இறக்கவிருப்பவர் நம் உறவினராகவோ, வேறு துணை இல்லாத உற்ற நண்பராகவோ இருந்தால், அவரின் உடல் நோவைச் சற்றேனும் குறைக்கவும், மன வலியையும் மரண பயத்தையும் ஓரளவுக்கேனும் தணிக்கவும் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:
*அறை விளக்கைச் சற்றே மங்கலாக ஒளிரவிட்டு மனதுக்கு இதமான சூழலை உருவாக்கலாம்.
*அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருப்பது, பிரிவை எதிர்கொள்ளவிருக்கும் அந்த நேரத்தில் அவருக்கும் நமக்கும் ஆறுதல் அளிப்பதாக அமையும்.
*பிரியாவிடை பெறும் அந்தக் கணங்களில் ஆரவாரமற்ற அமைதியான சூழல் அவசியம் என்பதால், அதிக அளவில் கூட்டம் சேரவிடாமல், அவரின் அன்புக்குரிய சிலரை மட்டும் அறைக்குள் அனுமதிப்பது நல்லது.
*அவருடைய செவிப்புலன் நல்ல நிலையில் இருந்தால், அவருக்கு மிக விருப்பமான பாடல்களைக் குறைந்த தொனியில் ஒலிக்கவிடலாம்; அவர் மிக விரும்பும் நூலிலிருந்து சில பகுதிகளைப் படிக்கலாம்.
*அவர் உரையாடும் நிலையில் இருந்தால், அவருக்கு என்ன தேவை என்று கேட்பதன் மூலம் அவர் மீதான நம் பாசத்தை உணரச் செய்யமுடியும்.
*அவர் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பது, அந்தத் துயரம் மிகுந்த நேரத்திலும் அவருக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை அவர் அறிந்து ஆறுதல் பெற உதவும்.
*தேவைப்பட்டால், குறைந்த அளவில் அவருக்கு மிகப் பிடித்தமான உணவைத் திரவ வடிவில் அருந்தச் செய்யலாம்.
*தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் அவர் இருந்தால் அந்நிலையிலேயே இருக்க விடுவது நல்லது. பாச மிகுதியால் பேச்சுக்கொடுப்பது மரண வலி அதிகரிக்க வழிவகுக்கும்.
*அவர் நம்மைப் பிரியவிருக்கும் இறுதி வினாடிகளில்.....
இரத்த அழுத்தம் குறையும். சுவாசம் ஏறுமாறாக இருக்கும்; இதயத் துடிப்பும் குறையும்; வெப்பநிலை தணிந்து உடம்பெங்கும் குளிர்ச்சி பரவும்.
எனவே,
*நம்மிடமிருந்து அவர் ‘பிரியாவிடை’ பெறும் தருணம் அது என்பதைப் புரிந்துகொண்டு, சில வினாடியாயினும் அவரைப் பிரியாமலிருப்பது மிக மிக முக்கியம்.
மேற்குறிப்பிட்ட செயல்களை மனம் கோணாமல் செய்து முடிப்பதால், இறப்பவர் அனுபவிக்கும் மரண வலி சற்றே குறைய வாய்ப்புள்ளது; இருப்பவரும் ஓரளவு மன அமைதி பெறலாம்.
* * * * *
***தளங்கள் சிலவற்றில் பொறுக்கிச் சேர்த்த கருத்துகளுடன் என் பரிந்துரைகளையும் இணைத்து வடிவமைத்த பதிவு இது.