2015இல் 181 ‘பார்வை’களை மட்டுமே பெற்றது.
இதன் நோக்கம், மிகக் கடுமையான காரசாரமான விவாதங்களுக்கு வித்திடுவதல்ல, மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் சிந்திக்கத் தூண்டுவது.
'சிந்திப்பதால் எதையும் தாங்கும் மன வலிமை கூடும்; நினைவாற்றல் மழுங்காமலிருக்கும்' என்பதை நீங்கள் ஏற்பவர் என்றால் தொடர்ந்து வாசிக்கலாம்.
சிறிது நேரம் வயிற்றுப்பாட்டையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அகன்று அடர்ந்து விரிந்து பரந்து கிடக்கும் பிரமாண்ட அண்டவெளியையும், அங்கே வகை வகையான வடிவங்களில் சுற்றித் திரியும் வித விதமான கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும், அவ்வப்போது அவை நிகழ்த்தும் மாயாஜாலங்களையும் கண்டு கண்டு, கற்பனையை வளரவிட்டு மகிழாதவர் எவருமிலர் எனலாம்.
அனைத்தையும் ரசித்து இன்புறுவதோடு நில்லாமல்.....
இவை அனைத்திற்கும் மூலமாக இருப்பது எது, அல்லது எவை, அல்லது எவர், அல்லது எவரெல்லாம்? இவை படைக்கப்பட்டதன் நோக்கம், அல்லது படைக்கப்படாமலே ‘என்றென்றும் இருந்துகொண்டே இருப்பதற்கு’ உண்டான அடிப்படை, அல்லது என்றேனும் ஒரு நாள் இவை அனைத்தும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு குறித்தெல்லாம் நாம் எல்லோருமே சிந்தித்திருக்கிறோம்; நம் முன்னோர்கள் சிந்தித்து அறிவித்த முடிவுகளை மனதில் கொண்டு தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அனைவரும் ஏற்கத்தக்க ‘முடிவு’ மட்டும் எட்டப்படவில்லை.
இந்நிலையில்.....
விண்வெளியில் மறைந்திருக்கும் அல்லது புதைந்து கிடக்கும் ஒரு ‘புதிர்’ அல்லது ‘மர்மம்’ குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கு, உங்கள் அனைவரையும் தூண்ட வேண்டும் என்னும் பேரார்வம் காரணமாக, உங்கள் முன்னால் சில கேள்விகளைச் சமர்ப்பிக்கிறேன்.
கேள்வி ஒன்று:
விஞ்ஞான ரீதியாக, பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பார்கள். கணிப்புக்கு அப்பாற்பட்டு, காலங்காலமாக, எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாமல், எல்லை கடந்த நிலையில் அகன்று விரிந்து பரந்து கிடக்கிற பிரபஞ்சத்தில், 'அது விரிவடைந்துகொண்டே போகிற ஒரு நிலை’ உருவாக வாய்ப்பே இல்லை என்று சொன்னால், அது ஒரு நாள் மெய்ப்பிக்கப்படுகிற ’உண்மை’யாகவும் இருக்கலாம்.
இதே போல, இருக்கிற ஒரு பிரபஞ்சமே எல்லை காண இயலாத பெரும் புதிராக இருக்கையில், 'பிரபஞ்சங்கள் பல’ உள்ளன என்று சொல்வதும் ஏற்கத்தக்க ’உண்மை’ அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்த அடிப்படைகளை எல்லாம் சொல்லி, உங்களை நான் தயார் செய்வதன் நோக்கமே அண்ட வெளியில் மறைந்து கிடக்கும் புதிரைக் கண்டறியத்தான்; மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்காகத்தான்.
இனியும் உங்கள் பொறுமையைச் சோதிப்பது அழகல்ல.
வாருங்கள் அந்த மர்ம முடிச்சைத் தேடுவோம்.
முதலில், அதற்கான சூழ்நிலை அமைவது அவசியம்.
தனி அறையில், தனிமையில் கதவை அடைத்துப் படுத்துவிடுங்கள்.
உங்கள் சிந்தனையை அண்டவெளிப் பரப்பில் உலவ விடுங்கள்[இச்செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று எண்ண வேண்டாம்].
நாம் அறிந்த சூரியன், அதைச் சுற்றிவரும் கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் என அனைத்தையும் அகற்றுங்கள்[கற்பனையில்தான். கற்பனைகள் உண்மைகளைக் கண்டறியக் காரணமாவது உண்டுதானே?].
எண்ணற்ற சூரியக் குடும்பங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் இல்லாமல் செய்யுங்கள்.
