன், கடவுளின் பிரதிநிதியான மோடி அவர்களிடம் நாம் மிகு பணிவுடன் வைக்கும் வேண்டுகோள்:

“இந்திய அரசாங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத் தங்களின் முழு நம்பிக்கைக்குரிய அமைச்சரிடம் ஒப்படையுங்கள்; நாள்தோறும், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் உடம்புகளுக்குள் ‘பிராணப் பிரதிஷ்டை’ மந்திரத்தை ஓதி ஓதி ஓதி... அவர்கள் அத்தனைப் பேரையும் தெவீகத் தன்மை பெற்றவர்களாக மாற்றுங்கள்.”

வாழ்க மோடி! வளர்க அவரால் தெவீகத் தன்மை பெறுவோர் எண்ணிக்கை!!