சனி, 3 பிப்ரவரி, 2024

பிரமிப்பூட்டும் பிரபஞ்சம்! மருட்டும் விஞ்ஞானிகள்!!

புரிந்தோ புரியாமலோ ஊடகக்காரர்களும், வலையுலக எழுத்தாளர்களும் அவ்வப்போது ‘பிரபஞ்சம்’ என்னும் சொல்லைக் கையாளுகிறார்கள்[பிரபல முன்னணி வலைப்பதிவாளனாகிய நான் உட்பட. ஹி... ஹி... ஹி!!!]. 

பிரபஞ்சம் என்றால் என்ன?

உலகின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வு நிறுவனம் ‘நாசா’[National Aeronautics and Space Administration>தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்] தரும் விளக்கம் பெரிதும் மனநிறைவைத் தரக்கூடும்.

பிரபஞ்சத்தைக் காட்டிலும், ‘விண்வெளி’ என்பது மிக எளிதாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று

பொருள், ஆற்றல், நேரம்[விரிவான ஆய்வுக்கு உட்பட்டது] போன்றவற்றை உள்ளடக்கிய இடத்தைத்தான் விண்வெளி என்கிறார்கள்.

விண்வெளியில்.....

சூரியன் போன்ற ஏராள நட்சத்திரங்கள்[பில்லியன் கணக்கில்] இயங்கிக்கொண்டிருக்கின்றன. 

பூமியும் சந்திரனும் இவை போன்ற கோள்களும்[சிறியது, பெரியது என்று வேறு வேறு வடிவங்களில்] சூரியனைச் சுற்றிவருகின்றன. பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்களைச் சுற்றிவருவதற்கான கோள்களை[கிரகங்கள்]க் கொண்டுள்ளன.

இந்த விண்வெளியில், பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் ஒன்றாகச் சேர்ந்து காட்சியளிக்கும் திரட்சியைப் ‘பால்வீதி’என்கிறார்கள்.

கருந்துளை என்று சொல்லி விஞ்ஞானிகள் நம்மைப் பயமுறுத்துகிறார்களே, அந்தக் கருந்துளைகள் இடம்கொண்டிருப்பது பால்வீதிகளுக்கு இடையில்தான்.

விண்வெளியில்.....

நட்சத்திரங்களை உருவாக்குகிற ‘தொழிற்சாலைகள்[மில்லியன் கணக்கான ஆண்டுகள் செயல்படுபவை] இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறான, பெரிய பெரிய தொழிற்சாலைகளில் நெபுலா W51[இதைப் புரிந்துகொள்ளவாவது அடுத்த பிறவியில் நாம் விஞ்ஞானிகளாகப் பிறக்க வேண்டும்] என்பதும் ஒன்று.

இந்த நட்சத்திரங்கள் ஒரு காலக்கட்டத்தில் வெடித்துச் சிதறுகிற நிகழ்வுகளும் இங்கே இடம்பெறுவதுண்டு. வெடித்துச் சிதறிக்கிடக்கும் கோலம்[?] ‘சூப்பர் நோவா’ எனப்படும்.

மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கிய அண்டவெளியைத்தான் ‘பிரபஞ்சம்’ என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

இது சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் அடித்துவிட்டிருக்கிறார்கள் அவர்கள்.

இந்த ஆண்டுக் கணக்கை அவர்களால் எப்படி அளவிட முடிந்தது?

அவர்கள் சொல்கிற 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில்[பிரபஞ்சவெளி] எதுவுமே இல்லையா?

எதுவுமே இல்லாத ஒரு நிலையை[வெறுமை] அனுமானிப்பது, அல்லது உணர்வது சாத்தியமானதா?

பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். 

இவர்களின் கூற்றுப்படி, விரிவடையும் பிரபஞ்சத்திற்கு விளிம்பு அல்லது எல்லை என்று ஒன்று இருந்தாக வேண்டும்.

இருப்பதாகக் கொண்டால்.....

பிரபஞ்சத்தின் எல்லைக்கு, அல்லது விளிம்புக்கு அப்பால் இருப்பதும் அண்டவெளிதானே[வெறுமையான!]? 

எல்லை காண இயலாத அளவுக்கு விரிந்து பரந்து கிடக்கிற அந்த அண்டவெளியையும்[அங்கும் மேற்கண்டவை போன்ற பொருள்களும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கலாம்] உள்ளடக்கியதுதானே பிரபஞ்சம்?

“ஆம்” என்றால், பிரபஞ்சம் எல்லை ஏதுமின்றி விரிந்து பரந்து கிடக்கிறது என்று சொல்லாமல், பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது என்று சொல்வது சரியா?[தற்போதைய அவதானிப்புகள் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் என்றென்றும் தொடரும் என்று கூறுகின்றன. https://en.wikipedia.org/wiki/Future_of_an_expanding_universe].

சரியோ தவறோ, அரைகுறை விஞ்ஞான அறிவுகூட இல்லாத ஒரு சாமானியன் இப்படியொரு கேள்வியை முன்வைப்பது சரியா?

அதற்கான பதில்.....

“ஆசை[பற்றி]யால் அறையலுற்றேன்” என்று தமிழில் ராமாயணம் படைத்த கம்பனின் வாய்மொழிதான்!

கம்பன்:

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 

                                          *   *   *   *   *

https://exoplanets.nasa.gov/what-is-an-exoplanet/what-is-the-universe/