பிரபஞ்ச வெளியின் ஒரு புறத்தில், பல கோடி மைல் பரப்பளவில் பெரும் பாறைத் திட்டுகள் இருக்கலாம். அவற்றையும் மறைந்துபோகச் செய்யுங்கள்.
இன்னொரு பெரும் பரப்பு நெருப்புக் கோளமாகவும், மற்றொரு பிரமாண்ட வெளிப் பரப்பு வெள்ளக் காடாகவும் இருக்கக்கூடும். மேலும் ஓர் அண்டவெளிப் பரப்பில், மனதை மயக்கும் மாயாஜாலங்கள் நிகழ்ந்து கொண்டிருத்தலும் சாத்தியம். இப்படி இன்னும் நம்மால் அறியப்படாத எதுவெல்லாமோ எங்கெல்லாமோ இருக்கவே செய்யலாம். எந்த ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நீங்கள் அகற்றிவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள். அணுக்களையும் விட்டுவைக்காதீர்கள்.
உங்கள் செயல்பாட்டால், விண்வெளியில், காற்று வெளிச்சம் உட்படப் பஞ்சபூதங்களால் [பூதம்?... ’மூலக்கூறு’ என்று வைத்துக் கொள்வோம்] ஆன எதுவுமே இல்லை என்றாகிறது.
இப்போது, உங்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையை அண்டவெளியில் உலவ விடுங்கள்.
வெளியில் இப்போது எஞ்சியிருப்பது எது? எது? எது?
இருள்?
அதுவும் அகற்றப்படுகிறது.
இனி, இனம் புரியாத ‘ஏதோ’ ஒருவித வண்ணம் அல்லது ‘ஏதோ ஒன்று’ மிஞ்சியிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். சலிக்காதீர்கள் அதையும் அகற்றுங்கள்.
சிந்தனையாளர்களே, ஆழ்ந்த சிந்தனையின் வசப்பட்ட உங்களிடம் நான் முன்வைக்கும் முதல் கேள்வி.....
எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளி, அதாவது, விண்வெளி இப்போது எப்படி இருக்கும்?
ஒளி, ஒலி என்று எதுவும் இல்லாத, பருப்பொருள் நுண்பொருள், அணுக்கள் என்று எப்பொருளும் இல்லாத ‘வெளி’ எப்படியிருக்கும்?
இப்படி எதுவுமே இல்லாமல் ‘வெளி’ என்று ஒன்று இருப்பது சாத்தியமா? ‘வெளி’ என்னும் மூலக்கூறே இல்லை என்று ஆகிறதே? பஞ்ச பூதங்களில் ஒன்று அடிபடுகிறது அல்லவா?
சாத்தியமே என்றால், மனித அறிவால் அதை உணர்ந்து அறிந்து, பிறர் அறிய விளக்கிச் சொல்வது இயலக்கூடிய ஒன்றா?
“ஆம்” என்றால், எப்போது?
“தெரியாது” என்றால், இந்தப் ‘புதிர்’ பற்றிச் சிந்திக்கிற மனிதனால், இதை விடுவிக்க இயலாத நிலை நீடிப்பது ஏன்? ஏன்? ஏன்?
“இல்லை” என்றால், மனித அறிவுக்கு எட்டாத ஒரு ’மர்மத்தை’ அண்ட வெளியில் மறைத்து வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டுவது எது? அல்லது எவை? அல்லது எவர்? அல்லது எவரெல்லாம்?
கேள்வி இரண்டு:
பாமரன் முதன் பகுத்தறிவாளன்[ஆத்திகரோ நாத்திகரோ]வரை, “ஏன்?” என்று கேள்விகள் எழுப்பி, விடை தேடி அலையாதவர் எவருமிலர். அவரவர் வாழும் சூழலைப் பொருத்து, அமையும் வசதிகளைப் பொருத்து எழும் கேள்விகளின் எண்ணிக்கை கூடலாம்; குறையலாம்.
இன்ப நினைவுகளில் திளைக்கும் தருணங்களைவிடவும், துன்பங்களில் சிக்கிச் சீரழிந்து மூச்சுத் திணறும்போது நாம் எழுப்பும் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும்.
விடைகளை எளிதில் கண்டுவிடுவதற்கான கேள்விகள் மிக மிகக் குறைவு. எத்தனை தேடியும் விடைகளே கிடைக்காத கேள்விகளின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம்.
