இஸ்ரேல் நாட்டில் கட்டுமான வேலை பார்ப்பதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஹரியானாவில் நடந்தது. இதில், கலந்துகொண்ட இளைஞர்கள், "இந்தியாவில் பட்டினியால் சாவதைவிடப் போரில் சாவது மேலானது" என்று கூறியுள்ளனர்[tamil.oneindia].
ஹரியானாவில் அரசு சார்பில் நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஹரியானவில் உள்ள மஹரிஷி தயானந்த் பல்ககைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் ‘மாஸ்டர் டிகிரி’வரை முடித்த இளைஞர்கள் அணிவகுத்து நின்றனர்.
வேலை தேடி வந்திருந்த ஜிதேந்தர் சிங்[வரலாறு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்], "ஹரியானாவில் வேலை வாய்ப்பு மோசமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்தததுதான். இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்புடன் அந்த அரசு போர் நடத்துகிறது. இதனால் உள்ள அச்சுறுத்தல் பற்றி நான் நன்கு அறிவேன். இருந்தாலும், பட்டினியால் இங்கு சாவதைவிட இஸ்ரேலில் வேலை செய்துகொண்டு சாவது எவ்வளவே மேல் என்று நினைக்கிறேன்" என்றார்.
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்திலிருந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக வந்த மனிஷ் குமார் என்ற இளைஞர் கூறுகையில், "இஸ்ரேலில் கட்டுமான பணியில் ஈடுபடும் வேலைக்காக என்னை எனது ஏஜெண்ட் இங்கு அனுப்பினார். அவர் 1.5 லட்சம் பெற்றுக்கொண்டார்” என்றார்.
மேற்குறிப்பிடப்பட்ட ஹரியானா, ராஜஸ்தான் இளைஞர்கள் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதிலும் உள்ள பல இளைஞர்களின் நிலை இதுதான்.
மெத்தப் படித்தவர்கள் என்றில்லை, படிக்காதவர்களும் படிக்க வசதி இல்லாதவர்களும்கூட, தென் இந்தியா நோக்கி[குறிப்பாக, தமிழ்நாடு] கூட்டம் கூட்டமாக வேலை தேடி வருவது[கட்டுமானம், உணவு விடுதி, சாலை அமைத்தல் போன்றவற்றில்] இங்குள்ளவர்களை மிரள வைப்பதாக உள்ளது.
வறுமை, நோய், இன மோதல்கள் என்று எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன; நிறைவேற்றப்படுதற்குரிய நாட்டு நலப்பணிகளின் பட்டியல் மிக நீளமானது.
இவற்றில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஸ்ரீராமன் புகழ் பாடுவதிலும், பக்தி நெறி பரப்புவதிலும், நாட்கணக்கில் விரதம் இருப்பதிலும் தன் நேரத்தில் பெரும் பகுதியைச் செலவிடுகிறார் நம் பிரதமர்; புனிதப் பயணங்களும் மேற்கொள்கிறார்.
எதிர்க் கட்சிக்காரர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று எவரும் ராமனுக்குக் கோயில் கட்டுவதை எதிர்க்காத நிலையில், மேற்கண்ட, அவசியமில்லாத துரித நடவடிக்கைகளின் மூலம், தன்னை ஆகச் சிறந்த ஸ்ரீராம பக்தராக உலகறியச் செய்வதில் மோடி காட்டும் வேகம் பிரமிக்க வைக்கிறது; கவலையில் ஆழ்த்துகிறது.
இவர் இந்தியா என்னும் நாட்டின் பிரதமரா, இந்துமதத்தின் முழு நேரப் பாதுகாப்பாளரா[கோயில் பணியை இந்து அமைப்புகள் மட்டுமே மேற்கொண்டிருத்தல் வேண்டும். மோடி தலையீடு மிகத் தவறானது] என்று சந்தேகம் கொள்ளவைக்கிறது.
வேலை தேடி அலையும் இளைஞர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி காப்பாற்றுவாராக!