முக்கியத்துவம் இல்லாத கேள்விகளுக்கு விடை தெரியாமல் போவதால் நாம் பாதிக்கப் படுவதில்லை; இழப்பேதுமில்லை. ஆனால், மிகச் சில கேள்விகள் ஆயினும், விடை தெரிந்தே ஆக வேண்டிய அவற்றிற்கு விடைகளைக் கண்டறிய இயலாதபோது நாம் நிலைகுலைந்து போகிறோம்.
கணிப்புக்கும் கணக்கீடுகளுக்கும் கட்டுப்படாத நீ..... நீ.....நீ.....ண்ட, நெடு ஆயுள் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் இந்த உலகத்தில் வாழும் வாய்ப்பு நமக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. பிரபஞ்சத்தின் தொடக்க நாள் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், அந்த நாள் முதல் இந்த நாள் வரை, நாம் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்? நாம் எங்கேயும் என்னவாகவும் இருந்திடவில்லையா?
விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று என்பது நமக்குத் தெரியும். இந்த இயலாமைக்காக நாம் கவலைப் படுவதும் இல்லை. ஆனால்.....
மரணத்திற்குப் பிறகு என்னவாகப் போகிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலை வரும்போது, அதை எண்ணி மனம் வருந்துகிறது; கிடந்து தவிக்கிறது.
‘ஆன்மாவோ, உயிரோ, வேறு எதுவோ, ஏதோ ஒன்று நம் உடம்பில் இடம் கொண்டிருப்பது உண்மை என நம்பினால், நாம் செத்துத்தொலைத்த பிறகு, அதன் கதி என்ன? எங்கெல்லாம் அலைந்து திரியும்? எதில் எதிலெல்லாம் அடைக்கலம் புகுந்து அல்லல்படும்? இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?’ என்று பலவாறு சிந்தித்துக் குழம்பி, தெளிவு பெற வழியின்றி மனம் பாடாய்ப்படுவது உண்மை.
’உடம்பில் ஆன்மா, ஆவி, உயிர் என்று எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. மண்டைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் ‘மூளை’யே எல்லாம்’ என்னும் முடிவுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டால்.....
உடம்போடு சேர்த்து இந்த மூளையும் அழிந்த பிறகு[மரணத்திற்குப் பின்] நாம் முற்றிலும் இல்லாமல் போகிறோம். ஆனால், இடைவிடாத மாற்றங்களைச் சந்தித்தாலும், பிரபஞ்சமும் பொருள்களும் இயக்கங்களும் இருந்துகொண்டே இருக்குமே. நாம் மட்டும் இனி எப்போதுமே திரும்பி வரப்போவதில்லை என எண்ணும்போது நம் நெஞ்சு வேதனையில் சிக்குண்டு தவியாய்த் தவிப்பது உண்மைதானே?
சிந்திக்க வைக்கும் ஆறாவது அறிவு நமக்குத் தரப்படாமல், மற்ற உயிரினங்களைப் போல, வாழ்ந்து முடித்தோ முடிக்காமலோ செத்தொழியும்படிப் படைக்கப்பட்டிருக்கலாமே?
அவ்வாறின்றி, அல்லலுற்றுத் தவிக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கிய அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான் மனம் போனபடியெல்லாம் ஏசுகிறேன்; நினைத்த போதெல்லாம் திட்டித் தீர்க்கிறேன்.
சிந்தனையாளர்களே,
உங்களுடைய எதிர்வினை என்ன?
கேள்வி மூன்று:
மேற்கண்டன போல, நமக்கு விடை தெரியாத கேள்விகள் எத்தனை எத்தனையோ உள்ளன.
தெரியாவிட்டால் போகிறது என்ற அலட்சியப் போக்குடன் நம்மால் அமைதியுடன் காலம் கடத்த முடிகிறதா?
இல்லைதானே?
“ஏன்? ஏன்? ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுக்கும் திறனுடன் படைக்கப் பட்டிடுக்கிறோம் நாம். ஆனால், எத்தனை சிந்தித்தாலும் சில உயிர்நாடிக் கேள்விகளுக்கு நம்மால் விடை காணவே முடியாது என்ற ’புரிதல்’ நமக்கு இருக்கிறது.
கேள்விகள் எழுப்புவதற்கான ‘அறிவு’ இருந்தும், ‘விடை காணும் திறன்’ இல்லாத ஓர் அவல நிலைக்கு நம்மை ஆளாக்கிய அந்த அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான் நிந்தித்துக்கொண்டே இருக்கிறேன்; மனத்தளவில் அவ்வப்போது கடின வார்த்தைகளால் சாடிக்கொண்டே இருக்கிறேன்.
நீங்கள்?
*** புதுப்பிக்கப்பட்ட பழைய பதிவு